பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயில்

பிள்ளையார்பட்டி விநாயகர் பற்றியும் நகரத்தார் சமூக வரலாற்று பற்றியும் முனைவர் வள்ளி வழங்கும் விளக்கம்: ஒலிப்பதிவு - பகுதி 1

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி. இந்த சிற்றூர் காரைக்குடியிலிருந்து 12 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. பிள்ளையார்பட்டி என்னும் இச்சிற்றூரின் சிறப்புக்குக் காரணம் பிள்ளையார்பட்டி கோயில்.



இரண்டு பெரிய ராஜ கோபுரங்களுடன் இந்தக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் கோபுரங்களைத் தரிசித்தவாறு வரும் பக்தர்களை முதலில் வரவேற்பது கோயில் திருக்குளம். கோயிலின் வலது புறத்தில் நகரத்தார் விடுதி அமைந்திருக்கின்றது. இங்கே தினம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தப் பிள்ளையார் பட்டி கோயிலில் அமைந்துள்ள பிள்ளையாருக்கான குடைவரைக் கோயில் முற்காலப் பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தது. மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட இக்குடைவரைக் கோயில் காண்போரை வியக்கவைக்கும் தன்மைக் கொண்டது. முன்னர் சிவனை ப்ரதானமாக வைத்துக் கட்டப்பட்ட கோயிலாக இருந்து பின்னர் பிள்ளையார் வழிபாடு பிரசித்தி பெற்று வளர்ந்திருக்கின்றது. இக்குடைவரைக் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பிள்ளையார் திரூருவச் சிலை புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. ஆறு அடி உயரம் கொண்டது இப்புடைப்புச் சிற்பம்.
படம்: நன்றி: http://www.visvacomplex.com/Valampuri_2.html

முன்னர் பிள்ளையார்பட்டியைச் சுற்றியுள்ள ஊரின் பெயர் மருதங்குடி என அழைக்கப்பட்டுள்ளது. 12ம் நூற்றாண்டு வாக்கில் பிற்கால பாண்டியர்களிடமிருந்து இங்கிருந்த நகரத்தார் சமூகத்தினர் இந்த மருதங்குடி என்னும் ஊரை விலைக்கு வாங்கியிருக்கின்றனர். இச்செய்தியைக் குறிப்பிடும் சான்றாக ஒரு கல்வெட்டு இந்தக் கோயிலிலேயே செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. குலசேகர பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனிடமிருந்து நகரத்தார் சமூகத்தினர் இந்தகரை வாங்கி இங்கிருக்கும் கோயிலையும் தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டுள்ளனர்.

பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில் அமைந்துள்ள பிள்ளையார் புடைப்புச் சிற்பம் மிகப் பழமையான ஒரு பிள்ளையார் வடிவம் எனக் கொள்ளலாம். 5ம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டச் சிலையாக இருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றார் முனைவர்.வள்ளி. இக்குடைவரைக் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு இக்கோயில் 5ம் நூற்றாண்டினதாக இருக்கும் சாத்தியத்தை உறுதி செய்வதாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பிள்ளையார் ஆலயங்களிலேயே மிகப்பழமையான பிள்ளையார் சிலையாக இந்தப் பிள்ளையார்பட்டி பிள்ளையார் சிலையைக் குறிப்பிடலாம்.

இந்த பிள்ளையார் சிலை இரண்டு கைகளுடன் இருப்பது போலவே அமைக்கப்பட்டுள்ளது. மிகப் பிரமாணடமான சிலை. குகையைக் குடைந்து கற்பாறைகளை வடித்து பிள்ளையார் உருவச் சிலையை வடித்திருக்கின்றனர் சிற்பிகள். இப்பிள்ளையார் கற்பக விநாயகர் என அழைக்கப்படுகின்றார்.







கோயில் தல விருட்சம் மருதமரம்





அன்புடன்



சுபா

0 comments:

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness