வெள்ளோடு ராசா கோயில்


வணக்கம்

தமிழகம் முழுமைக்குமே குலதெய்வ வழிபாடு என்பது இன்றளவும் முக்கிய அங்கம் வகிப்பதாக அமைந்திருக்கின்றது. குலதெய்வ வழிபாட்டில் பல வகை கடவுள்கள் இருபதைக் காண்கின்றோம். ராசா சாமிக் கோயில் என்பது ஈரோட்டுக்கு அருகில் வெள்ளோடு என்ற சிற்றூரில் இருக்கின்றது. புலவர் ராசு அவர்கள் குடும்பத்தினரின் குலதெய்வக் கோயில் இந்த ராசா கோயில்தான்.

தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் இந்த வருடம் ஜனவரி மாதம் ஈரோடு சென்றிருந்த சமயம் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுலா மேற்கொண்டு சில குறிப்பிட்ட இடங்களுக்குப் பயணித்தோம். அப்படி செல்கையில் எங்களுடன் உடன் வந்திருந்த புலவர்.ராசு அவர்கள் தனது குலதெய்வ கோயிலுக்கு எங்களை அழைத்துச் சென்று வழிபாடு செய்ய வைத்து அக்கோயில் பற்றியும் தன் வாழ்வில் இந்தக் குலதெய்வத்தின் தாக்கம பற்றியும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

புலவர் ராசு அவர்களின் இயற்பெயர் மயில்சாமி என்பது. இவருக்கு 3 வயதாக இருக்கும் போது ஜன்னி வந்து மிகுந்த சிரமப்பட்ட நிலையில் பெற்றோர்கள் இவர் இறந்து விட்டதாகவே கருதிவிட்டனர். உறவினர்களிடமெல்லாம் விவரம் தெரிவித்து குழந்தையை அடக்கம் செய்து விட முடிவாகிவிட்ட நிலையில் புதைப்பதற்கு குழியும் வெட்டி தயார் செய்து விட்டனர். புதைப்பதற்காக ஒரு தொட்டிலில் போட்டு சுடுகாட்டிற்குக் கொண்டு செல்லும் தருவாயில் உள்ளூரில் உள்ள ஒரு முடிதிருத்துவோர் குடும்பத்து பெண்மணி ஒருவர் அங்கு வந்து யாரும் வருந்த வேண்டாம் எனச் சொல்லி ஒரு கம்பியை பழுக்கக் காய்ச்சி உடலில் தீட்டியிருக்கின்றார். இந்தத் தழும்பு இன்னமும் அவர் உடலில் இருப்பதாகச் சொல்கின்றார். சூடு பட்டதும் இவர் திடீரென்று அழ ஆரம்பித்திருக்கின்றார். பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் பேரானந்தம். இந்தப் பெண்மணி எப்படி அங்கு வந்தார் என்பது ஆச்சயரியமாகப் பட பெற்றோரும்  கேட்க ராசா சாமி கனவில் வந்து சொன்னதாகவும் அதனால் இங்கே ஓடோடி வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். அதோடு ராசா சாமி தனது பெயரை இக்குழந்தைக்கு வைக்கச்சொன்னதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இதனால் மயில்சாமி ராசாவாக மாறி இப்போது முனவர் புலவர் ராசுவாக அழைக்கப்படுகின்றார்.

ராசா கோயிலின் பழயை கோயில் திருப்பணி இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பக்கத்திலேயே சுவாமியை இடம் மாற்றி வைத்து இத்திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் இப்பதிவில் புலவர் ராசு அவர்கள் இந்த குலதெய்வ சாமி பற்றிய கதையையும் விவரிக்கின்றார். கேட்டுப் பாருங்கள்.
















அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

கலைமகள் பள்ளி அருங்காட்சியகம்


ஈரோடு கலைமகள் பள்ளியில் கொடுமணல் ஆய்வின் போதும் மேலும் ஈரோட்டின் வேறு சில பகுதிகளிலும் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளின் போதும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், சிற்பங்கள் மிகச் சிறப்பாக காட்சி வைக்கப்பட்டுள்ளதோடு  பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

8.1.2012 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் நண்பர்களுடன் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து  இந்த அருங்காட்சிப் பொருட்களை பார்த்து புலவர் ராசு அவர்கள் வழங்கிய விளக்கத்தையும் பெற்றோம்.

கொடுமணல் ஆய்வு பற்றியும், கலைமகள் பள்ளி பற்றியும், புலவர் ராசு அவர்களின் ஆய்வுகள், முயற்சிகள் பற்றியும் அவர் விளக்கம் தரும் ஒரு ஒலிப்பதிவை முதலில் கேட்பது அறிமுகமாக அமையும்.

மண்ணின் குரல் வெளியீடு.
  
கலைமகள்  அருங்காட்சியகத்தில் வைக்கபப்ட்டுள்ள கல்வெட்டுக்கள், சிற்பங்கள் பற்றி புலவர் ராசு அவர்கள் விளக்கம் அளிக்கின்றார்.
  
 
புலவர் ராசு விளக்கம் அளிக்கின்றார். 

முழு பதிவையும் காண இங்கே செல்க.

அன்புடன் சுபா

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness