‘செவிக்குணவில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பது ஆன்றோர் வாக்கு. கிராமப்புறங்களில் இப்பழமொழி எங்கனம் பொருந்தும் என்று ஐயப்படும் வகையில் அங்கு நின்றால் பாட்டு, அமர்ந்தால் பாட்டு, பணி செய்யும்போழ்தும், உறங்கும்போழ்தும், உண்ணும் போழ்தும் என சதாசர்வ காலங்களும் இசையுடனேயே வாழ்கிறார்கள். ‘ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது’ என்பது மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையும் இதற்கொரு காரணம். அந்த வகையில் கும்மிப்பாடல் என்பது கிராமப்புற மக்களின் கொண்டாட்டங்களின் முக்கிய அங்கம் வகிப்பது. இது வெண்பாவின் வகையைச் சார்ந்தது. மகளிர் பலர் ஒன்றுகூடி கைகொட்டி விளையாடும் தருணங்களில் மகிழ்ந்து பாடுவதே கும்மிப் பாடல். இயற்கும்மி, ஒயிற் கும்மி, ஓரடிக் கும்மி என்பன கும்மியின் வகைகளாகும். குறிப்பாக பொங்கல் திருநாள் அன்று கிராமப்புறங்களில் இளம்பெண்கள் ஒன்று கூடி கும்மி கொட்டுவது வழக்கம். அதுவும் கொங்கு நாட்டு வட்டார மொழியில் கும்மிப்பாடல் கேட்பதென்றால் சுவைக்குச் சான்றும் வேண்டுமோ?
பாடல்களைப் பாடியுள்ளவர்கள் - திருமிகு ராதாமணி, திருமிகு. சீரங்காயி, நொச்சிக்காட்டுவலசு.