இழையெடுத்தல்



இழையெடுத்தல் என்னும் இந்த நோன்பு நகரத்தார் சமூக மக்களால் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படும் ஒரு சடங்கு. இந்த நோன்பை இலங்கையில் விநாயகர் சஷ்டி என்று குறிப்பிடுகின்றனர்.


இந்தப் பண்டிகையில் கருப்பட்டி பணியாரமும் ஆவாரம்பூவும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. 21 நாள் விரதம் இருந்து செய்கின்ற இந்த நாளில் 21 இழை எடுத்தல் என்பது முக்கியமாக கடைபிடிக்கப்படுகின்றது. இந்தப் பேட்டியில் இழை எடுத்தல் பற்றி டாக்டர்.வள்ளி விரிவாகக் குறிப்பிடுகின்றார்.

மரபு விக்கியில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.

ஒலிப்பதிவைக் கேட்க

இப்பேட்டியை ஏற்பாடு செய்து ஒலிப்பதிவினை அனுப்பி வைத்த டாக்டர்.காளைராசனுக்கு நன்றி.

தேவகோட்டை ஜமீன்


சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு எழில் நகரம் தேவகோட்டை. வரலாற்றை கேட்டு அறிந்து கொள்ளும் போது பாஸ்கர சேதுபதி அவர்கள் ராஜாவாக பதவி பெறுவதைத் தடுக்க பங்காளிகள் முயற்சித்த போது நடந்த  குழப்பத்தில் பாஸ்கர சேதுபதிக்கு உதவிய ஏ.எல்.ராமசாமி செட்டியார் அவர்களை தான் ராஜாவாக பொறுப்பேற்ற பின்னர் கௌரவித்து அவருக்கு ஏராளமான நிலங்களை வழங்கி தேவகோட்டை பகுதிக்கு அவரை ஜமீந்தாராக நியமனமும் செய்திருக்கின்றார்.



இவர் ஜமீந்தாராக ஆகிய பின்னர் செய்த ஆலாயத் திருப்பணிகள் பல. காளையார் கோயில் திருப்பணி, ராமேஸ்வர சத்திரம் மற்றும் கோயில் திருப்பணி, காளகஸ்தி கோயில் திருப்பணி, சாலை புதுப்பித்தல் எனப் பல சமூகப் பணிகளைச் செய்ததை நாம் மறக்க முடியாது.

தமிழ் மரபு அறக்கட்டளையினர் ஜனவரி 2012 காரைக்குடி பகுதிக்குச் சென்ற போது இன்றைய தேவகோட்டை ஜமீன் வாரிசான திரு.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு பெற்றோம்.


அவர் அளிக்கும் பேட்டியும் டாக்டர்.வள்ளி அவர்கள் அளிக்கும் பேட்டியும் மேலும் இந்த வரலாற்றை அழகுற நமக்கு விவரிக்கும்.

திரு.ராமகிருஷ்ணன்

டாக்டர்.வள்ளி

நன்றி: இந்த பேட்டிக்கான ஏற்பாட்டினைச் செய்த விசாகப்பட்டினம் திரு.திவாகருக்கு த.ம.அ வின் நன்றி.

படங்கள், ஒலிப்பதிவு, வீடியோ பதிவு: சுபா 

அன்புடன்
சுபா
(தமிழ் மரபு அறக்கட்டளை)

குன்றக்குடி ஞானியார் மலை சமணப்படுகை

குன்றக்குடி குடவரை கோயிலுக்கு அருகாமையிலேயே வடக்கு நோக்கிய பகுதியில் அமைந்துள்ள பாறைகள் உள்ள பகுதியில் சமணப்படுகைகள் உள்ள ஒரு குகை  உள்ளது. சற்றே குன்று போன்ற மலைப்பாங்கான பகுதி இது. இங்கே அமைந்துள்ள ஒரு குகையில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதொரு சமணப் பள்ளி இருந்ததற்கானச் சான்றுகள் உள்ளன. இப்பகுதி ஞானியார் மலை என பேச்சு வழக்கில் இன்று வழங்கப்படுகின்றது.




இந்தப் பாறைகளைக் கவனிக்கும் போது மிகக் கவனமாகவும் நேர்த்தியாகவும் செதுக்கப்பட்ட காடி எனும் பகுதியை மேற்புறத்தில் காண முடிகின்றது. காடி என்பது பாறைகளில் மழை நீர் விழும் போது அம்மழை நீர் நேராகக் குடைக்குள் சென்று விழாத வண்ணம் தடுக்கச் செய்யப்படும் ஒரு ஏற்பாடு. இப்படி செய்வதனால் மழை நீர் தெரித்து சாரல் உள்ளே இருப்பவர்களின் மேல் விழாத வண்ணம் தடுக்க முடிகின்றது. 

பாறைகளைச் செதுக்கவும் படுகைகளை ஏற்பாடு செய்யவும் ஏற்படும் செலவுகளை ஏற்றுக் கொண்டு இப்படுகைகளை அமைத்துக் கொடுத்தவர்களின் பெயர்களைப் பாறைகளிலேயே குறித்து வைப்பதும் வழக்கமாக இருந்திருக்கின்றது. இந்த ஞானியார் மலை பாறையிலும் இதனை அமைக்க உதவிய ஆதன் சாத்தன் என்பவரின் பெயர் தமிழ் பிராமி எழுத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்தின் வடிவத்தின் அடிப்படையில் இந்தப் பாறை கி.மு காலகட்டத்தில் அமைக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று டாக்டர்.வள்ளி குறிப்பிடுகின்றார். 


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]


வெட்டுடையார் ஐயனார் - வெட்டுடையார் காளி

வணக்கம்.



ஏறக்குறைய 450 ஆண்டு பழமை வாய்ந்த ஒரு கோயில்.
ஐயனார் கதை, வெட்டுடையார் ஐயனார் கோயில் தோன்றிய வரலாறு, வெட்டுடையார் காளி வரலாறு, சூலாட்டுப் பூசை என்னும் ஒரு வழக்கம் எனப்பல தகவல்கள் அடங்கிய ஒரு பதிவு. ஆலயத்தின் பரம்பரை ஸ்தானிகர் சீர்மிகு.கண.சந்திரன் தரும் விளக்கத்தை இப்பதிவில் வெளியிடுகின்றோம்.




எட்டுத் தலைமுறையாக பரம்பறையாக பூஜை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் வியப்பாக இருக்கின்றது. காவல் நிலையங்கள் இல்லாத காலத்தில் காளியே மக்களுக்கு காவல் தெய்வமாக  நீதி வழங்கும் தெய்வமாக மக்கள் கருதி வழிபட்டு வந்திருக்கின்றனர். இந்த வழக்கம் இன்னமும் தொடர்ந்து வருகின்றது.

இந்த மண்ணின் குரல் பதிவை  படங்களுடன் ஆலய விளக்கங்களுடனும் நமது வலைப்பக்கத்தில் இங்கே காணலாம்.

நன்றி: படங்கள், ஒலிப்பதிவு, விளக்கம் - முனைவர்.காளைராசன்

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

விஜயமங்கலம் சமண தீர்த்தங்கரர் சந்திரபிரபர் கோயில்

சமண சமயம் புகழ் பெற்று விளங்கிய நகரங்களில் கோவை மாவட்டமும் சிறப்பிடம் பெறுகின்றது. கோவையில் பெறுந்துறை நகருக்கு அருகில் உள்ள விஜயமங்கலத்தில் எட்டாவது சமண தீர்த்தங்கரர் சந்திரபிரபர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குத் தமிழ் நாடு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர் புலவர் ராசு அவர்களுடன் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் ஜனவரி 2012ம் ஆண்டு சென்றிருந்த போது செய்யப்பட்ட பதிவுகள் மண்ணின் குரல் வெளியீடுகளாகப் பதிப்பிக்கப்படுகின்றன.



இந்தப் பதிவுகள் புகைப்படங்களாகவும், மூன்று ஒலிப்பதிவு கோப்புக்களாகவும், இரண்டு வீடியோ விழியப் பதிவுகளாகவும் முழுமை பெறுகின்றன.

இந்தக்  கோயில் கற்பக்கிரகம்,  அர்த்தமண்டபம், மஹாமண்டபம், அடுத்து வாத்தியமண்டபம், நிருத்த மண்டபம்என்று ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது

கோயில் மண்டபத்தின் நான்கு புறங்களிலும் சிற்பங்கள் நிறைந்துள்ளன.

இங்கு வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ஸ்ரீ புராணத்தைத் தழுவிய சிற்பங்கள். இவ்வகைச் சிற்பங்கள் தமிழகத்தில் இரண்டே இடங்களில் மட்டும் இருப்பதாகக் குறிப்பிடுகின்றார் புலவர் ராசு. ஒன்று காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக் குன்றத்தில் உள்ள ஜிரகாஞ்சி என்ற கோயிலிலே ஓவிய வடிவில் இருப்பதாகவும் அடுத்ததாக இந்தக் கோயிலிலும் உள்ளன.

கருவறையில் மிகப் பெரிய சந்திரப்பிரப தீர்த்தங்கரர் உருவம் சுதையால் செய்யப்பட்டிருந்தது. அது சிதைந்து அழிந்தபின் அபிஷேகத்திற்கு வைத்திருந்த 30 செ.மீ உயரம் உள்ள சிறு சிலையை கருவறையில் தற்சமயம் வைத்துள்ளனர். அர்த்தமணடபத்தில் வர்த்தமான மகாவீரர் உருவச்சிலையை வைத்து வழிபடுகின்றனர்.மகாமண்டபத்தில் அரசண்ணா மலையிலிருந்து கொண்டு வந்த நேமிநாதர் இயக்கி ஷுஷ்மாண்டினி உருவங்கள் உள்ளன. வாத்தியமண்டபத்தில் சந்திரப்பிரப தீர்த்தங்கரரின் இயக்கியான சுவாலாமாலினி உருவச் சிலை சிறு அறையில் உள்ளது. வாத்திய மண்டபத்தில் ஆதிநாதர், கொங்குவேளிர், தமிழ்ப்புலவர்கள், பவணந்தி, சீயகங்கள்,கொங்கு வேளிரின் அடிமைமாது ஆகியோர் கற்சிலைகள் உள்ளன.

நிருத்தமண்டபத்தில் ஆதிநாதரின் தோற்றம் முதல் அவர் பரிநிர்வாணம் அடையும் வரை ஸ்ரீபுராணம் சிற்பத் தொகுதிகள் உள்ளன. கொங்கு வேளிர் பெருங்கதையை இயற்றியதைக் குறிக்கும் நாகரிக் கல்வெட்டு சேததப்படுத்தப்பட்டுவிட்டது. கருவரையில் சமவசரணம் ஓவியம் உள்ளது.


இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் பற்றிய செய்திகளை விளக்கும் உரையும் அடங்கும் தான் வாசித்து இன்னமும் தனக்கு நினைவில் இருக்கும் 7ம் நூற்றாண்டு வரலாற்றைக் கூறும் சில கல்வெட்டுக்கள் கோயில் புணரமைப்பின் போது சேதப் படுத்தப்பட்ட வருத்தம் தரும் செய்தியையும் கூறுகின்றார்.


பத்தாம் நூற்றாண்டு கங்கத் தளபதி சாமுண்டராயன் தங்கை புள்ளப்பை சல்லேகனை விரதமிருந்து உயிர் நீத்த சிற்பம் ஒரு தூணில் கல்வெட்டுடன் உள்ளது. 

இந்த ஆலயத்தில் கோமுக யட்ஷன், சக்கரேஸ்வரி ஆகியோரின் அழகிய சிற்பங்கள்  தீர்த்தங்கரர் சிலையைச் சுற்றி வடிக்கப்பட்டுள்ளன.
24 தீர்த்தங்கரர்கள் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் அமைக்கபப்ட்ட சிற்பங்கள் தமிழகத்தில் நான்கே இடங்களில் இருக்கின்றன. கழுகுமலை, திருநாதர் குன்று, காஞ்சிபுரம்,  அடுத்து இங்கே விஜயமங்கலம்.

கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டுக்களை வாசித்துக் காட்டும் பகுதி.


துணைக்குறிப்பு: ஈரோடு மாவட்ட வரலாறு - செ.இராசு.
புகைப்படங்கள், ஒலிப்பதிவு வீடியோ பதிவு: சுபா 
ஏற்பாடு உதவி: பவளசங்கரி, ஆரூரன், புலவர்.செ.இராசு.

இந்த மண்ணின் குரல் பதிவை இங்கே சென்று காணலாம்.


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

வெள்ளோடு ராசா கோயில்


வணக்கம்

தமிழகம் முழுமைக்குமே குலதெய்வ வழிபாடு என்பது இன்றளவும் முக்கிய அங்கம் வகிப்பதாக அமைந்திருக்கின்றது. குலதெய்வ வழிபாட்டில் பல வகை கடவுள்கள் இருபதைக் காண்கின்றோம். ராசா சாமிக் கோயில் என்பது ஈரோட்டுக்கு அருகில் வெள்ளோடு என்ற சிற்றூரில் இருக்கின்றது. புலவர் ராசு அவர்கள் குடும்பத்தினரின் குலதெய்வக் கோயில் இந்த ராசா கோயில்தான்.

தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் இந்த வருடம் ஜனவரி மாதம் ஈரோடு சென்றிருந்த சமயம் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுலா மேற்கொண்டு சில குறிப்பிட்ட இடங்களுக்குப் பயணித்தோம். அப்படி செல்கையில் எங்களுடன் உடன் வந்திருந்த புலவர்.ராசு அவர்கள் தனது குலதெய்வ கோயிலுக்கு எங்களை அழைத்துச் சென்று வழிபாடு செய்ய வைத்து அக்கோயில் பற்றியும் தன் வாழ்வில் இந்தக் குலதெய்வத்தின் தாக்கம பற்றியும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

புலவர் ராசு அவர்களின் இயற்பெயர் மயில்சாமி என்பது. இவருக்கு 3 வயதாக இருக்கும் போது ஜன்னி வந்து மிகுந்த சிரமப்பட்ட நிலையில் பெற்றோர்கள் இவர் இறந்து விட்டதாகவே கருதிவிட்டனர். உறவினர்களிடமெல்லாம் விவரம் தெரிவித்து குழந்தையை அடக்கம் செய்து விட முடிவாகிவிட்ட நிலையில் புதைப்பதற்கு குழியும் வெட்டி தயார் செய்து விட்டனர். புதைப்பதற்காக ஒரு தொட்டிலில் போட்டு சுடுகாட்டிற்குக் கொண்டு செல்லும் தருவாயில் உள்ளூரில் உள்ள ஒரு முடிதிருத்துவோர் குடும்பத்து பெண்மணி ஒருவர் அங்கு வந்து யாரும் வருந்த வேண்டாம் எனச் சொல்லி ஒரு கம்பியை பழுக்கக் காய்ச்சி உடலில் தீட்டியிருக்கின்றார். இந்தத் தழும்பு இன்னமும் அவர் உடலில் இருப்பதாகச் சொல்கின்றார். சூடு பட்டதும் இவர் திடீரென்று அழ ஆரம்பித்திருக்கின்றார். பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் பேரானந்தம். இந்தப் பெண்மணி எப்படி அங்கு வந்தார் என்பது ஆச்சயரியமாகப் பட பெற்றோரும்  கேட்க ராசா சாமி கனவில் வந்து சொன்னதாகவும் அதனால் இங்கே ஓடோடி வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். அதோடு ராசா சாமி தனது பெயரை இக்குழந்தைக்கு வைக்கச்சொன்னதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இதனால் மயில்சாமி ராசாவாக மாறி இப்போது முனவர் புலவர் ராசுவாக அழைக்கப்படுகின்றார்.

ராசா கோயிலின் பழயை கோயில் திருப்பணி இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பக்கத்திலேயே சுவாமியை இடம் மாற்றி வைத்து இத்திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் இப்பதிவில் புலவர் ராசு அவர்கள் இந்த குலதெய்வ சாமி பற்றிய கதையையும் விவரிக்கின்றார். கேட்டுப் பாருங்கள்.
















அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

கலைமகள் பள்ளி அருங்காட்சியகம்


ஈரோடு கலைமகள் பள்ளியில் கொடுமணல் ஆய்வின் போதும் மேலும் ஈரோட்டின் வேறு சில பகுதிகளிலும் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளின் போதும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், சிற்பங்கள் மிகச் சிறப்பாக காட்சி வைக்கப்பட்டுள்ளதோடு  பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

8.1.2012 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் நண்பர்களுடன் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து  இந்த அருங்காட்சிப் பொருட்களை பார்த்து புலவர் ராசு அவர்கள் வழங்கிய விளக்கத்தையும் பெற்றோம்.

கொடுமணல் ஆய்வு பற்றியும், கலைமகள் பள்ளி பற்றியும், புலவர் ராசு அவர்களின் ஆய்வுகள், முயற்சிகள் பற்றியும் அவர் விளக்கம் தரும் ஒரு ஒலிப்பதிவை முதலில் கேட்பது அறிமுகமாக அமையும்.

மண்ணின் குரல் வெளியீடு.
  
கலைமகள்  அருங்காட்சியகத்தில் வைக்கபப்ட்டுள்ள கல்வெட்டுக்கள், சிற்பங்கள் பற்றி புலவர் ராசு அவர்கள் விளக்கம் அளிக்கின்றார்.
  
 
புலவர் ராசு விளக்கம் அளிக்கின்றார். 

முழு பதிவையும் காண இங்கே செல்க.

அன்புடன் சுபா

ஔவையார்

ஔவையார் பற்றிய விளக்கம். வழங்குபவர் டாக்டர் வள்ளி.

பதிவு

நன்றி: ஒலிப்பதிவு செய்து வழங்கியவர்: முனைவர். காளைராசன்

தமிழக தொல்லியல் கழக 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு பதிவுகள் - 3



சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் 14-15 07.2012 அன்று நடைபெற்ற தமிழகத் தொல்லியல் கழகத்தின் 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் 23 ஆவது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது நடைபெற்ற உரை பதிவுகளின் இறுதிப் பகுதி மண்ணின் குரலில் இடம்பெறுகின்றன.

அமராவதி பள்ளத்தாக்கில் தொல்லியல் ஆய்வு
திரு.யத்தீஷ் குமார்

தமிழ் பேசும் மக்கள்
திரு.ராமநாதன்

இரு பொதிகளுடன் போரிடும் வீரன்
திரு.இரா.தமிழாதன்

விழுப்புரம் சிற்பங்கள்
திரு.வீரராகவன்

மன்னராட்சியில் மக்களாட்சி
திரு.பன்னீர்செல்வன்


நன்றி: ஒலிப்பதிவுகளை வழங்கியவர் முனைவர் காளைராசன்.

தமிழக தொல்லியல் கழக 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு பதிவுகள் - 2


சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் 14-15 07.2012 அன்று நடைபெற்ற தமிழகத் தொல்லியல் கழகத்தின் 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் 23 ஆவது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது நடைபெற்ற உரை பதிவுகளின் இரண்டாம் பகுதி மண்ணின் குரலில் இடம்பெறுகின்றன.

வடலூர் பகுதியில் கிடைத்த தொல்லியல் தடயங்கள்.
டாக்டர்.எஸ்.கண்ணன்

மதுரை மொட்டை கோபுரம் முனீஸ்வரர் கோயில் திருவாட்சி
யா.சந்திரா

துறையூர் சார்ஜா கல்வெட்டுக்கள்
எம்.பிரபாகரன், வேலூர்

பெருங்கற்கால மட்பாண்டக் குறியீடுகள்
இணைப்பேராசிரியர், கோயம்பத்தூர்


நன்றி: ஒலிப்பதிவுகளை வழங்கியவர் முனைவர் காளைராசன்.

தமிழக தொல்லியல் கழக 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு பதிவுகள் - 1



சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் 14-15 07.2012 அன்று நடைபெற்ற தமிழகத் தொல்லியல் கழகத்தின் 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் 23 ஆவது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது நடைபெற்ற உரைகளின் பதிவுகள் மண்ணின் குரலில் இடம்பெறுகின்றன.

இது பகுதி 1

1. டாக்டர் வள்ளி சொக்கலிங்கம் அவர்களின் அறிமுகம்

2. குன்றக்குடி ஆதீனகர்த்தர் பொன்னம்பல தேசிக சுவாமிகளின் உரை


  • ஆவணப்படுத்துதல் பற்றி.. 
  • வள்ளல் அழகப்பா செட்டியார் பற்றி 
  • தமிழர்கள் வாழத்தெரிந்தவர்கள், பிறரை வாழவைக்கவும் தெரிந்தவர்கள்.
  • நம் வரலாறு ஆலயங்களில் புதையுண்டு கிடைக்கின்றது. 
  • தேவியின் அம்பலம் என்ற குலம் பற்றிய செவி வழி செய்தி
  • வெட்டுவான் கோயில் சொல்லுகின்ற கதை 
  • ராஜராஜேச்சுரம்.. சிற்பியின் கதை.. 
  • காளையார் கோயில் - பெரிய மருது சின்ன மருது சகோதரர் பற்றிய செய்தி..
  • குப்பமுத்து ஆசாரி தேர் செய்த கதையும்..



3. திரு.இள.கணேசனின் நன்றியுரை


4. ஆந்திர கல்வெட்டு







நன்றி: படங்களும் சொற்பொழிவுகளின் ஒலிப்பதிவும் - முனைவர் காளைராசன்.

பெண்ணையாற்று நடுகற்கள்



நண்பர்களே,

கிருஷ்ணகிரி நகரில் பெண்ணையாற்றங்கரையோரத்து சாலைகளில் ஆங்காங்கே நடுகற்களைக் காணமுடிகின்றது. சில நல்ல நிலையில் வழிபாட்டுக்குத் தகுந்த நிலையில் பாதுகாக்கப்பட்டாலும் சில பாதுகாப்பாற்றும் புதர்கள் மண்டியும் மறைந்து இருக்கின்றன. த.ம.அ குழுவினர் கிருஷ்ணகிரி சென்றிருந்த போது உடன் வந்து அந்த நடுகற்கள் பற்றி விளக்கம் அளிக்கின்றார் திரு.சுகவனம் முருகன். படங்களையும் ஒலிப்பதிவையும் கான இங்கே செல்க!


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

பெண்ணேஸ்வரர் திருக்கோயில்


பெண்ணேஸ்வரர் திருக்கோயில்
பதிவு:05.03.2012
ஒலிப்பதிவு: சுபா 
படங்கள்: டாக்டர்.நா.கண்ணன், ப்ரகாஷ் சுகுமாரன், சுபா 


தமிழ் மரபு அறக்கட்டளையினர் கிருஷ்ணகிரி நகருக்குச் சென்றிருந்த போது பெண்ணேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அக்கோயிலின் பழம் பெருமைகளைப் பற்றி தொல்லியர் அறிஞர், ஆர்வளர் திரு.சுகவனம் முருகன் அவர்கள் கூறக்கேட்டு பதிவு செய்து வந்தனர். இப்பயணத்தில் கலந்து கொண்டவர்கள் : செல்வமுரளி, சக்தி, ப்ரகாஷ் சுகுமாரன், டாக்டர்.நாகண்ணன், சுபா ஆகியோர்.




மேலும் படங்களையும் அவற்றின் விளக்கங்களையும் பதிவுகளின் விளக்கங்களையும் காண தமிழ் மரபு அறக்கட்டயின் வரலாற்றுப் பகுதியில் இங்கே செல்க!

சொல்லோவியம்: கார்த்திகேசு சிவத்தம்பி




சமீபத்தில் மறைந்த யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆ.கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் பற்றிய மிக அரிய சேதிகளூடான ஓர் சொல்லோவியம். 

தயாரித்து அளிப்பவர் இளையதம்பி தயாநந்தா.

சொல்லோவியம் கேட்க!!

தூத்துக்குடி பவளப்பாறைகள்


தூத்துக்குடி நகரின் மத்தியில் அமைந்துள்ளது வ.உ.சி. கல்லூரி. இந்தக் கல்லூரியின் ஜியாலஜி துறை ஆய்வாளர்-விரிவுரையாளர் டாக்டர்.உதயனப் பிள்ளை அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக தூத்துக்குடி ராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள தீவுகள், பவளப் பாறைகள், முத்துக்குளித்துறை தொடர்பான பல விஷயங்களைப் பேட்டியில் பகிர்ந்து கொண்டார். பேட்டிகள் 4 பகுதிகளாக உள்ளன.

பேட்டி பதிவுகள்:11.3.2011
ஒலிப்பதிவும் படங்களும்: சுபா 
ஏற்பாடு உதவி: திரு.துரை.ந.உ.

பேட்டிகளைக் கேட்கவும் படங்களைப் பார்க்கவும் இங்கே செல்க!.

தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி


வணக்கம்.



தூத்துக்குடிக்கு 2011ம் ஆண்டில் நான் சென்றிருந்த போது வ.உ.சி. கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்தது. திரு. துரை அவர்களும் என்னுடன் வந்திருந்தார்கள். அச்சமயம் வ.உ.சிதம்பரம் அவர்களின் பெயரில் இயங்கி வரும் கல்லூரிக்குச் சென்றிருந்தோம். கல்லூரி முதல்வர் இக்கல்லூரியை விளக்கி அறிமுகம் செய்யும் ஒரு பேட்டியினைப் பதிவு செய்திருந்தேன். கல்லூரி முதல்வர் திரு.ப்ரான்ஸிஸ் அவர்கள் இப்பேட்டியை வழங்குகின்றார்கள்.



இப்பேட்டியில்

  • 1951ம் ஆண்டு வ.உ.சியின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட கல்லூரி.
  • வ.உ.சி. கல்விக்கழகம்
  • வ.உ.சி நினைவாக ஒரு மணி மண்டபம் கட்டலாம் என்று தொடங்கிய இத்திட்டம் பின்னர் சமூகத்திற்கு கல்விச் சேவை வழங்கும் வகையில் பயன்படும் வகையில் கல்லூரியாக ஏற்படுத்தப்பட்டது. 
  • வந்தே மாதரம் என்ற கோஷம் பொறிக்கப்பட்ட முகப்புடன் இக்கல்லூரி உள்ளது.
  • சமயச் சார்பின்மைக்கு வாழும் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது இக்கல்லூரி. இக்கல்லூரியை ஏற்படுத்தியவர்கள் தீவிர சைவ சமயத்தினராக இருந்தாலும் இக்கல்லூரியில் எங்குமே சமயச் சின்னங்கள் இல்லாமல் சமயச் சார்பின்மை இல்லாமல் கல்வியை மட்டுமே முன்னிலைப் படுத்தி ஏற்படுத்தப்படுத்தியுள்ளனர்.
  • கல்லூரியில் இயங்கி வரும் துறைகள் ஆய்வுகள் 
என சில தகவல்களை கல்லூரி முதல்வர் வழங்குகின்றார்.

பேட்டியைக் கேட்க!



குறிப்பு: பயணத்திற்கான உதவிகள் செய்த திரு.திருமதி துரை, திருமதி சீதாலட்சுமி ஆகியோருக்கு என் நன்றி.


வ.உ.சி அவர்கள் பற்றிய சில பதிவுகள் நமது வலைத்தளத்தில் உள்ளன அவற்றை

ஆகிய பக்கங்களில் காணலாம்.


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

திரு.எஸ்.ராமச்சந்திரனின் சில சமூகவியல் கருத்துக்கள் -2


இவ்வொலிப்பதிவின் முதல் பகுதியில் நாட்டார் வழக்காற்றியல், சமூகத்தில் அடிமைகள், தாசி என்பன பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டன. அவற்றை இங்கே வாசித்தும் கேட்டும் மகிழலாம்.

இன்றைய பதிவில் இடம்பெறும் தகவல்களைக் காண்போம்.

பதிவு 1 - விஷ்வபிராமணர்கள்

இப்பதிவில் திரு.எஸ் ராமச்சந்திரன், 
  • விஷ்வ பிராமணர்கள் எனப்படுபவர்களின் வழக்குகள்
  • தைத்ரிய சம்ஹிதை என்பதன் பொருள்
  • சூத்ரங்கள் - அதன் உட்பொருள்கள்
என்பன போன்ற தகவல்களை வழங்குகின்றார்.



பதிவு 2 - தூத்துக்குடியும் உப்பு வணிகத்துறையும்



இப்பதிவில் திரு.எஸ் ராமச்சந்திரன், 
  • எப்படி முத்து அரசனுக்கு சொந்தமோ அதே போல உப்பு அரசனுக்கு சொந்தம் என்பது வழக்கு. 
  • தூத்துக்குடி பகுதியில் உப்பு உற்பத்தி அதிகம் உள்ளது. கடந்த 200 ஆண்டுகளாக இத்தொழில் ஈடுபட்டவர்கள் பண்ணையார் என்று அழைக்கப்படும் ஒரு சமூகத்தினர். 12ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களிலேயே இவர்களைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன; சித்திரவல்லி என்ற பட்டத்தோடு இவர்கள் குறிப்பிடப்படுகின்றார்கள். 
  • உப்பளத் தொழிலில் தூத்துக்குடி பரதவர்கள் அதிகம் ஈடுபடவில்லை. 
  • நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உப்பு வியாபரத்தில் அதிகம் ஈடுபட்டிருக்கின்றனர்.
  • ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் எனும் நாவல் உப்பளத்து மக்களின் வாழ்க்கையை விவரிக்கும் ஒன்று. 
  • உப்பளத்தில் பணியாற்றும் மக்களோடு வாழ்ந்து அவர்களின் வாழ்க்கைச் செய்திகளைப் பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு நாவல். 
இப்படி இவ்வொலிப்பதிவு செல்கையில் ராஜம் கிருஷ்ணனின் களப்பணிகள் பற்றி திருமதி.சீதாலட்சுமியும் விவரிக்கின்றார்.



பதிவு 3 - பாண்டியர்கள்

இப்பதிவில் திரு.எஸ் ராமச்சந்திரன், 

கான் சாஹீப் எழுதிய கடிதம்
  • 1756ல் தென்காசி கோயிலைப் பாதுகாத்துக் கொண்டிருந்தவர்கள் புலித்தேவர்கள். இவர்கள் 11 பேரை சுட்டு கொன்று தென்காசி பகோடாவை தனது ஆளுமைக்குள் கொண்டுவந்ததாக கான்சாஹீப் கடிதம் எழுதுகின்றான்.
  • 1754ம் ஆண்டைச் சேர்ந்த தென்காசிப்பாண்டியர்களின் செம்பு பட்டையம் குற்றாலம் கோயிலில் உள்ளது.
  • புலித்தேவர் சமூகத்தின் வம்சமும் ஜாதியும் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. புலித்தேவரும் அவர் சமூகத்தினரும் மறவர் குலத்தினர் என்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் வம்சத்தாரும் இணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.  
  • தென்காசி பாண்டியர்கள் 18ம் நூற்றாண்டில் பலமாக இருந்த ஒரு தமிழ் பேசும் மறவர்கள் சமூகத்தினராக இருந்தனர். இவர்கள் மதுரை நாயக்கர்களுக்கு கட்டுப்பட்டவர்கள். ஆனாலும் தென்காசி ஊரின் வரி வசூல் உரிமை பாண்டியர்களிடம் அப்போது இல்லை. இந்த உரிமை வடகரை ஜமீனிடம் இருந்திருக்கின்றது.
  • எந்த பாளையப்பட்டுக்களும் தாம் பாண்டியர் வம்சத்தவர்கள் என்று தங்கள் உரிமையைக் கோரவில்லை.
கங்கைகொண்டான் சீர்மை நாடாள்வார் என்கின்ற பட்டமுடைய நாடாட்சி மரபினர் வேறு, மறவர்கள் வேறு என்பது தெளிவு என்று உறுதிபடுத்துகின்றார் ஆய்வாளர் திரு.எஸ் ராமச்சந்திரன்.
ஏறக்குறைய 30 நிமிட ஒலிப்பதிவு இது. புதிய விஷயங்கள் தெளிவான ஆண்டு வாரியான தகவல்களை வழங்குகின்றார் ஆய்வாளர் திரு.எஸ் ராமச்சந்திரன்


பதிவும் படங்களும் :சுபாஷினி 
பதிவுக்கான ஏற்பாடு:திருமதி.சீதாலட்சுமி
பதிவு செய்யப்பட்ட நாள்: 19.3.2011

பேரா.பா.ரா.சுப்பிரமணியனுடன் இலண்டனில் ஓர் உரையாடல்

கிரியாவின் தற்காலத்தமிழ் அகராதியின் பிரதம ஆசிரியர், மொழி அறக்கட்டளையின் Contemporary Tamil Prose Writer (with notes, translation and glossary), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சையின் ‘தமிழ் நடைக் கையேடு’ ஆகிய வெளியீடுகளுக்குக் காரணமாயிருக்கும் பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் அவர்கள் 2012 ஏப்ரல்-மே மாதங்களில் லண்டன் வருகை புரிந்தார். அது சமயம் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக ஓர் நீண்ட கலந்துரையாடல் நடந்தது. அவைப் பகுதிகளாக கீழே வழங்கப்படுகின்றன:

பகுதி ஒன்று கேட்க!
பகுதி இரண்டு கேட்க!
பகுதி மூன்று கேட்க!
பகுதி நான்கு கேட்க!
பகுதி ஐந்து கேட்க!
பகுதி ஆறு கேட்க!

லண்டனின் இசைக்குயில் மாதினி

கடந்த கால் நூற்றாண்டுகளாக லண்டன் மாநகரிலிருந்து தமிழிசைச் சேவை செய்துவரும் மாதினி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களைத் தமிழ் அரபு அறக்கட்டளை பேட்டி கண்டது. 
அவரது சமீபத்திய இசைப்பேழைகள்:
சிவபுராணம், பண்ணிசைப்பாமாலை, நெஞ்சையள்ளும் கீதம் போன்றவை.


அவரது இனிய பாடல்களும் பேட்டியும் கீழே!


குயிலே உனக்கு அனந்தகோடீ நமஸ்காரம்! எனும் பாடல். 


இன்குரல் இசைகளும்! எனும் பாடல்.


நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்! எனும் பாடல்.


திருவாதவூராரின் சிவபுராணம்.


திருமதி ஸ்ரீஸ்கந்தராஜா தமிழ் மரபு அறக்கட்டளைக்கு லண்டன் இல்போர்டு நகரிலுள்ள அவரது இல்லத்தில் மே 30, 2012 அன்று அளித்த பேட்டி!


30 நிமிடங்கள் ஒலிக்கும் நேர்காணல்


சமீபத்தில் மண்ணின் குரலில் வெளியான அவரது ஈழத்துக் கவிஞரின் தமிழ்த் தாய்வாழ்த்து கேட்க!


கோமா கோதண்டம் - ஏலக்காய் தோட்டத்து மலைவாழ் மக்களின் வாழ்க்கை




இவரது முதல் நாவல் - ஆரண்ய காண்டம். மலைபடுவாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சூழலை விளக்கும் ஒரு நாவல். சேத்தூருக்கு மேலே, சிவகிரிக்கு மேலே இருக்கின்ற ஏலக்காய் எஸ்டேட்களில் இருக்கின்ற மலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு நாவல். அம்மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து அவர்கள் வாழ்க்கையைப் பார்த்து படித்து அதன் அடிப்படையில் இவர் உருவாக்கிய ஒரு நாவல்.

இந்த நாவலைப் பற்றி விளக்கும் போதே இதன் தொடர்பில் ஏலக்காய் எஸ்டேட்களில் இருக்கின்ற சூழலையும் மிக ஆழமாக விளக்குகின்றார் இந்தப் பேட்டியில்.இந்த நூல் இந்தியாவின் சிறந்த புத்தகமாக ஜனாதிபதியின் பரிசு பெற்ற ஒரு நூல்.

இவரது நாவல்கள் ஏலச் சிகரம். கிறிஞ்சாம் பூ போன்றவை மலைவாழ் மக்களின் குறிஞ்சித் திணை மக்களின் வாழ்க்கையை அலசுவதாக அமைந்துள்ளமை தனிச் சிறப்பு.

மலைவாழ் மக்களின் வாழ்க்கை துன்பம் நிறைந்தது. அன்றாட வாழ்க்கையை மட்டுமே கவனித்தக்கதாக அமைந்தது இவர்களது வாழ்க்கை. சமுதாயம், கற்பு நிலை, வருங்காலத்திற்கு சேமித்தல் என்பன போன்ற சிந்தனைகளே தோன்றாத ஒரு சூழலில் வாழ்பவர்கள். நிரந்தரமான குடிசைகள் அற்ற நிலையில் தங்குவதற்கும் இடமில்லாமல் கஷ்டப்பட்ட மக்கள் இவர்கள். இம்மக்கள் பழையர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர். சாதிப்பெயரைச் சொல்லி திட்டுவது அடிப்பது போன்றவற்றை தவிர்ப்பதற்காக ஒரு குழுவை அப்போதைய அரசு ஏற்படுத்தியது. கிராமத்தில் கலெக்டருடன் சேர்ந்து திரு.கோமா கோதண்டம் அவர்களும் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டிருந்தார். மலைவாழ் மக்களைப் பற்றி தொடர்ந்து இவர் எழுதி வந்த நாவல்களினால் ஏற்பட்ட தாக்கம் இவர் இவ்வகைப் பணியில் ஈடுபட தகுதியானவர் என்ற வாய்ப்பை அமைத்துக் கொடுத்தது. அதன் அடிப்படையில் மலைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணி ஆர்ம்பித்தது.

மலைவாழ் மக்களின் வாழ்க்கை வித்தியாசமானது. நிரந்தரமாக ஓரிடத்தில் இருப்பவர்கள் அல்ல. ஒரு நாள் ஒரு ஊரில் என நகர்ந்து நகர்ந்து செல்வதால் இவர்கள் நிரந்ததரமாக ஓரிடத்தில் இருக்கும் வகையில் இவர்களின் மொத்த எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதில் கூட சிரமம் ஏற்பட்டிருக்கின்றது. இவைகளைச் சேகரித்து கணக்கெடுப்பு எடுத்து வீடுகட்ட பணிகள் நடந்தது.  இதன் அடிப்படையில் அச்சமயம் 20 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அவ்வகையில் வீடுகள் கட்டி கொண்டிருக்கும் போது இவரே நேராகச் சென்று பார்க்கையில் தரமில்லாத பொருட்களைக் கொண்டு அவ்வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தமை பற்றியும் அதற்கு அவர்கள் தெரிவித்த காரணங்களைப் பற்றியும் இந்தப் பதிவில் நம்முடன் பகிர்ந்து கொள்கின்ற்றர்.

கோமா கோதண்டம் அவர்கள் 300க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள் எழுதியிருக்கின்றார். இவை குறிஞ்சித் திணை மிருகங்களைப் பற்றி அமைந்தவை. நேரடியாக மலைப்பகுதிக்குச் சென்று அங்குள்ள வன விலங்குகளைப் பார்த்து அவற்றின் தன்மைகளை மனதில் உருவகித்துக் கொண்டு இவர் கதைகளைப் படைத்திருக்கின்றார்.

இவரது களப்பணிகளை அந்த நாட்களுக்கே சென்று சுவாரசியமான அந்த ஞாபகங்களை நம்முடன் இப்பேட்டியில் பகிர்ந்து கொள்கின்றார். காட்டில் செல்லும் போது யானை வந்த கதை, உப்பு தின்ற ஒரு குறங்கு பற்றிய கதை.. காட்டில் களப்பணிக்குச் சென்ற போது தீப்பற்றிக் கொண்ட கதை என சில கதைகள் ஏற்பட பின்னனியாக அமைந்த் காரணங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்.

இதுவரை 83 நூல்கள் இவரது எழுத்தில் வெளிவந்துள்ளன. மேலும் 14 நூல்கள் பதிப்பகத்தாரிடம் வெளியீட்டிற்காக உள்ளன. பேட்டி எடுத்துக் கொண்டிருந்த சமயத்திலும் 2 நூல்கள் எழுதிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

திரு.கோமா கோதண்டத்தின் முந்தைய பதிவாக புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றிய இரண்டு ஒலிப்பதிவுகள் முன்னர் வெளியிட்டிருந்தேன். அதனை இங்கே காணலாம். http://voiceofthf.blogspot.de/2011_06_01_archive.html  அதன் தொடர்ச்சியாக இப்பதிவினை இன்று வெளியிடுகின்றேன்.

கேட்டு மகிழுங்கள்.

பதிவினைக் கேட்க!

அன்புடன்
சுபா

Lettered Dialogue - Book Release function

Lettered Dialogue, a collection of selected letters with commentary by Mr.Narasiah. The letters were exchanged between Chitti (P.S. Sundararajan) and Krithika (Mrs.Mathuram Boothalingam).

Click Here To listen to the audio recording.

Welcome Speech by: Mr. S.Muthiah
About the book by the Author: Mr.K.R.A. Narasiah
Special Addresses: Mr. Gopalakrishna Ghandi, Mr.K.Subramanian













திரு.எஸ்.ராமச்சந்திரனின் சில சமூகவியல் கருத்துக்கள்


வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுகளுக்காக 2011ல் நான் தமிழகம் சென்றிருந்த போது திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்களுடன் செய்யப்பட்ட ஒரு பேட்டியின் இரண்டு பதிவுகள் இந்த மண்ணின் குரல் வெளியீட்டில் இடம்பெறுகின்றன. திரு.எஸ் ராமச்சந்திரன் அவர்கள் தொல்லியல், சமூகவியல், வரலாற்று ஆய்வாளர். இவரது மேலும் சில கட்டுரைகளும் ஒலிப்பதிவுகளும் முன்னரே நமது வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மேலும் இரண்டு பதிவுகள் தொடர்கின்றன.



பதிவு 1


  • நாட்டார் வழக்காற்றியல் என்பது சரியான பதமா?
  • செம்மொழி, செவ்வியல் என்பதன் பொருள் என்ன?
  • கொடுந்தமிழ் செந்தமிழ் இரண்டுக்குமான் சமூகவியல் விளக்கம்.
  • கிராமிய தெய்வங்களும் பெருந்தெய்வங்கள் எனக் குறிப்பிடப்படும் தெய்வங்களையும் வெவ்வேறு சமூகங்களுக்கு உரியன என சொல்லப்படுவது சரியா?
  • வேற்றியல் பொதிவியல் பற்றிய விளக்கம்.

இவற்றுடன் ராவணன் பற்றிய ஒரு சுவையான ஒரு குறிப்பையும் தருகின்றார்


பதிவு 2 


சமூகத்தில் அடிமைகள் - இது ஒரு கலவையான பதிவு.  திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் ஒப்பந்தக் கூலி, ஆப்பிரிக்காவில் ஒப்பந்தக் கூலிகளின் நிலை, காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க உரிமைப்போராட்டம், தில்லையாடி வள்ளியம்மை பற்றிய தகவல்கள் எனப் பகிர்ந்து கொள்கின்றார். தொடர்ந்து திருமதி.சீதாலட்சுமி தமது ஆஸ்திரேலிய பயண ஆய்வு அனுபவத்தில் அங்கு பெண்கள் சமூகத்தில் நிகழ்ந்த சில சமூக அவலங்களைப் பற்றி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார். இவர்களோடு திரு.நடேச நாடாரும் தனது கருத்துக்களை இடைக்கிடையே பகிர்ந்து கொள்கின்றார்.



பதிவு 3


  • தாசி என்ற சொல்லின் பண்டைய பொருள்..
  • சமூகவியல் பார்வையில் ஜாதிகள்
  • வைசியர்கள் எனப்படும் குழுவில் அடங்குபவர்கள் வர்த்தகம் செய்யும் குழுக்கள் மட்டுமல்ல எனக் கூறி இக்குழுவில் பண்டைய காலத்தில் அடங்கிய உப குழுக்கள் பற்றிய விளக்கம்
  • பிராமணர்கள் எனப்படும் குழுவில் அடங்குபவர்கள் வைதீக பிராமணர்கள் கோயில் குருக்கள்கள் மட்டுமல்ல எனக் கூறி இக்குழுவில் பண்டைய காலத்தில் அடங்கிய உப குழுக்கள் பற்றிய விளக்கம் 
  • ஷத்திரியர்கள் எனப்படும் குழுக்கள் 

என விளக்கம் செல்கின்றது.

இந்த உரையாடலின் போது திருமதி சீதாலட்சுமி அவர்கள் ராஜாஜி அவர்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றார்.


  • சுயமரியாதை இயக்கம் 
  • ஜாதி என்பதன் தோற்றம், அதிகார போதை
  • ஜாதி தோற்றத்துக்கு முற்பட்ட சமூக நிலை
  • ஜாதி சண்டைகள், ஜாதியினால் ஏற்படும் சமூக அவலங்கள் 

பற்றி சீதாலட்சுமி அவர்களின் கருத்துக்கள் தொடர்கின்றன.


  • வர்ணம் என்பதற்கும் ஜாதி என்பதற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி மேலும் திரு. எஸ்.ராமச்சந்திரன் தொடர்கின்றார்.
  • இரண்டு ஜாதியின் கலப்பில் பிறக்கும் ஒரு குழந்தை மூன்றாவது ஜாதியாக மாறுமா..? சில கல்வெட்டுச் சான்றுகள்.
  • கி.பி 13ம் நூற்றாண்டுக்குப் பிறகு ஜாதி எனப்படும் சமூக அமைப்பில் உள்ள நிலையே தற்கால நிலை வரை தொடர்வது 

என்று தனது விளக்கத்தை வழங்குகின்றார் திரு.எஸ்.ராமச்சந்திரன்.


பதிவு:சுபாஷினி 
பதிவுக்கான ஏற்பாடு:திருமதி.சீதாலட்சுமி
பதிவு செய்யப்பட்ட நாள்: 19.3.2011


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

ராஜபாளையம்: ராஜூக்கள் சரித்திரமும் பருத்தி உற்பத்தி தொழிலும்




வணக்கம்.

ராஜபாளையம் என்றால் நினைவுக்கு வருபர்கள் ராஜூக்கள் சமூகத்தினர்.; நினைவுக்கு வருவது பருத்தி வியாபாரம். இந்த ராஜூக்களைப் பற்றி தெரிந்து கொள்ள நான் மேற்கொண்ட முயற்சியில் எனக்கு உதவி செய்தவர் நமது அன்புக்குறிய சீத்தாம்மா (திருமதி. சீதாலட்சுமி) சென்ற ஆண்டு 2011 மார்ச் மாதம் நான் தமிழகம் சென்றிருந்த போது சரித்திர ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன் அவர்களைச் சந்தித்து ராஜூக்கள் சமூகத்தைப் பற்றியும் ராஜபாளையம் பருத்தி உற்பத்தி பற்றியும் கேட்டு அறிந்து கொண்டேன். அதனை ஒலிப்பதிவாக பதிவாக்கியுள்ளேன். இந்தப் பதிவில்


  • ராஜூக்கள் தெலுங்கு பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள்
  • இவர்கள் 400 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தமிழகத்துக்குப் பாளையக்காரர்களாக வந்தவர்கள்
  • விவசாயத்தில் முதலில் ஈடுபட்டாலும் பின்னர் பருத்தி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள்
  • இன்னமும் ராஜபாளையத்தில் சத்திரிய ராஜூக்கள் என்ற ஒரு குடியினர் இருக்கின்றனர்
  • இங்கே வலங்கை என்ற பெயரிலேயே ஒரு கோயில் இருக்கின்றது
என்பதோடு மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


இந்தப் பேட்டியின் போது எங்களுடன் எழுத்தாளர் மதுமிதாவும் உடன் வந்திருந்தார். திரு.நடேச நாடாரின் இல்லத்தில் இப்பேட்டியை நாங்கள் பதிவாக்கினோம்.திரு.ராமச்சந்திரன் விளக்கம் தர அவ்விளக்கங்களுக்கு மேலும் தகவலை வழங்கி இப் பேட்டிக்குச் சிற்ப்பு சேர்க்கின்றனர் மதுமிதாவும் சீதாம்மாவும். 



சுதந்திர போராட்ட காலகட்டத்தில் காந்தி ராட்டினத்தை அறிமுகப்படுத்திய போது ராஜபாளையத்து பருத்தியில் நெய்யப்பட்ட கதர் ஆடை சிறப்பானது என காந்திஜி சொன்னதாகவும் இப்பேட்டியில் மதுமிதா குறிப்பிடுகின்றார்


இப்பேட்டியில் பங்கு பெறுபவர்கள்: திருமதி. சீத்தாலட்சுமி, எழுத்தாளர் மதுமிதா, சுபா, திரு.நடேச நாடார்,திரு.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர்.






அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

ஈழத்துப்புலவரின் தமிழ்த்தாய் வாழ்த்து

புலவர் சிவநாதனின் தமிழ்மொழி வாழ்த்து!

சீருடைச் செந்தமிழ் மகள் வாழி! எம்
சிந்தையில் நிறைந்த அவள் வாழி
போருடைப் புறமும் அன்புடை யகமும்
போர்த்த பேரழகாள் புகழ் வாழி!

ஆரமாயியலோடு தேனிசை நாடகம்
அணிந்தவள் சங்கம் தனிலூறிச்
சாரமாய் வடிந்த காவியச் சோலையில்
களி நடம் பயின்றவள் பேர் வாழி!

ஏருடை நிலமுங் காருடை வளமும்
தாருடை அரசும் இல்லாமல்
பாரினில லையுந் தமிழரை யிணைத்தே
வீறுடைச் செல்வியாய் அவள் வாழி

இப்பாடலை இசை அமைத்துப் பாடியுள்ளார் இலண்டனைச் சேர்ந்த மாதினி ஸ்ரீஸ்கந்தராஜா.

பாடல் கேட்க!

தேர் அ(ரி)றிந்தோர்

தேரில் என்னென்ன சிற்பங்கள் உள்ளன?
எத்தனை அடுக்குகளாகச் சிற்பங்கள் உள்ளன?
காமம் பற்றிய சிற்பங்கள் ஏன் இடம் பெறுகின்றன?

கும்பகோணம் ஸ்தபதியார் திரு.இரா.பிரபாகரன் அவர்கள் தேரில் உள்ள சிற்பங்கள் குறித்து விளக்கம் அளித்த ஒலிப்பதிவை இணைத்துள்ளேன்.

பதிவைக் கேட்க!


காளைராசன்

உலோகச் சிலை செய்யும் முறை


கும்பகோணம் ஸ்தபதியார் இரா.பிரபாகர் அவர்கள் திருப்பூவணம் அருள்மிகு மின்னம்மைக்கான வெள்ளியங்கியைச் செய்து கொடுத்தார்.

வெள்ளியங்கியைப் பெற்றுக் கொண்டு, அவருடன், கடந்த பங்குனி மாதம் 20 ஆம் நாள் திங்கள் கிழமை (02/ஏப்ரல்/2012) அன்று மானாமதுரை வேதியாரேந்தல் விலக்கில் அமைந்துள்ள ஸ்ரீபஞ்சமுக ப்ரித்யங்கிரா தேவி கோயிலிலிருந்து திருப்பூவணத்திற்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.
அப்போது உலோகத்தினால் சிலைகள் செய்யும் முறைபற்றி அவரிடம் கேட்டு அறிந்து கொண்டேன்.

பதிவைக் கேட்க!

கி.காளைராசன்
kalairajan26@gmail.com

ஈரோடு கலைமகள் பள்ளிக்கூடத்தில் தொல்லியல் அருங்காட்சியகம்


புலவர் இராசு


கொடுமணல் ஆய்வு பற்றிய ஒரு அறிமுகத்துடன் இந்தப் பதிவு தொடங்குகின்றது.

கலைமகள் பள்ளியின் தண்ணீர் தேவைக்காக மணலைத் தோண்டிய போது ஒரு முதுமக்கள் தாழி கிடைத்திருக்கின்றது. தமிழக தொல்லியல் ஆய்வுகளிலேயே ஒரு புதுமையைப் படைத்த ஒரு கண்டுபிடிப்பாக இது கருதப்படுகின்றது. 2ம் நூற்றாண்டினைச் சார்ந்ததாக இந்த முதுமக்கள் தாழி பதிவு செய்யபப்ட்டிருக்கின்றது. பொதுவாக முதுமக்கள் தாழியில் இறந்தவர்களின் எறிக்கப்பட்ட உடலின் மிச்சங்கள் வைக்கப்பட்டு புதைக்கப்படுவது வழக்கம். இந்த பானைக்குள் இரண்டு எலும்புக்கூடுகள் வைக்கப்பட்டிருந்தது. ஒன்று ஒரு ஆணின் உடல் என்பதும் மற்றொன்று ஒரு பெண்ணின் உடல் என்பதும் ஆய்வில் கண்டு அறியப்பட்டது.

இந்த முதுமக்கள் தாழி கலைமகள் பள்ளிக்கூடத்தில் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றது.




ஒரு பள்ளியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைந்திருக்குமா என்றால் அதற்கு இந்தப் பள்ளிக்கூடம் சான்றாக மைந்திருக்கின்றது. கல்வெட்டுக்கள், சிற்பங்கள் என்பனவற்றோடு எலும்புக்கூடு உள்ளே வைக்கப்பட்ட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த முதுமக்கள் தாழி இந்தக் காட்சிப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிக்கூடத்தில் அகில இந்திய கல்வெட்டாய்வாளர்கள் கழகத்தினர் ஏற்பாட்டில் ஒரு கல்வெட்டு ஆய்வு மானாடு நடைபெற்றுள்ளது. இந்த மானாட்டை ஒட்டி ஒரு கல்வெட்டு ஆய்வு மலரும் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பு: இந்தப் பதிவினை புலவர் ராசுவின் இல்லத்திலிருந்து கலைமகள் பள்ளிக்கூடத்தில் அமைந்துள்ள தொல்பொருள் காட்சியகத்திற்குச் செல்லும் வழியில் பதிவு செய்தேன். வாகனத்தில் செல்லும் போதே பதிவு செய்ப்பட்ட ஒரு ஒலிப்பதிவு.

ஒலிப்பதிவினைக் கேட்க!அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

குன்றக்குடி ஆதீனத்தில்

வணக்கம்,

மார்ச் மாத மண்ணின் குரல் பதிவுகளில் இன்று மேலும் ஒரு பதிவு இணைகின்றது.

குன்றக்குடி அடிகளாரை சந்தித்தபோது பதிவு செய்த அவருடைய பேட்டி ஒன்றினை ஜனவரி மாதம் வெளியீட்டில் இணைத்திருந்தேன். அதன் தொடர்ச்சி இம்மாதமும் தொடர்கின்றது. இறுதிப் பகுதி இது.

இப்பதிவில்

-குன்றக்குடி மடம் 1990க்கு முன்னர் தெய்வீகப் பேரவை, அருள் நெறித் திருகூட்டம் எனும் அமைப்புக்களை உருவாக்கி திருமுறை திருவாசகம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி செய்தது.
-இதற்குப் பிறகு காரைக்குடியில் அரசின் சில நிறுவன அமைப்புக்களையும் இணைத்துக் கொண்டு பொது மக்கள் பயன்படும் வகையில் ஆய்வு, தொழில், வேளாண்மை உற்பத்தி என்ற வகையில் சமூகப் பணிகளில் மடம் இறங்கியது
-சிவகங்கை மாவட்ட அளவில் குன்றக்குடி மடத்தின் வேளாண் அறிவியல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. ஏறக்குறைய 20 அமைப்புக்கள் பொதுமக்கள் உயர் கல்வி பெற்றிராத போதும் பல்வேறு தொழில்கல்வி கற்று வாழ்க்கையில் பொருளாதாரத்தில் முன்னேற வழிவகுத்துக் கொடுக்கின்றது.
-இயற்கை சூழல், கோயில் அமைப்புகள் பற்றியும், கோயிலைச் சுற்றியுள்ள மருதாபுரி குளம், வையாபுரி குளம் பற்றிய தகவல்கள்
-குளங்கள் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் மடத்தின் செயல்பாடுகள்
-தமிழ் வழிக் கல்வி
என்பது பற்றி குன்றக்குடி அடிகளார் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.

மேலும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நண்பர்கள் முனைவர் வள்ளி, டாக்டர்.நா.கண்ணன், முனைவர்.காளைராசன், சுபா  ஆகியோர் அடிகளாருடனும் மடத்தின் புலவர் திரு.பாலகுரு அவர்களுடனும் நிகழ்த்திய பொதுவான ஒரு கலந்துரையாடலின் பதிவையும் இவ்வொலிப்பதிவில் கேட்கலாம்.




இப்பதிவைக் கேட்க

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

சேலத்துச் செம்மல் தமிழ்நாடன் - பேட்டி

தமிழ்நாடன்



-ஆசிரியர், கவிஞர், ஓவியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர்..
-சேலத்தில் அருங்காட்சியகம் அமைத்திட அடிப்படைப் பணிகள் நடத்திய சேலம் ஓவியர்-எழுத்தாளர் மன்றத்தின் செயலாளர் (1975)
-தமிழ்நாட்டு அரசின் வரலாற்று ஆவண ஆய்வுக் குழு மண்டல உறுப்பினர். அதன் சேலம் கிளை மாவட்ட ஆட்சியரைப் பதிப்பாளராகக் கொண்டு நடத்தும் வரலாற்று ஆவண செய்தி மடல் ஆசிரியர் (1985 - ).
-சேலம் ஆவணக் காப்பகம் அலுவலகம் வரக் காரணர்களில் ஒருவர்
-கொல்லிமலை ஓரிவிழா காலங்களில் நாமக்கல் மகளிர் கல்லூரியில் தமிழர் பண்பாட்டு வரலாற்று ஆய்வரங்குகள் நடத்தியவர் (1985, 1986)
-தமிழ்நாடு அரசு நடத்திய கண்காட்சியில் (சென்னை தீவுத்திடல்) சேலம் மாவட்டம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் (1985 - 90) முதற்பரிசு பெற உழைத்த வல்லுநர் குழுவினர்.
-வரலாற்று மூலங்கள் பாதுகாத்தல், அதைக் கற்பித்தல் என சிறப்புப் பயிற்சி பெற்றவர் (மைய அரசுப் பண்பாட்டுத் துறை). சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் கல்லூரி மாணவர்க்கு இத்தகு முகாம்கள் பல நடத்தியவர்.
-தொல்லியல் களப்பணியாளர், பன்னாட்டார் பட்டயம் எனும் செப்பேடு கண்டறிந்து பதிப்பித்தவர்
-கர்னல் ரீடு அறிக்கையை (கி.பி. 1800) முதன் முதலாக முழுவடிவத்தில் வெளியிட்டவர்.
-பாவேந்தரின் படைப்பான குமரகுருபரன் (1944) நாடகத்தைக் கண்டுபிடித்து முதன் முறையாக அச்சேற்றியவர் (2000).
-சேலத்தில் பரிதியார் உரையோடு திருக்குறள் சுவடி கண்டறிந்தவர்.
-தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகத்தை முழுதாக மறு அச்சு செய்தவர். (1995)
-கொங்கு மண்டலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வரங்குகள் நடத்திய கொங்கு ஆய்வகத்தின் பொதுச் செயலர் (1980 - ).
-கொங்கு ஆய்வகம் கல்லூரி மாணவர்க்கு நடத்திய முகாம்களில் பங்களித்த துறை வல்லுனர்.அதன் வெளியீடுகளின் தொகுப்பாளர், பதிப்பாளர். கொங்கு களஞ்சியம் பதிப்பாசிரியர் குழுவினர்.
-தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் விவேகானந்தா அறக் கட்டளைச் செயற்குழுவினர், அதன் பல்வேறு கருத்தரங்குகளின் முன்னவர்
-கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மைய ஆய்வர்.

அத்துடன்

-பழங்குடி மக்கள் ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டவர்
-புலவர் இராசு ஆவர்களுடன் இணைந்து பல அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுவர்
கொடுமணல் அகழ்வாய்வுப் பணியில் புலவர்.ராசுவுடன் இணைந்து பணியாற்றியவர்.
-சேலத்துச் செம்மல் தமிழ்நாடன் நடுவண் அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
-தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர்
-கவிஞர் சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது பெற்றவர்
-தனது மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்.

தமிழ்நாடன் எழுதிய வரலாற்று நூல்கள்:

-தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம் (1995, 97, 2010)
-வள்ளல் கந்தசாமிக் கவுண்டர் *பரமத்தி வேலூர்) (1995)
-பரமத்தி அப்பாவு (1800 இல் வெள்ளையரை எதிர்த்த வீரைன் வரலாறு)
-சேலம் : கலையும் இலக்கியமும் (1995)
-சேலம் திருமணி முத்தாறு (2006, 2010)
-கொங்கு நாட்டில் கும்பினி ஆட்சி, புதுமலர், ஈரோடு (2009)
-2000 yeas of Salem (1976)
-The Story of India Indra 1975
-அன்புள்ளம் அருணாசலம் 2005
-சேலம் மையப்புள்ளி 2010

தொகுத்த நூல்கள்
-South Indian Studies (1981)
-சேலம் மாவட்டம்: சில ஆய்வுகள், காவ்யா(1988)
-தருமபுரி மாவட்டம்:புதிய ஆய்வுகள், விவேகானந்தா (1996)
-தமிழ்னாட்டு மலைவாழ் பழங்குடி மக்கள் (1996)
-தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள் (1996)
-கொங்குக் களஞ்சியம், மெய்யப்பன் ( 2008)

மேலும் பல இலக்கிய, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு நூல்களும் எழுதியுள்ளார்.


இவரது ஒலிப்பதிவு பேட்டி !

களப்பிரர் காலம் பகுதி 4

courtesy: National Geographic
களப்பிரர் கால ஆய்வுத் தகவல்களை பதியும் ஒரு முயற்சி இது. இத்தொடரில் இதுவரை 5 ஒலிப்பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று மேலும் 2 பதிவுகளை வெளியிடுகின்றேன்.

பதிவு 6

இப்பதிவு தமிழ் நாட்டில் பௌத்த ஆலயங்கள் பற்றிய கள ஆய்வுத் தகவலைத் தருவதாக அமைகின்றது.

- தமிழ்நட்டில் தற்சமயம் எந்த முழுமையான பௌத்த கோயில்களும் இல்லை. பூம்புகாரில் நிகழ்த்திய தொல்லியல் துறையினரின் அகழ்வாய்வில் கிடைத்த ஒரு பௌத்த கோயில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- கோயில் மட்டுமன்றி பௌத்த சிற்பங்கள் இவ்வகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன. கடலில் மூழ்கிப்போன சிலைகளும் கிடைத்திருக்கின்றன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன. காஞ்சிபுரத்தில் இருந்த பல பௌத்த ஆலயங்களைப் பற்றி யுவான் சுவான் தனது குறிப்புக்களில் எழுதி வைத்திருக்கும் தகவல்களும் நமக்குக் கிடைக்கின்றன.
- சைவ சமயம் அப்பர் சம்பந்தர் காலத்தில் செழிக்கத் தொடங்கிய கால கட்டத்தில் பௌத்த சமண மதங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்க ஆரம்பித்தன.
மீண்டும் 12ம் 13ம் நூற்றாண்டில் பௌத்தம் எழுச்சி பெற்றதற்கானச் சான்றுகள் கிடைக்கின்றன.
- அப்பர் சம்பந்தர் காலத்தில் எழுச்சி கொண்டு வந்த சைவம் போல மீண்டும் வீரமிக்க ஒரு சைவம் தேவைப்பட்டது. பெரிய புராணத்தில் குறிப்பிடப்படும் 63 நாயன்மார்களில் பலர் மிகத் தீவிரமான சைவ பக்தர்கள். அவர்கள் பற்றிய குறிப்புகள்...
- காபாலிகம் வீர சைவம் ஆகியவற்றின் தாக்கம், அவற்றின் எழுச்சி தோன்றிய போது பௌத்த சமண கோயில்கள் அழிக்கப்பட்டு அங்கே சைவம் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது

பதிவு 7

இப்பதிவு மணிமேகலையின் காலம் மற்றும் இந்திரன் எனும் தெய்வம் பற்றியதாக அமைகின்றது

- சங்கம் மருவிய காலமான 6ம் நூற்றாண்டுக்கு முன்னர்
- கிபி.2ம் நூற்றாண்டு வாக்கிலேயே காஞ்சிபுரத்திலிருந்து வணிகர்கள் சீனா மற்றும் பிற கிழக்கிந்திய நாடுகளுக்குச் சென்றிருக்கின்றார்கள்
- காமகோட்டம் என்ற இடத்தில் பௌத்த சமய தெய்வமாகிய மணிமேகலா தெய்வத்திற்கு சோழ மண்ணன் கோயில் கட்டியிருக்கின்றார்
- மணிமேகலை அக்கால கட்டத்தில் கரூர் போன்ற பல இடங்களுக்குச் சென்று சமய தர்க்கங்கள் செய்து பௌத்தத்தை நிலை நிறுத்தியிருக்கின்றார்.
- மணிமேகலா தெய்வம் பற்றிய குறிப்புக்கள்
- மணிமேகலா கடல் தெய்வம்
- தனது மகளுக்கு கோவலன் மணிமேகலா எனப் பெயர் சூட்டுவதற்கான காரணம்
- பௌத்த கல்வெட்டுக்களில் அறச்சாலை எனும் சொற்பிரயோகம்.. தானங்கள், உணவுச் சாலைகள்
- சைவத்தில் உள்ள அன்னப்பூரணி எனும் தெய்வம்
- கல்வெட்டுக்கள் தரும் தகவல்கள்
- இந்திர வழிபாடும் பௌத்த சமயத்தில்
- இந்திரன் முக்கிய தெய்வமாக இருந்து பின்னர் முக்கியத்துவம் குறைதல்
- இந்திர விழா


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

களப்பிரர் காலம் - ஆய்வுத் தகவல்கள் - 3

தமிழ்நாடு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.பத்மாவதி வழங்கிய பேட்டியின் தொடர்ச்சி பகுதி 4ம் 5ம் இன்று வெளியிடப்படுகின்றன.

பதிவு 4

களப்பிர மன்னர்களை ஆட்சியிலிருந்து நீக்கி பாண்டிய மன்னனை மீண்டும் ஆட்சிப் பொருப்பில் அமர்த்துவது திடீரென்று நிகழ்ந்த ஒரு செயலாக இருக்க முடியாது. ஊர்த்தலைவர்கள், சமணர்கள் ஆகியோரது பெறும் ஆதரவு இம்மாற்றத்திற்கு ஆதாரமாக இருந்திருக்க வேண்டும். இதற்கு சான்றுகள் இருக்கின்றனவா என்ற வகையில் இந்தப் பேட்டி தொடங்குகின்றது.
களப்பிறர்கள் ஆட்சியைக் கைப்பற்ற துணையிருந்த கரவந்தபுரவாசிகளைப் பற்றிய குறிப்புக்கள் பரவலாகக் கிடைக்காமல், சமணப்பள்ளிகள் தொடர்பான தகவல்கள் அதிகமாகக் செப்பேட்டுச் சான்றுகளில் கிடைக்கின்றன. இதற்குக் காரணமென்ன என்று அலசி அதற்கான காரணங்களையும் இப்பதிவு வரிசைப்படுத்துகின்றது.

பதிவு 5

களப்பிறர்கள் பற்றிய ஆய்வுகள் சில ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமை பற்றியும் இவ்வாய்வுக்குத் தான் மேற்கொண்ட வழிமுறைகளைப் பற்றியும் விவரிக்கின்றார். இந்தப் பதிவு மிக வித்தியாசமான நோக்கில் பல்வேறு தகவல்களை வழங்குவதாக அமைந்துள்ளது.

குறிப்பாக
-பழமையான பெண் தெய்வ வழிபாடு
-இலக்கியங்களில் மங்கை என்ற தெய்வத்தைப் பற்றிய குறிப்புக்கள்
-மங்களம் என்ற ஊர் குறிப்புக்கள்
-கல்வெட்டுச் சான்றுகள்
-தாராதேவி எனப்படும் தெய்வம் பௌத்த வழிபாட்டு பெண் தெய்வம்.. மணிமேகலா தெய்வம்
-காம கோட்டம் என்ற சொற்குறிப்பிற்கான ஆரம்ப கால குறிப்புக்கள்..
-சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பல்வேறு வகையான கோட்டங்கள், ஊர்க்கோட்டம்..

இப்படி பல தகவல்களைப் பதிவதாக இந்தப் பதிவு அமைந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் பல இடங்களில் பௌத்த வழிபாட்டுச் சின்னங்களும் கோயில்களும் கிடைத்துள்ளன. காமகோட்டம் என்பது பௌத்த வழிபாட்டில் தாராதேவி எனப்படும் மணிமேகலா தெய்வத்துக்கான ஒரு வழிபாட்டுததலமாக இருந்திருக்க வேண்டும் என்று இப்பதிவு கூறுகின்றது.

சைவமும் வைஷ்ணவமும் வலிமைப் பெறத் தொடங்கும் போது ஏற்கனவே மக்கள் வழக்கத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த வழிபாடுகளை உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த தன்மையையும் இப்பேட்டி விளக்குகின்றது. அதுமட்டுமன்றி பல பெண் தெய்வக் கோயில்கள் சிவன் கோயில்களாக மாற்றப்பட்ட நிகழ்வுகளுக்கான சான்றுகளையும் கல்வெட்டுக்களிலிருந்து காண முடிகின்றது என்ற ஒரு செய்தியையும் இப்பதிவு விளக்குகின்றது.

கேட்டுப் பாருங்களேன்.


அன்புடன்
சுபா

நகரத்தாரின் கடல் கடந்த பயணங்கள் 2

நண்பர்களே,

இம்மாத மண்ணின் குரலில் மேலும் ஒரு பதிவு நகரத்தார் கடல் பயணங்கள் பற்றியதாக அமைந்துள்ளது. இந்தப் பதிவில் தொடர்ந்து பல தகவல்களைத் தொடர்ந்து வழங்குகின்றார் டாக்டர். வள்ளி.



-கடல் கோள் அழிவுகள்.. சிவகங்கங்கை பகுதியைத் தேர்ந்தெடுத்த நகரத்தார்கள்
-செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை
-கடல் பயணம் செல்லும் முன் பிள்ளைகளிடம் வாய்க்கரிசி வாங்கிக் கொண்டும் கூட செல்வது வழக்கமாக இருந்துள்ளமை..
-நகரத்தார் வீடுகளின் அமைப்பு
-மழை நீர் சேகரிப்பு எனும் கருத்தை மையமாக்கி அமைக்கப்படும் நகரத்தார் வீடுகள்
-நகரத்தார் வீடு அமைப்புகள் பற்றிய விளக்கம்: முகப்பு, திண்ணை. பெட்டகச்சாலை, வளவு, வீடு (அறைகள்), சமையல் பகுதி
-குடும்பத்தார் பலர் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் தனிச் சமையல்..
-இவ்வகையான பெரிய வீடுகளிலேயே தான் குடும்பத்தினரின் அனைத்து சிறப்பு விழாக்களும் நிகழ்வுகளும் நடைபெறும்..
-செட்டி நாட்டு இலக்கியங்கள்..கிராமியப் பாடல்கள்

தனது மாமியார் இறப்பதற்கு முன்னரே தனக்காக இவர் பாட வேண்டிய ஒப்பாரி பாடல்களைக்கூட சொல்லிச் சென்ற விஷயத்தையும் தனது இறப்பின் போது எந்தெந்த பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும், எந்தெந்த பொருட்கள் எங்கெங்கே இருக்கின்றன என்பதையும் தெளிவாக சொல்லிவைத்த கதையையும் சுவைபட சொல்கின்றார். கேட்டுப் பாருங்களேன்.

பதிவைக் கேட்க!

அன்புடன்
சுபா
[ தமிழ் மரபு அறக்கட்டளை ]

பென்னேஸ்வர மடத்து நடுகல்கள்



இவை நவகண்டம் எனப்படும் நடுகல்கள். ஒரு வீரன் தனது குடிகளுக்காகவோ அல்லது தனது அரசனுக்காகவோ தன்னையே பலியிட்டுக் கொள்வதைச் சித்தரிக்கும் ஒரு சிற்ப வகையைச் சார்ந்தது. தன்னை காணிக்கையாகக் கொடுத்து பலியிட்டுக் கொள்ளும் இவ்வழக்கம் பண்டைய வழக்கில் இருந்து வந்துள்ளதற்கு இச்சிற்பங்கள் சான்றாக உள்ளன. தமிழ் நாடு முழுவதுமுள்ள நடுகல்களில் ஏறக்குறைய 90 சதம் நவகண்டங்கள் கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள இந்தப் பெண்ணேஸவர மடத்திலேயே இருப்பதாக திரு.சுகவனம் முருகன் குறிப்பிடுகின்றார். இங்கு காணப்படும் நடுகல்கள் 12ம் 13ம் நூற்றாண்டைச் சார்ந்தவை.

இந்தப் பதிவில் இந்தச் சிரமறுத்துப் பலியிடும் வழக்கம் பற்றி விளக்கிக் கூறுகின்றார் திரு.சுகவனம் முருகன். கேட்டுப் பாருங்கள்.

பதிவு 1


யாழ் வாசிக்கும் விறலியரைக் காட்டும் ஒரு அபூர்வமான சிற்பம் இது. இது சோழர்காலச் சிற்பம். பராமரிக்கப்பட வேண்டிய இவ்வகைச் சிற்பங்கள் சிமெண்ட் பூசப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதைக் காணும் போது நம்மால் பதறாமல் இருக்க முடியாது.


இதே போல உடன் கட்டை ஏறுவதை விவரிக்கும் ஒரு சதிக்கல் ஒன்றும் இருந்திருக்கின்றது. இந்த சதிக்கல் அருகில் உள்ள சோமேஸ்வரர் கோயிலில் இருக்கின்றது. உடன் கட்டை ஏறும் பெண்ணை கும்ப மரியாதையுடன் அழைத்து வருவது போன்றும் பின்னர் அப்பெண் தீயில் இறங்கி தன்னை மாய்த்துக் கொள்வது போன்றும் இந்த சதிக்கல் அமைந்துள்ளது என்கின்றார் திரு.சுகவனம் முருகன்.

பதிவு 2


ஒரு வீரன் தனது தலைமுடியை கையால் பிடித்துக் கொண்டு வலது கையில் ஒரு வாளை வைத்திருப்பது போன்று அமைந்த நடுகல் சிற்பம். வீரனின் முகத்தில் கவலையோ பயமோ அன்றி வீரம் தெரியும் வகையிலேயே இந்தச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

நடுகல்கள், பள்ளிப் படை கோயில்கள் பற்றிய ஒரு விளக்கம் அளிக்கின்றார் திரு.சுகவனம் முருகன்

பதிவு 3

மேலும் படங்களைக் காண இங்கே செல்க!

அன்புடன்
சுபா

களப்பிரர் காலம் - ஆய்வுத் தகவல்கள் - 2

பதிவு 3
வளமான சேர சோழ பண்டியர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எப்படி திடீரென்று களப்பிரர்கள் வந்து ஆட்சியைக் கைப்பற்ற முடியும்? இதற்கு ஏதேனும் சமூகத் தேவை என்பதன் அடிப்படையில் காரணங்கள் உள்ளனவா? எப்படி கர்நாடகத்திலிருந்து இங்கு வந்து சேர்ந்த களப்பிரர்களால் இங்கே ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது? இதற்கு சமூகத்தின் எத்தகையோரிடமிருந்து ஆதரவு கிடைத்திருக்கலாம். என்பது பற்றி இந்த ஒலிப்பதிவு நோக்குகின்றது.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசனின் பண்புகளையும் இப்பதிவு நோக்குகின்றது. தொல்காப்பியம் காட்டும் சமூக வாழ்வியல் தேவை சார்ந்த கடவுள் கொள்கையும் அலசப்படுகின்றது.

சங்ககால மன்னர்களுக்கு சமூகத்தில் இருந்த ஆதரவு நீங்கி களப்பிர மன்னர்களுக்கு சமூகத்தில் எப்படி ஆதரவு பெறுகியதோ அதே போல பின்னர் களப்பிரர்களை நீக்கி ஆட்சி மாற்றம் கொண்டு வருவதிலும் சமூகத்தின் பங்கு இருந்திருக்கின்றது. எவ்வகை சமூகத் தேவை இம்மாற்றங்களுக்கு பின்னனியாக இருந்தது? வைதீக, அருகத மதங்களின் நிலை - இம்மாற்றங்களில் இவற்றின் பங்கு ஆகியவற்றை சுவாரசியமான பார்வையில் இச்செய்திகளை மிகச் சரளமாக விளக்குகின்றார் டாக்டர்.பத்மாவதி.

அன்புடன்
சுபா

குன்றக்குடியில் அமைந்துள்ள மடங்கள்

வழங்குபவர்: டாக்டர்.வள்ளி
பதிவைக் கேட்க

மாளிகை போன்று அமைந்திருக்கும் இவ்வீடு ஒரு மடம். மடத்தின் ஒரு புறத்தில் எந்த ஊராரின் மடம் என்ற பெயரும் பொதுவாகவே இவ்வகை மடங்களில் பொறிக்கப்பட்டிருக்கும். இவை சத்திரம் போன்றவை. முக்கிய பண்டிகை விழாக்களான மாத கார்த்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம் போன்ற நாட்களில் இங்கே வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த படத்தில் உள்ள இம்மடம் அழகாபுரி என்ற ஊரைச் சேர்ந்தவர்களின் மடம். மடத்தின் வாசலில் பொறிக்கப்பட்டுள்ள பெயரைக் காணலாம்.

மற்ற நாட்களில் அவரவர் ஊர்களுக்கு திரும்பி விடுவார்கள். ஜாதி வேறுபாடுகள் இன்றி இங்கு சமபந்தி போஜனம் வழங்கப்படும். இங்கு அமைந்துள்ள குன்றக்குடி கோயிலை மையமாக வைத்தே நகரத்தார் சமூகத்தினர் இருக்கின்றனர். கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியைச் சுற்றிலும் பல மடங்கள் அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊரைச் சார்ந்தவர்களின் மடங்கள். விஷேஷ நாட்களில் அவ்வூர் நகரத்தார்கள் இங்கு வந்து அவரவர் மடங்களில் தங்கிக் கொள்வதும் இங்கே அன்னதானம் வழங்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகின்றது. விஷேஷம் முடிந்த பிறகு அவரவர் ஊர்களுக்கு திரும்பி விடுகின்றனர். மீண்டும் விஷேஷம் வரும் போது இம்மடங்கள் திருவிழா கோலம் பூண்டு காட்சியளிக்கும்.



மேலும் படங்களைக் காண இங்கே செல்க.

நகரத்தாரின் கடல் கடந்த பயணங்கள்

வணக்கம்.

பொதுவாக நகரத்தார் என்ற வழக்கு செட்டியார் சமூகத்தினரைக் குறிக்கும். நகரத்தார் சமூக மக்கள், அவர்கள் வாழ்க்கை முறை, திருமண முறைகள், கடல் கடந்து பயணித்து பல கிழக்காசிய நாடுகளில் அவர்கள் காலோச்சிய வரலாறு ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வதும் தமிழக வரலாற்றை ஆய்வதின் ஒரு பகுதியாகவே அமையும். 19ம் நூற்றாண்டு மட்டுமன்றி 15ம் நூற்றாண்டில் மலாயா தீபகற்பம், ஜாவா தீவு, தாய்லாந்து எனப பல நாடுகளுக்குச் சென்று வியாபரம் செய்ததோடு மட்டுமல்லாது தாங்கள் சென்ற நாடுகளில் தங்கி தமிழ் வம்சாவளியினர் இன்றும் பல கிழக்காசிய நாடுகளில் வாழ்வதற்கு அடிப்படையை அமைத்துக் கொடுத்தவர்களாக இச்சமூகத்தினர் இருக்கின்றனர்.

நகரத்தார் சமூகம் பற்றி ஆய்வு செய்து அதனை ஒரு நூலாக வெளியிட்டிருப்பவர் டாக்டர்வள்ளி அவர்கள். இவர் நகரத்தார் சமூகத்தைச் சார்ந்த ஒருவர், பிள்ளையார்பட்டி கோயில் வகையைச் சேர்ந்தவர். இவர்கள் குடும்பத்தினரும் இப்பிள்ளையார்பட்டி கோயிலின் அறங்காவலர்கள் குழுவில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இவரிடம் நகரத்தார் சமூகம் பற்றிய தகவல்களைக் பகிர்ந்து கொள்ளுமாரு கேட்ட போது..

-நகரத்தார் சமூகம் பாய்கட்டி கப்பல் (பாய்மரக் கப்பல்) மூலமாக கல்கத்தா சென்று -
அங்கிருந்து பர்மா மற்ற ஏனைய கிழக்காசிய நாடுகளுக்குச் சென்ற விஷயங்கள்
-விடுதி, சத்திரம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள்
-காசியில் உள்ள நாட்கோட் சத்திரம் இன்றைக்கும் பிரபலமாக இருக்கும் ஒரு நாட்டுக் கோட்டைச்சத்திரம் என்னும் தகவல்
-கல்கத்தா காசி தொடர்புகள்
-அலகாபாத் கயா, பம்பாய் போன்ற இடங்களில் நகரத்தார் பயணங்கள்
-மிளகு நகரத்தார் விற்பனைக்காகக் கொண்டு சென்ற பொருட்களில் முக்கிய அங்கம் வகித்த தகவல்கள்
-பர்மாவில் ஐராவதி நதிக்கரையில் இங்கிருந்து கொண்டு சென்ற பணியாட்களைக் கொண்டு அங்கே நெல் பயிரிடுதலில் ஈடுபட்ட செய்திகள்
-லேவாதேவி எனப்படும் கொடுக்கல் வாங்கல் பழக்கம் உருவான தகவல்
-பர்மா அரிசியை பயிரிட்டு ஐரோப்பா வரை கொண்டு சென்று வியாபாரம் செய்யத் தொடங்கிய பின்னர் நகரத்தார் வளம் பொருந்திய சமூகமாக ஆகிய செய்திகள்
-பர்மா தேக்கு மரங்களை தமிழகத்துக்குக் கொண்டு வந்த செய்திகள்
-மலேசியாவிலும் ரப்பர் செம்பனை போன்ற வளம் தரும் பயிர் தொழிலில் ஈடுபட்டு செல்வந்தர்களாக வளர்ந்த செய்திகள்
-தங்கள் வருமானத்தில் ஒரு பங்கினை தர்ம கணக்கு என்று கொடுக்கும் பழக்கம்
தர்ம கணக்கின் வழி சேகரித்த வருமானத்தில் பல திருக்கோயில் பணிகளில் நகரத்தார் சமூகத்தினர் ஈடுபட்ட செய்திகள்
-1850 வாக்கிலேயே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஆலய திருப்பணி நிகழ்த்திய செய்திகள், இதுபோல பல ஆலயங்களின் திருப்பணிகளில் ஈடுபட்ட செய்திகள்..
-நகரத்தார் ஆலயத் திருப்பணிகள் மட்டுமன்றி சமூகத் தேவைகளுக்கும் தங்கள் வருமானத்தில் சில பகுதியை ஒதுக்கி சேவை செய்திருக்கின்றனர், 1947ல் அழகப்பா செட்டியார் போட்ட சாலை தான் ரயில்வே ஸ்டேஷன் சாலை. சாலை கட்டிய பணிகள் கல்வெட்டுக்கலில் பொறித்து வைத்திருப்பதால் இப்பணிகள் பற்றிய தகவல்கள் சான்றுகளாக அமைந்திருக்கின்றன என்பன..
-மலாயா, பர்மா போன்ற நாடுகளில் உண்டியல் (On Demand Transaction) முறையை புழக்கத்திற்கு கொண்டு வந்தவர்கள் நகரத்தார்கள். இது பேச்சு வழக்கில் அண்டிமண்டு ஆவணம் என வழங்கப்படும் செய்திகள்..
-நகரத்தார் தங்கள் வீட்டில் மிகச் சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள்: ஆனால் கோயில் திருப்பணிகள் என்று வரும் போது தயங்காமல் திருப்பணிக்காக பணத்தை வழங்கும் தன்மையுடைவர்கள் என்னும் செய்திகள்
-நகரத்தார்கள் ஒன்பது கோயில் வகைகளுக்குள் அடங்குவர்: திருமண பந்தம் என்று வரும் போது ஒரு கோயிலைச் சேர்ந்தர்கள் மற்ற கோயிலைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்வதே முறையாக கருதப்படுவதும் ஒரு கோயிலைச் சேர்ந்தவர்களுக்குள் திருமணம் செய்வது தடை செய்யப்படும் என்ற செய்திகள்
-குழந்தைகள் தத்தெடுத்தல் எனும் போது நகரத்தார் சமூகத்தில் ஒரே கோயிலைச் சேர்ந்தவர்களையே தத்தெடுத்துக் கொள்வார்கள் எனும் செய்திகள்..

இப்படி பல சுவாரசியமான தகவல்களைச் சாதாரண செட்டி நாட்டுப் பேச்சுத் தமிழில் வழங்கியிருக்கின்றார்.

காரைக்குடி மையத்திலிருந்து பிள்ளயார்பட்டி செல்லும் வரை காரிலேயே இந்தப் பேட்டியை பதிவு செய்தேன். சாலை இறைச்சல் சத்தம் கொஞ்சம் பதிவை பாதித்திருக்கின்றது. ஆனாலும் தெளிவான பதிவு. இந்த 17 நிமிடப் பதிவில் பல செய்திகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

நண்பர்களே, கேட்டு உங்கள் கருத்துக்களையும் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதிவு

டாக்டர்.கண்ணன், பாலு, டாக்டர்.காளைராசன், டாக்டர்.வள்ளி





டாக்டர்.கண்ணன், டாக்டர்.வள்ளி, சுபா


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness