களப்பிரர் காலம் - ஆய்வுத் தகவல்கள் - 3
பதிவு 4
களப்பிர மன்னர்களை ஆட்சியிலிருந்து நீக்கி பாண்டிய மன்னனை மீண்டும் ஆட்சிப் பொருப்பில் அமர்த்துவது திடீரென்று நிகழ்ந்த ஒரு செயலாக இருக்க முடியாது. ஊர்த்தலைவர்கள், சமணர்கள் ஆகியோரது பெறும் ஆதரவு இம்மாற்றத்திற்கு ஆதாரமாக இருந்திருக்க வேண்டும். இதற்கு சான்றுகள் இருக்கின்றனவா என்ற வகையில் இந்தப் பேட்டி தொடங்குகின்றது.
களப்பிறர்கள் ஆட்சியைக் கைப்பற்ற துணையிருந்த கரவந்தபுரவாசிகளைப் பற்றிய குறிப்புக்கள் பரவலாகக் கிடைக்காமல், சமணப்பள்ளிகள் தொடர்பான தகவல்கள் அதிகமாகக் செப்பேட்டுச் சான்றுகளில் கிடைக்கின்றன. இதற்குக் காரணமென்ன என்று அலசி அதற்கான காரணங்களையும் இப்பதிவு வரிசைப்படுத்துகின்றது.
பதிவு 5
களப்பிறர்கள் பற்றிய ஆய்வுகள் சில ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமை பற்றியும் இவ்வாய்வுக்குத் தான் மேற்கொண்ட வழிமுறைகளைப் பற்றியும் விவரிக்கின்றார். இந்தப் பதிவு மிக வித்தியாசமான நோக்கில் பல்வேறு தகவல்களை வழங்குவதாக அமைந்துள்ளது.
குறிப்பாக
-பழமையான பெண் தெய்வ வழிபாடு
-இலக்கியங்களில் மங்கை என்ற தெய்வத்தைப் பற்றிய குறிப்புக்கள்
-மங்களம் என்ற ஊர் குறிப்புக்கள்
-கல்வெட்டுச் சான்றுகள்
-தாராதேவி எனப்படும் தெய்வம் பௌத்த வழிபாட்டு பெண் தெய்வம்.. மணிமேகலா தெய்வம்
-காம கோட்டம் என்ற சொற்குறிப்பிற்கான ஆரம்ப கால குறிப்புக்கள்..
-சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பல்வேறு வகையான கோட்டங்கள், ஊர்க்கோட்டம்..
இப்படி பல தகவல்களைப் பதிவதாக இந்தப் பதிவு அமைந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் பல இடங்களில் பௌத்த வழிபாட்டுச் சின்னங்களும் கோயில்களும் கிடைத்துள்ளன. காமகோட்டம் என்பது பௌத்த வழிபாட்டில் தாராதேவி எனப்படும் மணிமேகலா தெய்வத்துக்கான ஒரு வழிபாட்டுததலமாக இருந்திருக்க வேண்டும் என்று இப்பதிவு கூறுகின்றது.
சைவமும் வைஷ்ணவமும் வலிமைப் பெறத் தொடங்கும் போது ஏற்கனவே மக்கள் வழக்கத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த வழிபாடுகளை உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த தன்மையையும் இப்பேட்டி விளக்குகின்றது. அதுமட்டுமன்றி பல பெண் தெய்வக் கோயில்கள் சிவன் கோயில்களாக மாற்றப்பட்ட நிகழ்வுகளுக்கான சான்றுகளையும் கல்வெட்டுக்களிலிருந்து காண முடிகின்றது என்ற ஒரு செய்தியையும் இப்பதிவு விளக்குகின்றது.
கேட்டுப் பாருங்களேன்.
அன்புடன்
சுபா
நகரத்தாரின் கடல் கடந்த பயணங்கள் 2
இம்மாத மண்ணின் குரலில் மேலும் ஒரு பதிவு நகரத்தார் கடல் பயணங்கள் பற்றியதாக அமைந்துள்ளது. இந்தப் பதிவில் தொடர்ந்து பல தகவல்களைத் தொடர்ந்து வழங்குகின்றார் டாக்டர். வள்ளி.
-கடல் கோள் அழிவுகள்.. சிவகங்கங்கை பகுதியைத் தேர்ந்தெடுத்த நகரத்தார்கள்
-செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை
-கடல் பயணம் செல்லும் முன் பிள்ளைகளிடம் வாய்க்கரிசி வாங்கிக் கொண்டும் கூட செல்வது வழக்கமாக இருந்துள்ளமை..
-நகரத்தார் வீடுகளின் அமைப்பு
-மழை நீர் சேகரிப்பு எனும் கருத்தை மையமாக்கி அமைக்கப்படும் நகரத்தார் வீடுகள்
-நகரத்தார் வீடு அமைப்புகள் பற்றிய விளக்கம்: முகப்பு, திண்ணை. பெட்டகச்சாலை, வளவு, வீடு (அறைகள்), சமையல் பகுதி
-குடும்பத்தார் பலர் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் தனிச் சமையல்..
-இவ்வகையான பெரிய வீடுகளிலேயே தான் குடும்பத்தினரின் அனைத்து சிறப்பு விழாக்களும் நிகழ்வுகளும் நடைபெறும்..
-செட்டி நாட்டு இலக்கியங்கள்..கிராமியப் பாடல்கள்
தனது மாமியார் இறப்பதற்கு முன்னரே தனக்காக இவர் பாட வேண்டிய ஒப்பாரி பாடல்களைக்கூட சொல்லிச் சென்ற விஷயத்தையும் தனது இறப்பின் போது எந்தெந்த பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும், எந்தெந்த பொருட்கள் எங்கெங்கே இருக்கின்றன என்பதையும் தெளிவாக சொல்லிவைத்த கதையையும் சுவைபட சொல்கின்றார். கேட்டுப் பாருங்களேன்.
பதிவைக் கேட்க!
அன்புடன்
சுபா
[ தமிழ் மரபு அறக்கட்டளை ]
பென்னேஸ்வர மடத்து நடுகல்கள்
இவை நவகண்டம் எனப்படும் நடுகல்கள். ஒரு வீரன் தனது குடிகளுக்காகவோ அல்லது தனது அரசனுக்காகவோ தன்னையே பலியிட்டுக் கொள்வதைச் சித்தரிக்கும் ஒரு சிற்ப வகையைச் சார்ந்தது. தன்னை காணிக்கையாகக் கொடுத்து பலியிட்டுக் கொள்ளும் இவ்வழக்கம் பண்டைய வழக்கில் இருந்து வந்துள்ளதற்கு இச்சிற்பங்கள் சான்றாக உள்ளன. தமிழ் நாடு முழுவதுமுள்ள நடுகல்களில் ஏறக்குறைய 90 சதம் நவகண்டங்கள் கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள இந்தப் பெண்ணேஸவர மடத்திலேயே இருப்பதாக திரு.சுகவனம் முருகன் குறிப்பிடுகின்றார். இங்கு காணப்படும் நடுகல்கள் 12ம் 13ம் நூற்றாண்டைச் சார்ந்தவை.
இந்தப் பதிவில் இந்தச் சிரமறுத்துப் பலியிடும் வழக்கம் பற்றி விளக்கிக் கூறுகின்றார் திரு.சுகவனம் முருகன். கேட்டுப் பாருங்கள்.
பதிவு 1
யாழ் வாசிக்கும் விறலியரைக் காட்டும் ஒரு அபூர்வமான சிற்பம் இது. இது சோழர்காலச் சிற்பம். பராமரிக்கப்பட வேண்டிய இவ்வகைச் சிற்பங்கள் சிமெண்ட் பூசப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதைக் காணும் போது நம்மால் பதறாமல் இருக்க முடியாது.
இதே போல உடன் கட்டை ஏறுவதை விவரிக்கும் ஒரு சதிக்கல் ஒன்றும் இருந்திருக்கின்றது. இந்த சதிக்கல் அருகில் உள்ள சோமேஸ்வரர் கோயிலில் இருக்கின்றது. உடன் கட்டை ஏறும் பெண்ணை கும்ப மரியாதையுடன் அழைத்து வருவது போன்றும் பின்னர் அப்பெண் தீயில் இறங்கி தன்னை மாய்த்துக் கொள்வது போன்றும் இந்த சதிக்கல் அமைந்துள்ளது என்கின்றார் திரு.சுகவனம் முருகன்.
பதிவு 2
ஒரு வீரன் தனது தலைமுடியை கையால் பிடித்துக் கொண்டு வலது கையில் ஒரு வாளை வைத்திருப்பது போன்று அமைந்த நடுகல் சிற்பம். வீரனின் முகத்தில் கவலையோ பயமோ அன்றி வீரம் தெரியும் வகையிலேயே இந்தச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
நடுகல்கள், பள்ளிப் படை கோயில்கள் பற்றிய ஒரு விளக்கம் அளிக்கின்றார் திரு.சுகவனம் முருகன்
பதிவு 3
மேலும் படங்களைக் காண இங்கே செல்க!
அன்புடன்
சுபா
களப்பிரர் காலம் - ஆய்வுத் தகவல்கள் - 2
வளமான சேர சோழ பண்டியர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எப்படி திடீரென்று களப்பிரர்கள் வந்து ஆட்சியைக் கைப்பற்ற முடியும்? இதற்கு ஏதேனும் சமூகத் தேவை என்பதன் அடிப்படையில் காரணங்கள் உள்ளனவா? எப்படி கர்நாடகத்திலிருந்து இங்கு வந்து சேர்ந்த களப்பிரர்களால் இங்கே ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது? இதற்கு சமூகத்தின் எத்தகையோரிடமிருந்து ஆதரவு கிடைத்திருக்கலாம். என்பது பற்றி இந்த ஒலிப்பதிவு நோக்குகின்றது.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசனின் பண்புகளையும் இப்பதிவு நோக்குகின்றது. தொல்காப்பியம் காட்டும் சமூக வாழ்வியல் தேவை சார்ந்த கடவுள் கொள்கையும் அலசப்படுகின்றது.
சங்ககால மன்னர்களுக்கு சமூகத்தில் இருந்த ஆதரவு நீங்கி களப்பிர மன்னர்களுக்கு சமூகத்தில் எப்படி ஆதரவு பெறுகியதோ அதே போல பின்னர் களப்பிரர்களை நீக்கி ஆட்சி மாற்றம் கொண்டு வருவதிலும் சமூகத்தின் பங்கு இருந்திருக்கின்றது. எவ்வகை சமூகத் தேவை இம்மாற்றங்களுக்கு பின்னனியாக இருந்தது? வைதீக, அருகத மதங்களின் நிலை - இம்மாற்றங்களில் இவற்றின் பங்கு ஆகியவற்றை சுவாரசியமான பார்வையில் இச்செய்திகளை மிகச் சரளமாக விளக்குகின்றார் டாக்டர்.பத்மாவதி.
அன்புடன்
சுபா
குன்றக்குடியில் அமைந்துள்ள மடங்கள்
பதிவைக் கேட்க
மாளிகை போன்று அமைந்திருக்கும் இவ்வீடு ஒரு மடம். மடத்தின் ஒரு புறத்தில் எந்த ஊராரின் மடம் என்ற பெயரும் பொதுவாகவே இவ்வகை மடங்களில் பொறிக்கப்பட்டிருக்கும். இவை சத்திரம் போன்றவை. முக்கிய பண்டிகை விழாக்களான மாத கார்த்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம் போன்ற நாட்களில் இங்கே வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த படத்தில் உள்ள இம்மடம் அழகாபுரி என்ற ஊரைச் சேர்ந்தவர்களின் மடம். மடத்தின் வாசலில் பொறிக்கப்பட்டுள்ள பெயரைக் காணலாம்.
மற்ற நாட்களில் அவரவர் ஊர்களுக்கு திரும்பி விடுவார்கள். ஜாதி வேறுபாடுகள் இன்றி இங்கு சமபந்தி போஜனம் வழங்கப்படும். இங்கு அமைந்துள்ள குன்றக்குடி கோயிலை மையமாக வைத்தே நகரத்தார் சமூகத்தினர் இருக்கின்றனர். கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியைச் சுற்றிலும் பல மடங்கள் அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊரைச் சார்ந்தவர்களின் மடங்கள். விஷேஷ நாட்களில் அவ்வூர் நகரத்தார்கள் இங்கு வந்து அவரவர் மடங்களில் தங்கிக் கொள்வதும் இங்கே அன்னதானம் வழங்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகின்றது. விஷேஷம் முடிந்த பிறகு அவரவர் ஊர்களுக்கு திரும்பி விடுகின்றனர். மீண்டும் விஷேஷம் வரும் போது இம்மடங்கள் திருவிழா கோலம் பூண்டு காட்சியளிக்கும்.
மேலும் படங்களைக் காண இங்கே செல்க.
நகரத்தாரின் கடல் கடந்த பயணங்கள்
பொதுவாக நகரத்தார் என்ற வழக்கு செட்டியார் சமூகத்தினரைக் குறிக்கும். நகரத்தார் சமூக மக்கள், அவர்கள் வாழ்க்கை முறை, திருமண முறைகள், கடல் கடந்து பயணித்து பல கிழக்காசிய நாடுகளில் அவர்கள் காலோச்சிய வரலாறு ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வதும் தமிழக வரலாற்றை ஆய்வதின் ஒரு பகுதியாகவே அமையும். 19ம் நூற்றாண்டு மட்டுமன்றி 15ம் நூற்றாண்டில் மலாயா தீபகற்பம், ஜாவா தீவு, தாய்லாந்து எனப பல நாடுகளுக்குச் சென்று வியாபரம் செய்ததோடு மட்டுமல்லாது தாங்கள் சென்ற நாடுகளில் தங்கி தமிழ் வம்சாவளியினர் இன்றும் பல கிழக்காசிய நாடுகளில் வாழ்வதற்கு அடிப்படையை அமைத்துக் கொடுத்தவர்களாக இச்சமூகத்தினர் இருக்கின்றனர்.
நகரத்தார் சமூகம் பற்றி ஆய்வு செய்து அதனை ஒரு நூலாக வெளியிட்டிருப்பவர் டாக்டர்வள்ளி அவர்கள். இவர் நகரத்தார் சமூகத்தைச் சார்ந்த ஒருவர், பிள்ளையார்பட்டி கோயில் வகையைச் சேர்ந்தவர். இவர்கள் குடும்பத்தினரும் இப்பிள்ளையார்பட்டி கோயிலின் அறங்காவலர்கள் குழுவில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரிடம் நகரத்தார் சமூகம் பற்றிய தகவல்களைக் பகிர்ந்து கொள்ளுமாரு கேட்ட போது..
-நகரத்தார் சமூகம் பாய்கட்டி கப்பல் (பாய்மரக் கப்பல்) மூலமாக கல்கத்தா சென்று -
அங்கிருந்து பர்மா மற்ற ஏனைய கிழக்காசிய நாடுகளுக்குச் சென்ற விஷயங்கள்
-விடுதி, சத்திரம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள்
-காசியில் உள்ள நாட்கோட் சத்திரம் இன்றைக்கும் பிரபலமாக இருக்கும் ஒரு நாட்டுக் கோட்டைச்சத்திரம் என்னும் தகவல்
-கல்கத்தா காசி தொடர்புகள்
-அலகாபாத் கயா, பம்பாய் போன்ற இடங்களில் நகரத்தார் பயணங்கள்
-மிளகு நகரத்தார் விற்பனைக்காகக் கொண்டு சென்ற பொருட்களில் முக்கிய அங்கம் வகித்த தகவல்கள்
-பர்மாவில் ஐராவதி நதிக்கரையில் இங்கிருந்து கொண்டு சென்ற பணியாட்களைக் கொண்டு அங்கே நெல் பயிரிடுதலில் ஈடுபட்ட செய்திகள்
-லேவாதேவி எனப்படும் கொடுக்கல் வாங்கல் பழக்கம் உருவான தகவல்
-பர்மா அரிசியை பயிரிட்டு ஐரோப்பா வரை கொண்டு சென்று வியாபாரம் செய்யத் தொடங்கிய பின்னர் நகரத்தார் வளம் பொருந்திய சமூகமாக ஆகிய செய்திகள்
-பர்மா தேக்கு மரங்களை தமிழகத்துக்குக் கொண்டு வந்த செய்திகள்
-மலேசியாவிலும் ரப்பர் செம்பனை போன்ற வளம் தரும் பயிர் தொழிலில் ஈடுபட்டு செல்வந்தர்களாக வளர்ந்த செய்திகள்
-தங்கள் வருமானத்தில் ஒரு பங்கினை தர்ம கணக்கு என்று கொடுக்கும் பழக்கம்
தர்ம கணக்கின் வழி சேகரித்த வருமானத்தில் பல திருக்கோயில் பணிகளில் நகரத்தார் சமூகத்தினர் ஈடுபட்ட செய்திகள்
-1850 வாக்கிலேயே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஆலய திருப்பணி நிகழ்த்திய செய்திகள், இதுபோல பல ஆலயங்களின் திருப்பணிகளில் ஈடுபட்ட செய்திகள்..
-நகரத்தார் ஆலயத் திருப்பணிகள் மட்டுமன்றி சமூகத் தேவைகளுக்கும் தங்கள் வருமானத்தில் சில பகுதியை ஒதுக்கி சேவை செய்திருக்கின்றனர், 1947ல் அழகப்பா செட்டியார் போட்ட சாலை தான் ரயில்வே ஸ்டேஷன் சாலை. சாலை கட்டிய பணிகள் கல்வெட்டுக்கலில் பொறித்து வைத்திருப்பதால் இப்பணிகள் பற்றிய தகவல்கள் சான்றுகளாக அமைந்திருக்கின்றன என்பன..
-மலாயா, பர்மா போன்ற நாடுகளில் உண்டியல் (On Demand Transaction) முறையை புழக்கத்திற்கு கொண்டு வந்தவர்கள் நகரத்தார்கள். இது பேச்சு வழக்கில் அண்டிமண்டு ஆவணம் என வழங்கப்படும் செய்திகள்..
-நகரத்தார் தங்கள் வீட்டில் மிகச் சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள்: ஆனால் கோயில் திருப்பணிகள் என்று வரும் போது தயங்காமல் திருப்பணிக்காக பணத்தை வழங்கும் தன்மையுடைவர்கள் என்னும் செய்திகள்
-நகரத்தார்கள் ஒன்பது கோயில் வகைகளுக்குள் அடங்குவர்: திருமண பந்தம் என்று வரும் போது ஒரு கோயிலைச் சேர்ந்தர்கள் மற்ற கோயிலைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்வதே முறையாக கருதப்படுவதும் ஒரு கோயிலைச் சேர்ந்தவர்களுக்குள் திருமணம் செய்வது தடை செய்யப்படும் என்ற செய்திகள்
-குழந்தைகள் தத்தெடுத்தல் எனும் போது நகரத்தார் சமூகத்தில் ஒரே கோயிலைச் சேர்ந்தவர்களையே தத்தெடுத்துக் கொள்வார்கள் எனும் செய்திகள்..
இப்படி பல சுவாரசியமான தகவல்களைச் சாதாரண செட்டி நாட்டுப் பேச்சுத் தமிழில் வழங்கியிருக்கின்றார்.
காரைக்குடி மையத்திலிருந்து பிள்ளயார்பட்டி செல்லும் வரை காரிலேயே இந்தப் பேட்டியை பதிவு செய்தேன். சாலை இறைச்சல் சத்தம் கொஞ்சம் பதிவை பாதித்திருக்கின்றது. ஆனாலும் தெளிவான பதிவு. இந்த 17 நிமிடப் பதிவில் பல செய்திகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.
நண்பர்களே, கேட்டு உங்கள் கருத்துக்களையும் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பதிவு
டாக்டர்.கண்ணன், பாலு, டாக்டர்.காளைராசன், டாக்டர்.வள்ளி
டாக்டர்.கண்ணன், டாக்டர்.வள்ளி, சுபா
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
களப்பிரர் காலம் - ஆய்வுத் தகவல்கள்
இம்மாத மண்ணின் குரலை தமிழக வரலாற்றுப் பதிவு ஒன்றுடன் தொடங்குவதில் மகிழ்கிறேன். அண்மையில் டாக்டர் பத்மாவதி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்த போது அவரது தற்போதைய ஆய்வாக அமைந்திருக்கும் களப்பிரர்கள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டோம். இவரது ஆய்வு முழுமை பெற்று புத்தக வடிவில் வெளியிடப்பட உள்ளது. இந்த நூல் வெளியீடு காண்பதற்கு முன்னரே அவருடன் இந்த ஆய்வு குறித்த தகவலை நமது மண்ணின் குரல் பதிவுக்காக ஒலிப்பதிவு செய்து வந்தேன். அந்த ஒலிப்பதிவின் இரண்டு பகுதிகள் இந்த மாத வெளியீட்டில் இடம் பெறுகின்றன. இதன் தொடர்ச்சி அடுத்த மாதமும் தொடரும்.
பகுதி 1
களப்பிரர் காலம் என்பதை நிர்ணயிப்பது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கி.பி.3 முதல் கி.பி 6 வரை களப்பிரர்கள் ஆட்சி தமிழ் மண்ணில் இருந்தது என்பதை சற்று உறுதியாகக் கூறலாம். களப்பிரர்கள் எங்கிருந்து வந்து இங்கே ஆட்சி செய்தார்கள் என்பதற்கு சான்றுகள் மிக மிகக் குறைவாக இருந்ததாலும் இந்தக் கால கட்டத்தை நிர்ணயிப்பதில் உதவுவதாக அமைவது 1940ல் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு கிடைத்த வேள்விக் குடி செப்பேடு. இந்தச் செப்பேட்டில் தான் களப்பரர் எனப்படுபவர்கள் தமிழ் மண்ணில் அச்சமயம் ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர்கள் பலரை துரத்தி விட்டு ஆட்சி செய்யத் தொடங்கினர் என்ற செய்திகள் கிடைக்கத் தொடங்கின.
பெரிய புராணத்தில் வருகின்ற சில நாயன்மார்கள் புராணங்களில் உள்ள செய்திகள், யாப்பெருங்கல விருத்தி போன்றவை களப்பிர மன்னன் அச்சுத விக்கந்தன் என்பவன் பாண்டி நாட்டை ஆண்டு வந்தான் என்பதை குறிக்கின்றன. இதுவரை கிடைத்திருக்கின்ற சில தனிப்பாடல்களிலும், பாலி மொழி இலக்கியங்கள் சிலவற்றிலும் கூட இக்கருத்து தொடர்பான தகவல்கள் கிடைக்கின்றன. சில இடங்களில் கிடைத்த 3ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் சிலவற்றிலும் சில தகவல்கள் களப்பிரர் பற்றிய சான்றுகளைக் கூறுவதாக அமைந்திருந்தாலும் பூலாங்குறிச்சியில் கிடைத்த ஒரு கல்வெட்டு மிகத் தெளிவான சான்றுகளைக் கொண்டிருக்கின்றது என்று கூறலாம்.
இவை மட்டுமன்றி களப்பிரர்கள் எங்கிருந்து வந்தனர். சில மன்னர்களின் பெயர் என பல்வேறு தகவல்களை விளக்குகின்றார் டாக்டர் பத்மாவதி.
பகுதி 2
பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கள ஆய்வில் பௌத்த விகாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்பான ஆய்வுகள் களப்பிரர் இப்பகுதியில் ஆட்சி செய்தமயைக் குறிப்பனவாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் தஞ்சாவூர் மாவட்டம் முழுதும் களப்பிரர் ஆட்சி இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. மதுரையில் பல உறுதியான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இன்றைய கடலூர் என்று குறிப்பிடப்படும் பாடலிபுரம் பகுதியிலும் பல சமண கடிகைகள் இருந்திருக்கின்றன. காஞ்சிபுரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகள் இருந்திருக்கின்றன. களப்பிரர்கள் பௌத்தத்தையே பின்பற்றியவர்களாக இருந்திருந்திருக்கின்றனர். கடல் கடந்து சென்று வணிகம் செய்தவர்கள் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததால் பல ஆசிய நாடுகளில் பௌத்தம் பரவியது. இத்தகவல்கள் மட்டுமன்றி இதுவரை கிடைத்திருக்ககின்ற சான்றுகளிலிருந்து நமக்கு அறியக்கிடைக்கும் களப்பிற மன்னர்களின் பெயர்களையும் டாக்டர் பத்மாவதி இப்பகுதியில் குறிப்பிடுகின்றார்.
இப்பதிவுகளைக் காண மண்ணின் குரல் வலைப்பக்கம் செல்க. இதன் முழு தொடர்ச்சியும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கே தொடர்ந்து இணைக்கப்பட்டு வெளியிடப்படும்.
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]