புதிய தமிழ் வாழ்த்து

மலேசிய எழுத்தாளர் சங்கம் ஜனவரி 23ம் தேதி வெளியிட்டுள்ள புதிய தமிழ் வாழ்த்துப்பாடல்.








நிலைபெறநீ வாழியவே!
ஆக்கம்: கவிஞர் சீனி நைனா முகம்மது
இசை: ஆர்.பி.எஸ்.ராஜூ
குரல்: துருவன், பாபு லோகநாதன்

காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!

எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
புரட்சிவலம் வருபவளே!

செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!

குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!

வெளியீட்டு விழாப்படங்கள் காண இங்கே சொடுக்குக!

பாடல் தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சொடுக்குக!

11 comments:

நா. கணேசன் | January 27, 2011 at 10:11 AM

நன்றாக இருக்கிறது.

VELU.G | January 27, 2011 at 2:16 PM

ரொம்ப நல்ல இருக்குங்க

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' | January 27, 2011 at 3:25 PM

இசை இனிமையாகவும் பொருள் அருமையாகவும், பொதுவில் பெருமையாக இருக்கிறது.

Ilakkuvanar Thiruvalluvan | January 28, 2011 at 12:47 AM

உலகோர்க்கேற்ற நல்ல தமிழ் வாழ்த்துப்பாடல். அறிஞர் சீனி நைனா முகம்மது அவர்களுக்கும் பாடற் கலைஞர்களுக்கும் மலேசிய எழுத்தாளர் சங்கத்திற்கும் பாராட்டுகள். வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Unknown | January 28, 2011 at 6:23 AM

அருமையான பாடல், தரவிறக்க வசதி தந்தால் மகிழுந்துகளிலும் பிறவிடங்களிலும் ஒலிக்க இயலும். நன்றி. தமிழ்நாடன்

Dr.N.Kannan | January 29, 2011 at 10:04 AM

வெளியீட்டுவிழாப் படங்களும், தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் இப்போது இணைக்கப்பட்டுள்ளன!

துளசி கோபால் | January 31, 2011 at 7:43 AM

ரொம்ப இனிமையான ராகத்தோடு நல்லா இருக்குங்க.

இசை அமைத்தவர்களுக்கு என் இனிய பாராட்டுகள்.

பொருள் பதிந்த பாடல். எழுதியவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

எங்க ஊர் தமிழ்ச்சங்கத்துலே பாடலாம் என்று இருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் | January 31, 2011 at 9:37 AM

பொருளும் சுவையும் இனிமையும் கூடி நிற்கும் இந்தப் பாடல் கேட்கவும் நன்றாக இருக்கிறது.

Anonymous | February 7, 2011 at 3:11 PM

அருமையான வரிகள், இனிமையான இசை, வளமான குரல் தமிழ் தமிழ் தான். உண்டோ ஒரு மொழி தமிழுக்கீடாய்?

Unknown | February 7, 2011 at 3:16 PM

அருமையான வரிகள், இனிமையான இசை, வளமான குரல் தமிழ் தமிழ் தான். உண்டோ ஒரு மொழி தமிழுக்கீடாய்?

Unknown | February 7, 2011 at 3:16 PM

அருமையான வரிகள், இனிமையான இசை, வளமான குரல் தமிழ் தமிழ் தான். உண்டோ ஒரு மொழி தமிழுக்கீடாய்?

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness