பொதுவாக நகரத்தார் என்ற வழக்கு செட்டியார் சமூகத்தினரைக் குறிக்கும். நகரத்தார் சமூக மக்கள், அவர்கள் வாழ்க்கை முறை, திருமண முறைகள், கடல் கடந்து பயணித்து பல கிழக்காசிய நாடுகளில் அவர்கள் காலோச்சிய வரலாறு ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வதும் தமிழக வரலாற்றை ஆய்வதின் ஒரு பகுதியாகவே அமையும். 19ம் நூற்றாண்டு மட்டுமன்றி 15ம் நூற்றாண்டில் மலாயா தீபகற்பம், ஜாவா தீவு, தாய்லாந்து எனப பல நாடுகளுக்குச் சென்று வியாபரம் செய்ததோடு மட்டுமல்லாது தாங்கள் சென்ற நாடுகளில் தங்கி தமிழ் வம்சாவளியினர் இன்றும் பல கிழக்காசிய நாடுகளில் வாழ்வதற்கு அடிப்படையை அமைத்துக் கொடுத்தவர்களாக இச்சமூகத்தினர் இருக்கின்றனர்.
நகரத்தார் சமூகம் பற்றி ஆய்வு செய்து அதனை ஒரு நூலாக வெளியிட்டிருப்பவர் டாக்டர்வள்ளி அவர்கள். இவர் நகரத்தார் சமூகத்தைச் சார்ந்த ஒருவர், பிள்ளையார்பட்டி கோயில் வகையைச் சேர்ந்தவர். இவர்கள் குடும்பத்தினரும் இப்பிள்ளையார்பட்டி கோயிலின் அறங்காவலர்கள் குழுவில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரிடம் நகரத்தார் சமூகம் பற்றிய தகவல்களைக் பகிர்ந்து கொள்ளுமாரு கேட்ட போது..
-நகரத்தார் சமூகம் பாய்கட்டி கப்பல் (பாய்மரக் கப்பல்) மூலமாக கல்கத்தா சென்று -
அங்கிருந்து பர்மா மற்ற ஏனைய கிழக்காசிய நாடுகளுக்குச் சென்ற விஷயங்கள்
-விடுதி, சத்திரம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள்
-காசியில் உள்ள நாட்கோட் சத்திரம் இன்றைக்கும் பிரபலமாக இருக்கும் ஒரு நாட்டுக் கோட்டைச்சத்திரம் என்னும் தகவல்
-கல்கத்தா காசி தொடர்புகள்
-அலகாபாத் கயா, பம்பாய் போன்ற இடங்களில் நகரத்தார் பயணங்கள்
-மிளகு நகரத்தார் விற்பனைக்காகக் கொண்டு சென்ற பொருட்களில் முக்கிய அங்கம் வகித்த தகவல்கள்
-பர்மாவில் ஐராவதி நதிக்கரையில் இங்கிருந்து கொண்டு சென்ற பணியாட்களைக் கொண்டு அங்கே நெல் பயிரிடுதலில் ஈடுபட்ட செய்திகள்
-லேவாதேவி எனப்படும் கொடுக்கல் வாங்கல் பழக்கம் உருவான தகவல்
-பர்மா அரிசியை பயிரிட்டு ஐரோப்பா வரை கொண்டு சென்று வியாபாரம் செய்யத் தொடங்கிய பின்னர் நகரத்தார் வளம் பொருந்திய சமூகமாக ஆகிய செய்திகள்
-பர்மா தேக்கு மரங்களை தமிழகத்துக்குக் கொண்டு வந்த செய்திகள்
-மலேசியாவிலும் ரப்பர் செம்பனை போன்ற வளம் தரும் பயிர் தொழிலில் ஈடுபட்டு செல்வந்தர்களாக வளர்ந்த செய்திகள்
-தங்கள் வருமானத்தில் ஒரு பங்கினை தர்ம கணக்கு என்று கொடுக்கும் பழக்கம்
தர்ம கணக்கின் வழி சேகரித்த வருமானத்தில் பல திருக்கோயில் பணிகளில் நகரத்தார் சமூகத்தினர் ஈடுபட்ட செய்திகள்
-1850 வாக்கிலேயே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஆலய திருப்பணி நிகழ்த்திய செய்திகள், இதுபோல பல ஆலயங்களின் திருப்பணிகளில் ஈடுபட்ட செய்திகள்..
-நகரத்தார் ஆலயத் திருப்பணிகள் மட்டுமன்றி சமூகத் தேவைகளுக்கும் தங்கள் வருமானத்தில் சில பகுதியை ஒதுக்கி சேவை செய்திருக்கின்றனர், 1947ல் அழகப்பா செட்டியார் போட்ட சாலை தான் ரயில்வே ஸ்டேஷன் சாலை. சாலை கட்டிய பணிகள் கல்வெட்டுக்கலில் பொறித்து வைத்திருப்பதால் இப்பணிகள் பற்றிய தகவல்கள் சான்றுகளாக அமைந்திருக்கின்றன என்பன..
-மலாயா, பர்மா போன்ற நாடுகளில் உண்டியல் (On Demand Transaction) முறையை புழக்கத்திற்கு கொண்டு வந்தவர்கள் நகரத்தார்கள். இது பேச்சு வழக்கில் அண்டிமண்டு ஆவணம் என வழங்கப்படும் செய்திகள்..
-நகரத்தார் தங்கள் வீட்டில் மிகச் சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள்: ஆனால் கோயில் திருப்பணிகள் என்று வரும் போது தயங்காமல் திருப்பணிக்காக பணத்தை வழங்கும் தன்மையுடைவர்கள் என்னும் செய்திகள்
-நகரத்தார்கள் ஒன்பது கோயில் வகைகளுக்குள் அடங்குவர்: திருமண பந்தம் என்று வரும் போது ஒரு கோயிலைச் சேர்ந்தர்கள் மற்ற கோயிலைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்வதே முறையாக கருதப்படுவதும் ஒரு கோயிலைச் சேர்ந்தவர்களுக்குள் திருமணம் செய்வது தடை செய்யப்படும் என்ற செய்திகள்
-குழந்தைகள் தத்தெடுத்தல் எனும் போது நகரத்தார் சமூகத்தில் ஒரே கோயிலைச் சேர்ந்தவர்களையே தத்தெடுத்துக் கொள்வார்கள் எனும் செய்திகள்..
இப்படி பல சுவாரசியமான தகவல்களைச் சாதாரண செட்டி நாட்டுப் பேச்சுத் தமிழில் வழங்கியிருக்கின்றார்.
காரைக்குடி மையத்திலிருந்து பிள்ளயார்பட்டி செல்லும் வரை காரிலேயே இந்தப் பேட்டியை பதிவு செய்தேன். சாலை இறைச்சல் சத்தம் கொஞ்சம் பதிவை பாதித்திருக்கின்றது. ஆனாலும் தெளிவான பதிவு. இந்த 17 நிமிடப் பதிவில் பல செய்திகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.
நண்பர்களே, கேட்டு உங்கள் கருத்துக்களையும் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பதிவு
டாக்டர்.கண்ணன், பாலு, டாக்டர்.காளைராசன், டாக்டர்.வள்ளி
டாக்டர்.கண்ணன், டாக்டர்.வள்ளி, சுபா
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
2 comments:
மிகச் சுவையான தகவல்கள். நாட்டுக்கோட்டை வட்டார வழக்கில் கேட்பதற்கு மிகவும் இனிமை. புகைப்படமும் அருமை. மிக நல்ல முயற்சி. பகிர்விற்கு நன்றியும், வாழ்த்துகளும்.
மிகவும் பயனுள்ள பதிவு. நான் காத்துக்கொண்டிருந்தேன், இதற்காக. எனக்கு காரைக்குடி பிறந்த மண் அல்லவா. என் அம்மாவும் நகரத்தாரின் பெருமைகளை பதிவு செய்ததை, பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்த அண்டிமண்டு ஆவணம் ஒரு அருமையான புதுமை, அக்காலம். இந்தியா முழுதும் பரவியிருந்தது. ஸர் வில்லியம் ஸ்லீமென் அது பற்றி எழுதியிருக்கிறார்.
இன்னம்பூரான்
Post a Comment