சமண சமயம் புகழ் பெற்று விளங்கிய நகரங்களில் கோவை மாவட்டமும் சிறப்பிடம் பெறுகின்றது. கோவையில் பெறுந்துறை நகருக்கு அருகில் உள்ள விஜயமங்கலத்தில் எட்டாவது சமண தீர்த்தங்கரர் சந்திரபிரபர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குத் தமிழ் நாடு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர் புலவர் ராசு அவர்களுடன் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் ஜனவரி 2012ம் ஆண்டு சென்றிருந்த போது செய்யப்பட்ட பதிவுகள் மண்ணின் குரல் வெளியீடுகளாகப் பதிப்பிக்கப்படுகின்றன.
இந்தப் பதிவுகள் புகைப்படங்களாகவும், மூன்று ஒலிப்பதிவு கோப்புக்களாகவும், இரண்டு வீடியோ விழியப் பதிவுகளாகவும் முழுமை பெறுகின்றன.
பத்தாம் நூற்றாண்டு கங்கத் தளபதி சாமுண்டராயன் தங்கை புள்ளப்பை சல்லேகனை விரதமிருந்து உயிர் நீத்த சிற்பம் ஒரு தூணில் கல்வெட்டுடன் உள்ளது.
இந்தக் கோயில் கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மஹாமண்டபம், அடுத்து வாத்தியமண்டபம், நிருத்த மண்டபம்என்று ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது
கோயில் மண்டபத்தின் நான்கு புறங்களிலும் சிற்பங்கள் நிறைந்துள்ளன.
இங்கு வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ஸ்ரீ புராணத்தைத் தழுவிய சிற்பங்கள். இவ்வகைச் சிற்பங்கள் தமிழகத்தில் இரண்டே இடங்களில் மட்டும் இருப்பதாகக் குறிப்பிடுகின்றார் புலவர் ராசு. ஒன்று காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக் குன்றத்தில் உள்ள ஜிரகாஞ்சி என்ற கோயிலிலே ஓவிய வடிவில் இருப்பதாகவும் அடுத்ததாக இந்தக் கோயிலிலும் உள்ளன.
கருவறையில் மிகப் பெரிய சந்திரப்பிரப தீர்த்தங்கரர் உருவம் சுதையால் செய்யப்பட்டிருந்தது. அது சிதைந்து அழிந்தபின் அபிஷேகத்திற்கு வைத்திருந்த 30 செ.மீ உயரம் உள்ள சிறு சிலையை கருவறையில் தற்சமயம் வைத்துள்ளனர். அர்த்தமணடபத்தில் வர்த்தமான மகாவீரர் உருவச்சிலையை வைத்து வழிபடுகின்றனர்.மகாமண்டபத்தில் அரசண்ணா மலையிலிருந்து கொண்டு வந்த நேமிநாதர் இயக்கி ஷுஷ்மாண்டினி உருவங்கள் உள்ளன. வாத்தியமண்டபத்தில் சந்திரப்பிரப தீர்த்தங்கரரின் இயக்கியான சுவாலாமாலினி உருவச் சிலை சிறு அறையில் உள்ளது. வாத்திய மண்டபத்தில் ஆதிநாதர், கொங்குவேளிர், தமிழ்ப்புலவர்கள், பவணந்தி, சீயகங்கள்,கொங்கு வேளிரின் அடிமைமாது ஆகியோர் கற்சிலைகள் உள்ளன.
நிருத்தமண்டபத்தில் ஆதிநாதரின் தோற்றம் முதல் அவர் பரிநிர்வாணம் அடையும் வரை ஸ்ரீபுராணம் சிற்பத் தொகுதிகள் உள்ளன. கொங்கு வேளிர் பெருங்கதையை இயற்றியதைக் குறிக்கும் நாகரிக் கல்வெட்டு சேததப்படுத்தப்பட்டுவிட்டது. கருவரையில் சமவசரணம் ஓவியம் உள்ளது.
இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் பற்றிய செய்திகளை விளக்கும் உரையும் அடங்கும் தான் வாசித்து இன்னமும் தனக்கு நினைவில் இருக்கும் 7ம் நூற்றாண்டு வரலாற்றைக் கூறும் சில கல்வெட்டுக்கள் கோயில் புணரமைப்பின் போது சேதப் படுத்தப்பட்ட வருத்தம் தரும் செய்தியையும் கூறுகின்றார்.
பத்தாம் நூற்றாண்டு கங்கத் தளபதி சாமுண்டராயன் தங்கை புள்ளப்பை சல்லேகனை விரதமிருந்து உயிர் நீத்த சிற்பம் ஒரு தூணில் கல்வெட்டுடன் உள்ளது.
இந்த ஆலயத்தில் கோமுக யட்ஷன், சக்கரேஸ்வரி ஆகியோரின் அழகிய சிற்பங்கள் தீர்த்தங்கரர் சிலையைச் சுற்றி வடிக்கப்பட்டுள்ளன.
24 தீர்த்தங்கரர்கள் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் அமைக்கபப்ட்ட சிற்பங்கள் தமிழகத்தில் நான்கே இடங்களில் இருக்கின்றன. கழுகுமலை, திருநாதர் குன்று, காஞ்சிபுரம், அடுத்து இங்கே விஜயமங்கலம்.
கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டுக்களை வாசித்துக் காட்டும் பகுதி.
துணைக்குறிப்பு: ஈரோடு மாவட்ட வரலாறு - செ.இராசு.
புகைப்படங்கள், ஒலிப்பதிவு வீடியோ பதிவு: சுபா
ஏற்பாடு உதவி: பவளசங்கரி, ஆரூரன், புலவர்.செ.இராசு.
இந்த மண்ணின் குரல் பதிவை இங்கே சென்று காணலாம்.
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]