திரு.எஸ்.ராமச்சந்திரனின் சில சமூகவியல் கருத்துக்கள்


வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுகளுக்காக 2011ல் நான் தமிழகம் சென்றிருந்த போது திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்களுடன் செய்யப்பட்ட ஒரு பேட்டியின் இரண்டு பதிவுகள் இந்த மண்ணின் குரல் வெளியீட்டில் இடம்பெறுகின்றன. திரு.எஸ் ராமச்சந்திரன் அவர்கள் தொல்லியல், சமூகவியல், வரலாற்று ஆய்வாளர். இவரது மேலும் சில கட்டுரைகளும் ஒலிப்பதிவுகளும் முன்னரே நமது வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மேலும் இரண்டு பதிவுகள் தொடர்கின்றன.



பதிவு 1


  • நாட்டார் வழக்காற்றியல் என்பது சரியான பதமா?
  • செம்மொழி, செவ்வியல் என்பதன் பொருள் என்ன?
  • கொடுந்தமிழ் செந்தமிழ் இரண்டுக்குமான் சமூகவியல் விளக்கம்.
  • கிராமிய தெய்வங்களும் பெருந்தெய்வங்கள் எனக் குறிப்பிடப்படும் தெய்வங்களையும் வெவ்வேறு சமூகங்களுக்கு உரியன என சொல்லப்படுவது சரியா?
  • வேற்றியல் பொதிவியல் பற்றிய விளக்கம்.

இவற்றுடன் ராவணன் பற்றிய ஒரு சுவையான ஒரு குறிப்பையும் தருகின்றார்


பதிவு 2 


சமூகத்தில் அடிமைகள் - இது ஒரு கலவையான பதிவு.  திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் ஒப்பந்தக் கூலி, ஆப்பிரிக்காவில் ஒப்பந்தக் கூலிகளின் நிலை, காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க உரிமைப்போராட்டம், தில்லையாடி வள்ளியம்மை பற்றிய தகவல்கள் எனப் பகிர்ந்து கொள்கின்றார். தொடர்ந்து திருமதி.சீதாலட்சுமி தமது ஆஸ்திரேலிய பயண ஆய்வு அனுபவத்தில் அங்கு பெண்கள் சமூகத்தில் நிகழ்ந்த சில சமூக அவலங்களைப் பற்றி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார். இவர்களோடு திரு.நடேச நாடாரும் தனது கருத்துக்களை இடைக்கிடையே பகிர்ந்து கொள்கின்றார்.


பதிவு:சுபாஷினி ட்ரெம்மல்
பதிவுக்கான ஏற்பாடு:திருமதி.சீதாலட்சுமி
பதிவு செய்யப்பட்ட நாள்: 19.3.2011


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

ராஜபாளையம்: ராஜூக்கள் சரித்திரமும் பருத்தி உற்பத்தி தொழிலும்




வணக்கம்.

ராஜபாளையம் என்றால் நினைவுக்கு வருபர்கள் ராஜூக்கள் சமூகத்தினர்.; நினைவுக்கு வருவது பருத்தி வியாபாரம். இந்த ராஜூக்களைப் பற்றி தெரிந்து கொள்ள நான் மேற்கொண்ட முயற்சியில் எனக்கு உதவி செய்தவர் நமது அன்புக்குறிய சீத்தாம்மா (திருமதி. சீதாலட்சுமி) சென்ற ஆண்டு 2011 மார்ச் மாதம் நான் தமிழகம் சென்றிருந்த போது சரித்திர ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன் அவர்களைச் சந்தித்து ராஜூக்கள் சமூகத்தைப் பற்றியும் ராஜபாளையம் பருத்தி உற்பத்தி பற்றியும் கேட்டு அறிந்து கொண்டேன். அதனை ஒலிப்பதிவாக பதிவாக்கியுள்ளேன். இந்தப் பதிவில்


  • ராஜூக்கள் தெலுங்கு பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள்
  • இவர்கள் 400 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தமிழகத்துக்குப் பாளையக்காரர்களாக வந்தவர்கள்
  • விவசாயத்தில் முதலில் ஈடுபட்டாலும் பின்னர் பருத்தி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள்
  • இன்னமும் ராஜபாளையத்தில் சத்திரிய ராஜூக்கள் என்ற ஒரு குடியினர் இருக்கின்றனர்
  • இங்கே வலங்கை என்ற பெயரிலேயே ஒரு கோயில் இருக்கின்றது
என்பதோடு மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


இந்தப் பேட்டியின் போது எங்களுடன் எழுத்தாளர் மதுமிதாவும் உடன் வந்திருந்தார். திரு.நடேச நாடாரின் இல்லத்தில் இப்பேட்டியை நாங்கள் பதிவாக்கினோம்.திரு.ராமச்சந்திரன் விளக்கம் தர அவ்விளக்கங்களுக்கு மேலும் தகவலை வழங்கி இப் பேட்டிக்குச் சிற்ப்பு சேர்க்கின்றனர் மதுமிதாவும் சீதாம்மாவும். 



சுதந்திர போராட்ட காலகட்டத்தில் காந்தி ராட்டினத்தை அறிமுகப்படுத்திய போது ராஜபாளையத்து பருத்தியில் நெய்யப்பட்ட கதர் ஆடை சிறப்பானது என காந்திஜி சொன்னதாகவும் இப்பேட்டியில் மதுமிதா குறிப்பிடுகின்றார்


இப்பேட்டியில் பங்கு பெறுபவர்கள்: திருமதி. சீத்தாலட்சுமி, எழுத்தாளர் மதுமிதா, சுபா, திரு.நடேச நாடார்,திரு.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர்.






அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

ஈழத்துப்புலவரின் தமிழ்த்தாய் வாழ்த்து

புலவர் சிவநாதனின் தமிழ்மொழி வாழ்த்து!

சீருடைச் செந்தமிழ் மகள் வாழி! எம்
சிந்தையில் நிறைந்த அவள் வாழி
போருடைப் புறமும் அன்புடை யகமும்
போர்த்த பேரழகாள் புகழ் வாழி!

ஆரமாயியலோடு தேனிசை நாடகம்
அணிந்தவள் சங்கம் தனிலூறிச்
சாரமாய் வடிந்த காவியச் சோலையில்
களி நடம் பயின்றவள் பேர் வாழி!

ஏருடை நிலமுங் காருடை வளமும்
தாருடை அரசும் இல்லாமல்
பாரினில லையுந் தமிழரை யிணைத்தே
வீறுடைச் செல்வியாய் அவள் வாழி

இப்பாடலை இசை அமைத்துப் பாடியுள்ளார் இலண்டனைச் சேர்ந்த மாதினி ஸ்ரீஸ்கந்தராஜா.

பாடல் கேட்க!

தேர் அ(ரி)றிந்தோர்

தேரில் என்னென்ன சிற்பங்கள் உள்ளன?
எத்தனை அடுக்குகளாகச் சிற்பங்கள் உள்ளன?
காமம் பற்றிய சிற்பங்கள் ஏன் இடம் பெறுகின்றன?

கும்பகோணம் ஸ்தபதியார் திரு.இரா.பிரபாகரன் அவர்கள் தேரில் உள்ள சிற்பங்கள் குறித்து விளக்கம் அளித்த ஒலிப்பதிவை இணைத்துள்ளேன்.

பதிவைக் கேட்க!


காளைராசன்

உலோகச் சிலை செய்யும் முறை


கும்பகோணம் ஸ்தபதியார் இரா.பிரபாகர் அவர்கள் திருப்பூவணம் அருள்மிகு மின்னம்மைக்கான வெள்ளியங்கியைச் செய்து கொடுத்தார்.

வெள்ளியங்கியைப் பெற்றுக் கொண்டு, அவருடன், கடந்த பங்குனி மாதம் 20 ஆம் நாள் திங்கள் கிழமை (02/ஏப்ரல்/2012) அன்று மானாமதுரை வேதியாரேந்தல் விலக்கில் அமைந்துள்ள ஸ்ரீபஞ்சமுக ப்ரித்யங்கிரா தேவி கோயிலிலிருந்து திருப்பூவணத்திற்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.
அப்போது உலோகத்தினால் சிலைகள் செய்யும் முறைபற்றி அவரிடம் கேட்டு அறிந்து கொண்டேன்.

பதிவைக் கேட்க!

கி.காளைராசன்
kalairajan26@gmail.com

ஈரோடு கலைமகள் பள்ளிக்கூடத்தில் தொல்லியல் அருங்காட்சியகம்


புலவர் இராசு


கொடுமணல் ஆய்வு பற்றிய ஒரு அறிமுகத்துடன் இந்தப் பதிவு தொடங்குகின்றது.

கலைமகள் பள்ளியின் தண்ணீர் தேவைக்காக மணலைத் தோண்டிய போது ஒரு முதுமக்கள் தாழி கிடைத்திருக்கின்றது. தமிழக தொல்லியல் ஆய்வுகளிலேயே ஒரு புதுமையைப் படைத்த ஒரு கண்டுபிடிப்பாக இது கருதப்படுகின்றது. 2ம் நூற்றாண்டினைச் சார்ந்ததாக இந்த முதுமக்கள் தாழி பதிவு செய்யபப்ட்டிருக்கின்றது. பொதுவாக முதுமக்கள் தாழியில் இறந்தவர்களின் எறிக்கப்பட்ட உடலின் மிச்சங்கள் வைக்கப்பட்டு புதைக்கப்படுவது வழக்கம். இந்த பானைக்குள் இரண்டு எலும்புக்கூடுகள் வைக்கப்பட்டிருந்தது. ஒன்று ஒரு ஆணின் உடல் என்பதும் மற்றொன்று ஒரு பெண்ணின் உடல் என்பதும் ஆய்வில் கண்டு அறியப்பட்டது.

இந்த முதுமக்கள் தாழி கலைமகள் பள்ளிக்கூடத்தில் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றது.




ஒரு பள்ளியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைந்திருக்குமா என்றால் அதற்கு இந்தப் பள்ளிக்கூடம் சான்றாக மைந்திருக்கின்றது. கல்வெட்டுக்கள், சிற்பங்கள் என்பனவற்றோடு எலும்புக்கூடு உள்ளே வைக்கப்பட்ட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த முதுமக்கள் தாழி இந்தக் காட்சிப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிக்கூடத்தில் அகில இந்திய கல்வெட்டாய்வாளர்கள் கழகத்தினர் ஏற்பாட்டில் ஒரு கல்வெட்டு ஆய்வு மானாடு நடைபெற்றுள்ளது. இந்த மானாட்டை ஒட்டி ஒரு கல்வெட்டு ஆய்வு மலரும் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பு: இந்தப் பதிவினை புலவர் ராசுவின் இல்லத்திலிருந்து கலைமகள் பள்ளிக்கூடத்தில் அமைந்துள்ள தொல்பொருள் காட்சியகத்திற்குச் செல்லும் வழியில் பதிவு செய்தேன். வாகனத்தில் செல்லும் போதே பதிவு செய்ப்பட்ட ஒரு ஒலிப்பதிவு.

ஒலிப்பதிவினைக் கேட்க!அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

குன்றக்குடி ஆதீனத்தில்

வணக்கம்,

மார்ச் மாத மண்ணின் குரல் பதிவுகளில் இன்று மேலும் ஒரு பதிவு இணைகின்றது.

குன்றக்குடி அடிகளாரை சந்தித்தபோது பதிவு செய்த அவருடைய பேட்டி ஒன்றினை ஜனவரி மாதம் வெளியீட்டில் இணைத்திருந்தேன். அதன் தொடர்ச்சி இம்மாதமும் தொடர்கின்றது. இறுதிப் பகுதி இது.

இப்பதிவில்

-குன்றக்குடி மடம் 1990க்கு முன்னர் தெய்வீகப் பேரவை, அருள் நெறித் திருகூட்டம் எனும் அமைப்புக்களை உருவாக்கி திருமுறை திருவாசகம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி செய்தது.
-இதற்குப் பிறகு காரைக்குடியில் அரசின் சில நிறுவன அமைப்புக்களையும் இணைத்துக் கொண்டு பொது மக்கள் பயன்படும் வகையில் ஆய்வு, தொழில், வேளாண்மை உற்பத்தி என்ற வகையில் சமூகப் பணிகளில் மடம் இறங்கியது
-சிவகங்கை மாவட்ட அளவில் குன்றக்குடி மடத்தின் வேளாண் அறிவியல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. ஏறக்குறைய 20 அமைப்புக்கள் பொதுமக்கள் உயர் கல்வி பெற்றிராத போதும் பல்வேறு தொழில்கல்வி கற்று வாழ்க்கையில் பொருளாதாரத்தில் முன்னேற வழிவகுத்துக் கொடுக்கின்றது.
-இயற்கை சூழல், கோயில் அமைப்புகள் பற்றியும், கோயிலைச் சுற்றியுள்ள மருதாபுரி குளம், வையாபுரி குளம் பற்றிய தகவல்கள்
-குளங்கள் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் மடத்தின் செயல்பாடுகள்
-தமிழ் வழிக் கல்வி
என்பது பற்றி குன்றக்குடி அடிகளார் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.

மேலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நண்பர்கள் முனைவர் வள்ளி, டாக்டர்.நா.கண்ணன், முனைவர்.காளைராசன், சுபா ட்ரெம்மல் ஆகியோர் அடிகளாருடனும் மடத்தின் புலவர் திரு.பாலகுரு அவர்களுடனும் நிகழ்த்திய பொதுவான ஒரு கலந்துரையாடலின் பதிவையும் இவ்வொலிப்பதிவில் கேட்கலாம்.




இப்பதிவைக் கேட்க

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

சேலத்துச் செம்மல் தமிழ்நாடன் - பேட்டி

தமிழ்நாடன்



-ஆசிரியர், கவிஞர், ஓவியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர்..
-சேலத்தில் அருங்காட்சியகம் அமைத்திட அடிப்படைப் பணிகள் நடத்திய சேலம் ஓவியர்-எழுத்தாளர் மன்றத்தின் செயலாளர் (1975)
-தமிழ்நாட்டு அரசின் வரலாற்று ஆவண ஆய்வுக் குழு மண்டல உறுப்பினர். அதன் சேலம் கிளை மாவட்ட ஆட்சியரைப் பதிப்பாளராகக் கொண்டு நடத்தும் வரலாற்று ஆவண செய்தி மடல் ஆசிரியர் (1985 - ).
-சேலம் ஆவணக் காப்பகம் அலுவலகம் வரக் காரணர்களில் ஒருவர்
-கொல்லிமலை ஓரிவிழா காலங்களில் நாமக்கல் மகளிர் கல்லூரியில் தமிழர் பண்பாட்டு வரலாற்று ஆய்வரங்குகள் நடத்தியவர் (1985, 1986)
-தமிழ்நாடு அரசு நடத்திய கண்காட்சியில் (சென்னை தீவுத்திடல்) சேலம் மாவட்டம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் (1985 - 90) முதற்பரிசு பெற உழைத்த வல்லுநர் குழுவினர்.
-வரலாற்று மூலங்கள் பாதுகாத்தல், அதைக் கற்பித்தல் என சிறப்புப் பயிற்சி பெற்றவர் (மைய அரசுப் பண்பாட்டுத் துறை). சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் கல்லூரி மாணவர்க்கு இத்தகு முகாம்கள் பல நடத்தியவர்.
-தொல்லியல் களப்பணியாளர், பன்னாட்டார் பட்டயம் எனும் செப்பேடு கண்டறிந்து பதிப்பித்தவர்
-கர்னல் ரீடு அறிக்கையை (கி.பி. 1800) முதன் முதலாக முழுவடிவத்தில் வெளியிட்டவர்.
-பாவேந்தரின் படைப்பான குமரகுருபரன் (1944) நாடகத்தைக் கண்டுபிடித்து முதன் முறையாக அச்சேற்றியவர் (2000).
-சேலத்தில் பரிதியார் உரையோடு திருக்குறள் சுவடி கண்டறிந்தவர்.
-தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகத்தை முழுதாக மறு அச்சு செய்தவர். (1995)
-கொங்கு மண்டலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வரங்குகள் நடத்திய கொங்கு ஆய்வகத்தின் பொதுச் செயலர் (1980 - ).
-கொங்கு ஆய்வகம் கல்லூரி மாணவர்க்கு நடத்திய முகாம்களில் பங்களித்த துறை வல்லுனர்.அதன் வெளியீடுகளின் தொகுப்பாளர், பதிப்பாளர். கொங்கு களஞ்சியம் பதிப்பாசிரியர் குழுவினர்.
-தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் விவேகானந்தா அறக் கட்டளைச் செயற்குழுவினர், அதன் பல்வேறு கருத்தரங்குகளின் முன்னவர்
-கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மைய ஆய்வர்.

அத்துடன்

-பழங்குடி மக்கள் ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டவர்
-புலவர் இராசு ஆவர்களுடன் இணைந்து பல அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுவர்
கொடுமணல் அகழ்வாய்வுப் பணியில் புலவர்.ராசுவுடன் இணைந்து பணியாற்றியவர்.
-சேலத்துச் செம்மல் தமிழ்நாடன் நடுவண் அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
-தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர்
-கவிஞர் சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது பெற்றவர்
-தனது மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்.

தமிழ்நாடன் எழுதிய வரலாற்று நூல்கள்:

-தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம் (1995, 97, 2010)
-வள்ளல் கந்தசாமிக் கவுண்டர் *பரமத்தி வேலூர்) (1995)
-பரமத்தி அப்பாவு (1800 இல் வெள்ளையரை எதிர்த்த வீரைன் வரலாறு)
-சேலம் : கலையும் இலக்கியமும் (1995)
-சேலம் திருமணி முத்தாறு (2006, 2010)
-கொங்கு நாட்டில் கும்பினி ஆட்சி, புதுமலர், ஈரோடு (2009)
-2000 yeas of Salem (1976)
-The Story of India Indra 1975
-அன்புள்ளம் அருணாசலம் 2005
-சேலம் மையப்புள்ளி 2010

தொகுத்த நூல்கள்
-South Indian Studies (1981)
-சேலம் மாவட்டம்: சில ஆய்வுகள், காவ்யா(1988)
-தருமபுரி மாவட்டம்:புதிய ஆய்வுகள், விவேகானந்தா (1996)
-தமிழ்னாட்டு மலைவாழ் பழங்குடி மக்கள் (1996)
-தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள் (1996)
-கொங்குக் களஞ்சியம், மெய்யப்பன் ( 2008)

மேலும் பல இலக்கிய, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு நூல்களும் எழுதியுள்ளார்.


இவரது ஒலிப்பதிவு பேட்டி !

களப்பிரர் காலம் பகுதி 4

courtesy: National Geographic
களப்பிரர் கால ஆய்வுத் தகவல்களை பதியும் ஒரு முயற்சி இது. இத்தொடரில் இதுவரை 5 ஒலிப்பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று மேலும் 2 பதிவுகளை வெளியிடுகின்றேன்.

பதிவு 6

இப்பதிவு தமிழ் நாட்டில் பௌத்த ஆலயங்கள் பற்றிய கள ஆய்வுத் தகவலைத் தருவதாக அமைகின்றது.

- தமிழ்நட்டில் தற்சமயம் எந்த முழுமையான பௌத்த கோயில்களும் இல்லை. பூம்புகாரில் நிகழ்த்திய தொல்லியல் துறையினரின் அகழ்வாய்வில் கிடைத்த ஒரு பௌத்த கோயில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- கோயில் மட்டுமன்றி பௌத்த சிற்பங்கள் இவ்வகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன. கடலில் மூழ்கிப்போன சிலைகளும் கிடைத்திருக்கின்றன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன. காஞ்சிபுரத்தில் இருந்த பல பௌத்த ஆலயங்களைப் பற்றி யுவான் சுவான் தனது குறிப்புக்களில் எழுதி வைத்திருக்கும் தகவல்களும் நமக்குக் கிடைக்கின்றன.
- சைவ சமயம் அப்பர் சம்பந்தர் காலத்தில் செழிக்கத் தொடங்கிய கால கட்டத்தில் பௌத்த சமண மதங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்க ஆரம்பித்தன.
மீண்டும் 12ம் 13ம் நூற்றாண்டில் பௌத்தம் எழுச்சி பெற்றதற்கானச் சான்றுகள் கிடைக்கின்றன.
- அப்பர் சம்பந்தர் காலத்தில் எழுச்சி கொண்டு வந்த சைவம் போல மீண்டும் வீரமிக்க ஒரு சைவம் தேவைப்பட்டது. பெரிய புராணத்தில் குறிப்பிடப்படும் 63 நாயன்மார்களில் பலர் மிகத் தீவிரமான சைவ பக்தர்கள். அவர்கள் பற்றிய குறிப்புகள்...
- காபாலிகம் வீர சைவம் ஆகியவற்றின் தாக்கம், அவற்றின் எழுச்சி தோன்றிய போது பௌத்த சமண கோயில்கள் அழிக்கப்பட்டு அங்கே சைவம் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது

பதிவு 7

இப்பதிவு மணிமேகலையின் காலம் மற்றும் இந்திரன் எனும் தெய்வம் பற்றியதாக அமைகின்றது

- சங்கம் மருவிய காலமான 6ம் நூற்றாண்டுக்கு முன்னர்
- கிபி.2ம் நூற்றாண்டு வாக்கிலேயே காஞ்சிபுரத்திலிருந்து வணிகர்கள் சீனா மற்றும் பிற கிழக்கிந்திய நாடுகளுக்குச் சென்றிருக்கின்றார்கள்
- காமகோட்டம் என்ற இடத்தில் பௌத்த சமய தெய்வமாகிய மணிமேகலா தெய்வத்திற்கு சோழ மண்ணன் கோயில் கட்டியிருக்கின்றார்
- மணிமேகலை அக்கால கட்டத்தில் கரூர் போன்ற பல இடங்களுக்குச் சென்று சமய தர்க்கங்கள் செய்து பௌத்தத்தை நிலை நிறுத்தியிருக்கின்றார்.
- மணிமேகலா தெய்வம் பற்றிய குறிப்புக்கள்
- மணிமேகலா கடல் தெய்வம்
- தனது மகளுக்கு கோவலன் மணிமேகலா எனப் பெயர் சூட்டுவதற்கான காரணம்
- பௌத்த கல்வெட்டுக்களில் அறச்சாலை எனும் சொற்பிரயோகம்.. தானங்கள், உணவுச் சாலைகள்
- சைவத்தில் உள்ள அன்னப்பூரணி எனும் தெய்வம்
- கல்வெட்டுக்கள் தரும் தகவல்கள்
- இந்திர வழிபாடும் பௌத்த சமயத்தில்
- இந்திரன் முக்கிய தெய்வமாக இருந்து பின்னர் முக்கியத்துவம் குறைதல்
- இந்திர விழா


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

களப்பிரர் காலம் - ஆய்வுத் தகவல்கள் - 3

தமிழ்நாடு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.பத்மாவதி வழங்கிய பேட்டியின் தொடர்ச்சி பகுதி 4ம் 5ம் இன்று வெளியிடப்படுகின்றன.

பதிவு 4

களப்பிர மன்னர்களை ஆட்சியிலிருந்து நீக்கி பாண்டிய மன்னனை மீண்டும் ஆட்சிப் பொருப்பில் அமர்த்துவது திடீரென்று நிகழ்ந்த ஒரு செயலாக இருக்க முடியாது. ஊர்த்தலைவர்கள், சமணர்கள் ஆகியோரது பெறும் ஆதரவு இம்மாற்றத்திற்கு ஆதாரமாக இருந்திருக்க வேண்டும். இதற்கு சான்றுகள் இருக்கின்றனவா என்ற வகையில் இந்தப் பேட்டி தொடங்குகின்றது.
களப்பிறர்கள் ஆட்சியைக் கைப்பற்ற துணையிருந்த கரவந்தபுரவாசிகளைப் பற்றிய குறிப்புக்கள் பரவலாகக் கிடைக்காமல், சமணப்பள்ளிகள் தொடர்பான தகவல்கள் அதிகமாகக் செப்பேட்டுச் சான்றுகளில் கிடைக்கின்றன. இதற்குக் காரணமென்ன என்று அலசி அதற்கான காரணங்களையும் இப்பதிவு வரிசைப்படுத்துகின்றது.

பதிவு 5

களப்பிறர்கள் பற்றிய ஆய்வுகள் சில ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமை பற்றியும் இவ்வாய்வுக்குத் தான் மேற்கொண்ட வழிமுறைகளைப் பற்றியும் விவரிக்கின்றார். இந்தப் பதிவு மிக வித்தியாசமான நோக்கில் பல்வேறு தகவல்களை வழங்குவதாக அமைந்துள்ளது.

குறிப்பாக
-பழமையான பெண் தெய்வ வழிபாடு
-இலக்கியங்களில் மங்கை என்ற தெய்வத்தைப் பற்றிய குறிப்புக்கள்
-மங்களம் என்ற ஊர் குறிப்புக்கள்
-கல்வெட்டுச் சான்றுகள்
-தாராதேவி எனப்படும் தெய்வம் பௌத்த வழிபாட்டு பெண் தெய்வம்.. மணிமேகலா தெய்வம்
-காம கோட்டம் என்ற சொற்குறிப்பிற்கான ஆரம்ப கால குறிப்புக்கள்..
-சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பல்வேறு வகையான கோட்டங்கள், ஊர்க்கோட்டம்..

இப்படி பல தகவல்களைப் பதிவதாக இந்தப் பதிவு அமைந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் பல இடங்களில் பௌத்த வழிபாட்டுச் சின்னங்களும் கோயில்களும் கிடைத்துள்ளன. காமகோட்டம் என்பது பௌத்த வழிபாட்டில் தாராதேவி எனப்படும் மணிமேகலா தெய்வத்துக்கான ஒரு வழிபாட்டுததலமாக இருந்திருக்க வேண்டும் என்று இப்பதிவு கூறுகின்றது.

சைவமும் வைஷ்ணவமும் வலிமைப் பெறத் தொடங்கும் போது ஏற்கனவே மக்கள் வழக்கத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த வழிபாடுகளை உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த தன்மையையும் இப்பேட்டி விளக்குகின்றது. அதுமட்டுமன்றி பல பெண் தெய்வக் கோயில்கள் சிவன் கோயில்களாக மாற்றப்பட்ட நிகழ்வுகளுக்கான சான்றுகளையும் கல்வெட்டுக்களிலிருந்து காண முடிகின்றது என்ற ஒரு செய்தியையும் இப்பதிவு விளக்குகின்றது.

கேட்டுப் பாருங்களேன்.


அன்புடன்
சுபா

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness