நண்பர்களே,
இம்மாத மண்ணின் குரலை தமிழக வரலாற்றுப் பதிவு ஒன்றுடன் தொடங்குவதில் மகிழ்கிறேன். அண்மையில் டாக்டர் பத்மாவதி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்த போது அவரது தற்போதைய ஆய்வாக அமைந்திருக்கும் களப்பிரர்கள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டோம். இவரது ஆய்வு முழுமை பெற்று புத்தக வடிவில் வெளியிடப்பட உள்ளது. இந்த நூல் வெளியீடு காண்பதற்கு முன்னரே அவருடன் இந்த ஆய்வு குறித்த தகவலை நமது மண்ணின் குரல் பதிவுக்காக ஒலிப்பதிவு செய்து வந்தேன். அந்த ஒலிப்பதிவின் இரண்டு பகுதிகள் இந்த மாத வெளியீட்டில் இடம் பெறுகின்றன. இதன் தொடர்ச்சி அடுத்த மாதமும் தொடரும்.
பகுதி 1
களப்பிரர் காலம் என்பதை நிர்ணயிப்பது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கி.பி.3 முதல் கி.பி 6 வரை களப்பிரர்கள் ஆட்சி தமிழ் மண்ணில் இருந்தது என்பதை சற்று உறுதியாகக் கூறலாம். களப்பிரர்கள் எங்கிருந்து வந்து இங்கே ஆட்சி செய்தார்கள் என்பதற்கு சான்றுகள் மிக மிகக் குறைவாக இருந்ததாலும் இந்தக் கால கட்டத்தை நிர்ணயிப்பதில் உதவுவதாக அமைவது 1940ல் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு கிடைத்த வேள்விக் குடி செப்பேடு. இந்தச் செப்பேட்டில் தான் களப்பரர் எனப்படுபவர்கள் தமிழ் மண்ணில் அச்சமயம் ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர்கள் பலரை துரத்தி விட்டு ஆட்சி செய்யத் தொடங்கினர் என்ற செய்திகள் கிடைக்கத் தொடங்கின.
பெரிய புராணத்தில் வருகின்ற சில நாயன்மார்கள் புராணங்களில் உள்ள செய்திகள், யாப்பெருங்கல விருத்தி போன்றவை களப்பிர மன்னன் அச்சுத விக்கந்தன் என்பவன் பாண்டி நாட்டை ஆண்டு வந்தான் என்பதை குறிக்கின்றன. இதுவரை கிடைத்திருக்கின்ற சில தனிப்பாடல்களிலும், பாலி மொழி இலக்கியங்கள் சிலவற்றிலும் கூட இக்கருத்து தொடர்பான தகவல்கள் கிடைக்கின்றன. சில இடங்களில் கிடைத்த 3ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் சிலவற்றிலும் சில தகவல்கள் களப்பிரர் பற்றிய சான்றுகளைக் கூறுவதாக அமைந்திருந்தாலும் பூலாங்குறிச்சியில் கிடைத்த ஒரு கல்வெட்டு மிகத் தெளிவான சான்றுகளைக் கொண்டிருக்கின்றது என்று கூறலாம்.
இவை மட்டுமன்றி களப்பிரர்கள் எங்கிருந்து வந்தனர். சில மன்னர்களின் பெயர் என பல்வேறு தகவல்களை விளக்குகின்றார் டாக்டர் பத்மாவதி.
பகுதி 2
பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கள ஆய்வில் பௌத்த விகாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்பான ஆய்வுகள் களப்பிரர் இப்பகுதியில் ஆட்சி செய்தமயைக் குறிப்பனவாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் தஞ்சாவூர் மாவட்டம் முழுதும் களப்பிரர் ஆட்சி இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. மதுரையில் பல உறுதியான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இன்றைய கடலூர் என்று குறிப்பிடப்படும் பாடலிபுரம் பகுதியிலும் பல சமண கடிகைகள் இருந்திருக்கின்றன. காஞ்சிபுரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகள் இருந்திருக்கின்றன. களப்பிரர்கள் பௌத்தத்தையே பின்பற்றியவர்களாக இருந்திருந்திருக்கின்றனர். கடல் கடந்து சென்று வணிகம் செய்தவர்கள் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததால் பல ஆசிய நாடுகளில் பௌத்தம் பரவியது. இத்தகவல்கள் மட்டுமன்றி இதுவரை கிடைத்திருக்ககின்ற சான்றுகளிலிருந்து நமக்கு அறியக்கிடைக்கும் களப்பிற மன்னர்களின் பெயர்களையும் டாக்டர் பத்மாவதி இப்பகுதியில் குறிப்பிடுகின்றார்.
இப்பதிவுகளைக் காண மண்ணின் குரல் வலைப்பக்கம் செல்க. இதன் முழு தொடர்ச்சியும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கே தொடர்ந்து இணைக்கப்பட்டு வெளியிடப்படும்.
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
களப்பிரர் மன்னர்களின்வரலாற்று ஆய்வுகளை பகிர்ந்து கொண்ட டாடர் பத்மாவதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தெளிவான , அழகான விளக்கங்கள். அடுத்த பகுதிக்காக காத்திருப்போம். நன்று, நன்றி சுபா
NIce.. very usefull..
அருமை
தமிழ் இலக்கிய உலகிற்கும், தமிழர் சமூகத்துக்கும்,மிகவும் பயனுள்ள நற்பணி.
பத்மாவதி அம்மையாருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.
இந்தத் தகவலை நாங்கள் அறியச் செய்தமைக்க்கு மிக்க நன்றி,சுபா அவர்களே!
அருமை.
அருமை
Post a Comment