குன்றக்குடி குடவரை கோயிலுக்கு அருகாமையிலேயே வடக்கு நோக்கிய பகுதியில் அமைந்துள்ள பாறைகள் உள்ள பகுதியில் சமணப்படுகைகள் உள்ள ஒரு குகை உள்ளது. சற்றே குன்று போன்ற மலைப்பாங்கான பகுதி இது. இங்கே அமைந்துள்ள ஒரு குகையில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதொரு சமணப் பள்ளி இருந்ததற்கானச் சான்றுகள் உள்ளன. இப்பகுதி ஞானியார் மலை என பேச்சு வழக்கில் இன்று வழங்கப்படுகின்றது.
இந்தப் பாறைகளைக் கவனிக்கும் போது மிகக் கவனமாகவும் நேர்த்தியாகவும் செதுக்கப்பட்ட காடி எனும் பகுதியை மேற்புறத்தில் காண முடிகின்றது. காடி என்பது பாறைகளில் மழை நீர் விழும் போது அம்மழை நீர் நேராகக் குடைக்குள் சென்று விழாத வண்ணம் தடுக்கச் செய்யப்படும் ஒரு ஏற்பாடு. இப்படி செய்வதனால் மழை நீர் தெரித்து சாரல் உள்ளே இருப்பவர்களின் மேல் விழாத வண்ணம் தடுக்க முடிகின்றது.
பாறைகளைச் செதுக்கவும் படுகைகளை ஏற்பாடு செய்யவும் ஏற்படும் செலவுகளை ஏற்றுக் கொண்டு இப்படுகைகளை அமைத்துக் கொடுத்தவர்களின் பெயர்களைப் பாறைகளிலேயே குறித்து வைப்பதும் வழக்கமாக இருந்திருக்கின்றது. இந்த ஞானியார் மலை பாறையிலும் இதனை அமைக்க உதவிய ஆதன் சாத்தன் என்பவரின் பெயர் தமிழ் பிராமி எழுத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்தின் வடிவத்தின் அடிப்படையில் இந்தப் பாறை கி.மு காலகட்டத்தில் அமைக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று டாக்டர்.வள்ளி குறிப்பிடுகின்றார்.
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]