திருக்குறள் உரைகள் - நாகநந்தி (2)
தமிழ் மரபு அறக்கட்டளையின் 10ம் ஆண்டு விழா

தமிழ் மரபு அறக்கட்டளையின் 10ம் ஆண்டு விழா சென்னையில் 13.03.2011 அன்று நிகழ்ந்தது. இவ்விழாவில் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளைக் கேட்கவும் படங்களைப் பார்க்கவும் இங்கே செல்க.
சைவ சித்தாந்தக் கருத்துக்கள் - 1

பேட்டி ஒலிப்பதிவு: சுபாஷினி
கவிஞர் திருலோக சீதாராம்

கவிஞர் திருலோக சீதாராம் பற்றி திரு.மோகனரங்கன் உரையாற்றுகின்றார். இலக்கிய வானிலே மின்னல் எனத் தோன்றி மறைந்தவர் கவிஞர் திருலோக சீதாராம்.பாரதி பாடல்களைப் பட்டி தொட்டியெங்கும் பாடிப் பரப்பியவர் இவர். வெறும் கவிதை மட்டும் எழுதியவர் அல்ல; கவிஞனாகவே வாழ்ந்தவர் கவிஞர் திருலோக சீதாராம் என்கிறார் திரு.மோகனரங்கன். கவிஞர் திருலோக சீதாராம் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்களை இந்த உரையில் சுவைபட குறிப்பிடுகின்றார். அத்துடன் அவர் தம் கவிதையையும் வாசித்து அளிக்கின்றார். கேட்டு மகிழ்வோம்.
பாண்டியர்கள் காலத்தின் கடல் வணிகம்

ஒரிசா பாலுவுடனான் ஒரு கலந்துரையாடலின் இரண்டாம் பகுதி இது. பாண்டியர்கள் குறிப்பாக சங்க இலக்கியம் சொன்ன வரலாற்றுச் செய்திகளைப் பற்றி கூறி இப்பகுதியை ஆரம்பிக்கின்றார்.பாண்டியர்கள் ரோமனியப் பேரரசு வரை சென்றிருக்கின்றனர். அரபு வணிகர்கள் கடல் பயணம் பற்றிய தகவல்கள், இந்தியாவிலிருந்து கடல் வணிகம்,என்பது குறிப்பாக வைரம், நவரத்தினம், மிளகு ஆகியவற்றிஐ அடிப்ப்டையாகக் கொண்டது; கடல் வணிகம் என்னும் போது கப்பல் கட்டும் துறையில் தமிழர்கள் சிறந்து விளங்கியிருந்தமை பற்றியும் விளக்குகின்றார். -:இப்பகுதியைக் கேட்க!
பேட்டி கண்டவர்: சுபாஷினி .(June, 2010)
புதிய தமிழ் வாழ்த்து

நிலைபெறநீ வாழியவே!
ஆக்கம்: கவிஞர் சீனி நைனா முகம்மது
இசை: ஆர்.பி.எஸ்.ராஜூ
குரல்: துருவன், பாபு லோகநாதன்
காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!
எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
புரட்சிவலம் வருபவளே!
செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!
குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!
வெளியீட்டு விழாப்படங்கள் காண இங்கே சொடுக்குக!
பாடல் தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே சொடுக்குக!
தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: பகுதி 6-7

பகுதி 6
பயிற்சிகளின் போது எப்படி கல்வெட்டுக்களை வாசிப்பது, எந்த சிலைகள் எந்த தெய்வங்களின் வடிவங்கள் என சிலைகளைப் பார்த்து கண்டுபிடிப்பது போன்ற விஷயங்களை எப்படித் தெரிந்து கொள்வது போன்ற சில தகவல்கள் இப்பகுதியில் வழங்கப்படுகின்றன. இவர்களின் ஆய்வுக் குழுவினருக்கு ஈconography எனப்படும் ஆய்வு முறையை அறிந்து கொள்வதற்கு டாக்டர்.நாகசாமி வழங்கிய பயிற்சிகள் உதவியிருக்கின்றன.
தேவநாகரி, வட்டெழுத்து, கிரந்தம் இவை அனைத்திலும் தீவிர பயிற்சி இவர்களுக்கு கிடைத்திருந்ததால் கல்வெட்டுக்களைப் பார்த்ததுமே கண்டுபிடிக்கும் திறன் வாய்க்கப்பெற்றிருக்கின்றனர்.
ஒரு கோயிலைப் பார்க்கும் போதே அதில் உள்ள விக்கிரகங்கள் கல்வெட்டுக்கள் ஆகியவை இந்த கோயிலை சார்ந்தவைதானா என்பதை உடனே அறிந்து கொள்ளும் திறனும் அனுபவத்தின் மூலம் கிடைத்திருக்கீன்றது.
ஒரு கோயிலின் கட்டிட அமைப்பு எப்படி அமைந்திருக்கும் என்ற விளக்கமும் இப்பகுதியில் வழங்கப்படுகின்றது. இந்த ஒலிப்பதிவின் நேரம் ஏறக்குறைய 8 நிமிடம்.
பகுதி 7
ஆதித்த சோழன், பராந்தக சோழன் போன்ற மாமன்னர்களின் கட்டிடக் கலை சிலை அமைப்புக்கள் போன்றவற்றை நேரடியாக பார்த்து எவ்வாறு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.நாகசாமி அவர்கள் பாடம் நடத்துவார் என்று இப்பகுதியில் விளக்குகின்றார்.
சோழர் காலத்து சிலைகளுக்கும், நாயக்கர் கால சிலைகளுக்கும் உள்ள வித்தியாசங்களை எப்படி கண்டு பிடிப்பது என்று விளக்குகின்றார்.
தனது ஆய்வுப் பணிகளின் ஆரம்ப காலகட்டங்களில் எளிமையான வடிவங்களான ஸ்ப்த கண்ணிகளை அடையாளம் காண்பதை அறிந்து கொள்வதில் ஏற்பட்ட சிரமத்தையும் பின்னர் மிக எளிமையாக எல்லாவிதமான கலை வடிவங்களின் வேறுபாடுகளை தெரிந்து கொண்ட விதத்தையும் கூட விளக்குகின்றார். இந்த ஒலிப்பதிவின் நேரம் ஏறக்குறைய 8 நிமிடம்.
இப்பேட்டிகளை கேட்க:
-:தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்
திருக்குறள் உரைகள் - நாகநந்தி
இவ்வொலிப்பதிவுகளை தமிழ் மரபு அறக்கட்டளைக்காகச் சேகரித்து வழங்கியவர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள்.
-:பகுதி 1
-:பகுதி 2
-:பகுதி 3
-:பகுதி 4
தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: பகுதி 2-5

பகுதி 2
எவ்வாறு கல்வெட்டுக்களை ஆய்வு செய்வது என்ற தனது பேச்சினை தொடர்கின்றார். பல்லவர்கள், பாண்டியவர்கள் கட்டிய கோவில்களின் கட்டுமானம் எவ்வாறு வித்தியாசப்படுகின்றது என்று விளக்கமும் வருகின்றது இப்பதிவில். நிறைய கல்வெட்டுக்கள் நிறைந்திருக்கும் போது எல்லாவற்றையும் ஒரேவரிசையில் படித்து விட முடியாது. மாறாக ஒவ்வொன்றாகப் படியெடுத்து பின்னர் அவை அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டு அவையனைத்தும் ஆய்வு செய்யப்படும் என்று தமது ஆய்வுப் பணிகள் பற்றி குறிப்பிடுகின்றார் இப்பகுதியில்.
பகுதி 3
தஞ்சாவூர் தவிர்த்து செங்கல்பட்டு, வட ஆற்காடு பகுதிகளில் இவரது பணிகள் தொடர்ந்திருக்கின்றன. பொது மக்கள் கூட சில வேளைகளில் அவர்கள் ஊரிலுள்ள கல்வெட்டுக்களை வாசித்து படியெடுக்க இந்த ஆய்வாளர்களைக் கேட்டுகொள்வார்களாம். பொது மக்களின் ஈடுபாட்டைப் பற்றி மகிழ்ச்சியுடன் விவரிக்கின்றார் இப்பகுதியில்.
நன்னிலம் வட்டக் கல்வெட்டுக்கள் என்ற மூன்று தொகுதிகளை முழுதாக தொகுத்து வெளியிட்டிருக்கின்றார். அதனைப் பற்றிய குறிப்பும் இப்பகுதியில் வருகின்றது.
பகுதி 4
திருவெள்ளிமழலை என்னும் பாடல் பெற்ற ஸ்தலம். இங்கு ராஜராஜனின் கல்வெட்டுக்கள் மட்டுமே 108 கல்வெட்டுக்களுக்கும் மேல் உள்ளன என்று குறிப்பிடுகின்றார்.
கும்பகோணம் கல்வெட்டுக்கள், பாபனாசம் கல்வெட்டுக்கள் பற்றிய செய்திகள் இப்பகுதியில் குறிப்பிடப்படுகின்றன.
பொது மக்களே இவர்களை அன்புடன் உபசரித்து இவர்களை வரவேற்பார்களாம். சைக்கிளில் செல்லும் இவர்களைப் பார்த்து முதலில் சர்க்கஸ் போட வந்தார்களா என்று கேட்பார்களாம். பின்னர் உண்மை விஷயம் அறிந்து கொண்ட பின்னர் பொது மக்களும் இவர்களை அன்புடன் உபசரித்து தாங்களும் இவர்களுக்கு ஏதாவது உதவ முடிந்த வகையில் உதவுவார்களாம். இவ்வகை சுவாரசியமான செய்திகளை இப்பகுதியில் பகிர்ந்து கொள்கின்றார்.
பகுதி 5
முன்னர் இவர்கள் காலத்தில் கல்வெட்டு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்ட விதத்திற்கும் தற்போது எவ்வாறு இந்த ஆய்வுகள் நடைபெறுகின்றன என்றும் இந்தப் பகுதியில் குறிப்பிடுகின்றார். முன்னர் இந்த ஆய்வாளர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆய்வுகள் நிகழ்த்தியிருக்கின்றனர். தற்சமயம் அந்த அளவிற்கான் ஆர்வம் குறைந்திருப்பதாகவே இவர் தெரிவிக்கின்றார்.
கல்வெட்டு பயிற்சி நிறுவனத்தின் செயல்பாடுகள்.
தொல்லியல் துறை அறிஞர்.டாக்டர்.இரா.நாகசாமி இவரது வழிகாட்டியாக இருந்திருக்கின்றார். தமிழ் முதுகலை பட்டம் பெற்றவர்கள் தொல்லியல் ஆய்வில் ஈடுபடுவது மேலும் சிறப்பாக இருக்கும் என்பதன் அடிப்படையில் அவர்களுக்கு தொல்லியல் ஆய்வுத் துறையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்
தமிழிலக்கியத்துக்கும் கல்வெட்டுக்களுக்கும் தொல்லியல் ஆய்விற்கும் நல்ல தொடர்புபுள்ளது என்றும், கருவூர், மதுரை, பூம்புகார், தஞ்சை போன்ற இடங்கள் இலக்கிய பிரசித்தி பெற்றதனாலும் இங்கு பெரும்பாலும் ஆய்வுகள் தொடரப்படுவதற்கு காரணமாக் அமைகின்றன என்றும் இப்பகுதியில் நம்முடன் தகவல் பகிர்ந்து கொள்கின்றார்.
இப்பேட்டிகளை கேட்க:
-:தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்
தமிழ் மரபு அறக்கட்டளையின் தீபாவளி வெளியீடுகள்
2010 தீபாவளிக்காக சென்னையைச் சேர்ந்த திரு. தமிழ்த்தேனி அவர்கள் ஆழ்கடலைவிட ஆழமான இந்த எளிய இலக்கியத்தை பதிவு செய்து அளித்துள்ளார். விநாயகர் அகவல், தமிழ் நாட்டின் மிகச்சிறந்த சங்கப் புலவர்களுள் ஒருவரான, குழந்தை இலக்கியத்தில் புதுமை கண்ட ஔவைப்பாட்டி இயற்றியது. அது இயற்றப்பட்ட சூழ் நிலையையும் அழகாக விளக்கியிருக்கிறார் தமிழ்த்தேனியார். தமிழகத்தின் முழுமுதற் கடவுளின் அருட்பார்வை இந்த தீபாவளித் திருநாள் முதல் நம் அனைவர் மீதும் நிலைத்திருக்கட்டும்.
ஔவை இயற்றிய பற்பல நூல்களில் முதன்மையானது ஆத்திச்சூடி. எளிமையான, எவரும் புரிந்துகொள்ளக்கூடிய சின்னஞ்சிறிய வாக்கியங்களாக அமைந்திருக்கும் இவ்விலக்கியம் 108 வாக்கியங்களைக் கொண்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லாரும் கற்றுப் பின்பற்ற வேண்டிய இந்த உரையை, 2010 தீபாவளிக்காக, நமக்காக தொகுத்தளிப்பவர், ஈரோட்டைச் சேர்ந்த திருமதி. பவள சங்கரி. குழந்தை இலக்கியமல்லவா! இயல்பான பேச்சு நடையில் அவர்களுக்காகவே இதை வெளியிட்டிருக்கிறார்.
3. இனிக்கும் இலக்கியம்: குழந்தை
நற்றிணைப்பாடல் பெங்களூரைச் திருமதி. ஷைலஜாவின் இலக்கிய ஆர்வம் நாம் நன்கு அறிந்ததே. அவர் தன் மனங்கவர்ந்த இலக்கியங்களை, ‘இனிக்கும் இலக்கியம்” என்று தொடராக வழங்குகிறார்”. 2010 தீபாவளிக்காக, இந்த இணைப்பில், குழந்தையைப் பற்றிய ஒரு நற்றிணைப் பாடலை விளக்குகிறார்.
முத்தொள்ளாயிரம் தமிழ் மரபில் வீரமும் காதலும் முக்கியத்துவம் பெற்றவை. தூய்மையான காதலைப்பற்றிய இலக்கியங்கள் அனேகம். தன் “இனிக்கும் இலக்கியம்” தொடரின் பகுதியாக, முத்தொள்ளாயிரத்திலிருந்து ஒரு காதல் கவிதையைப் பகிர்ந்து கொள்கிறார் திருமதி. ஷைலஜா. 2010, தீபாவளித் திருநாளை ஒட்டி வெளியிடப்படும் இந்தப் பதிவில் அவர் கவிதாயினி மதுமிதாவின் ஒரு புதுக்கவிதையையும் பகிர்ந்து கொள்கிறார்.
கடலோடியின் கம்போடிய நிகழ்வுகள்: நூல் விமர்சனம் - முனைவர்.க. சுபாஷிணி
நூலாசிரியர்: கடலோடி நரசய்யா
வழங்குபவர்: சுபாஷினி

-:நூல் விமர்சனம்
தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: 1 - முனைவர் பத்மாவதி
இந்த ஒலிப்பதிவில் இரண்டு விஷயங்கள் பேசப்படுகின்றன.
1) அறிமுகம் - இப்பகுதியில் தனது தற்போதைய பணிகள் பற்றி விளக்குகின்றார். அத்துடன் தான் தற்போது பிரத்தியேகமாக மேற்கொண்டுள்ள களப்பிரர் வரலாறு பற்றிய நூல் பணிகள் பற்றிய சிறு விளக்கமும் வருகின்றது. 1940ல் முதலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடு கிபி.8ம் நூற்றாண்டின் முற்பகுதியைக் களப்பரர் அரச வம்சம் ஆண்ட செய்திகள் பின்னர் அது பற்றி தொடரப்பட்ட ஆய்வுகள் தனது தற்போதைய பணிகள் என்று செல்கின்றது இப்பகுதி.
2) பனியில் சேர்ந்த பொழுது முதலில் இவருக்கு ஆய்வுக்கு வழங்கப்பட்ட ஊர் தஞ்சை. இங்கு தான் மேற்கொண்ட பணியைப் பற்றி விளக்குகின்றார். குழுவாக பணியை எப்படி ஆய்வாளர்கள் மேற்கொள்வர் என்று விளக்குகின்றார். கல்வெட்டுக்கள் ஆய்வுகள் செய்யும் வழிமுறைகள், எழுத்துக்களைக் கண்டு பிடிக்கும் முறை, எழுத்துக்களை கையாளும் முறை.
என சரளமாக தனது அனுபவங்களை வழங்குகின்றார்.

-:தமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள் - 1
ஒலிப்பதிவு செய்தவர்: சுபா (28-06-2010)
கடல் வணிகம் - ஒரிசா பாலு
-கடல் ஆய்வுகளைப் பற்றிய பொது விளக்கம்.
-பாப்புவா நியுகினி நாட்டில் தமிழ் சொற்களைப் பற்றிய சில செய்திகள்
-கடல் வணிகம்..
-கடல் ஆமைகளின் பங்கு..
போன்ற தகவல்கள் இடம்பெறுகின்றன.

-:கடல் வணிகம்
பேட்டி கண்டவர்: சுபாஷினி
தமிழகத்தில் பெண்கள் - நாகசாமி
இராஜராஜனின் தலைமை தேவியான லோகமகாதேவி தஞ்சாவூரில் இராஜராஜன் பெருங்கோயிலை கோயிலைக் கட்டிமுடிப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரே தனது பெயரிலேயே லோகமகாதேவீச்வரம் என்ற கோயிலை கட்டி அதற்கு தனது பெயரையே சூட்டியிருக்கின்றார்.
திருவையாற்றிலே அவர் பெயரால் இந்தக் கோயில் கட்டியிருக்கின்றார். அதற்கு லோகமகாதேவீச்வரம் என்று பெயரும் சூட்டியிருக்கின்றார். இது அரசன் கட்டியதல்ல. மாறாக அரசியே கட்டியது. அந்தக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு இதற்குச் சான்றாக அமைந்திருக்கின்றது. "திருவையாற்றுப்பால் நாமெடுப்பித்த லோகமகாதேவிச்வரமுடையாருக்கு நாம் கொடுத்தன கல்லில் வெட்டு" என்ற அரசியே ஆணையிட்டுக் கொடுத்தது குறிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் பொதுவாக கோயில்களில் அதிகாரிகளாகவும் தலைமை அதிகாரியாகவும் இருப்பவர்கள் ஆண்கள். ஆனால் அந்தக் கோயிலிலே தலைமை அதிகாரியாக பணியாற்றியவர் ஒரு பெண். குஞ்சரமல்லி என்று அவருக்கு பெயர். அவருக்குக் கீழே பணி புரிந்தோர் ஏராளமானோர் ஆண்களும் பெண்களும். குஞ்சரமல்லியிடம் ஆணை பெற்றுக் கொண்டு பணி புரிந்திருக்கின்றனர் என்ற இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று கூறுகின்றது என்று குறிப்பிடுகின்றார்.
சோழர் காலத்திலே, குந்தவை பிராட்டியார் வணிகம் நடக்கும் இடத்தில் அதாவது ஏலம் போடுகின்ற இடத்திலே தனியாக நின்று அவர் வணிகம் பேசியதையும் இவர் குறிப்பிடுகின்றார்.
அதனால் பெண்கள் அதிகாரிகளாக இருந்தமைக்கானச் சான்றுகள் இருக்கின்றன என்று இப்பேட்டியில் குறிப்பிடுகின்றார்.
பெண்கள் அரசிகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கின்ரார்களா என்பதற்கும் சில உதாரணங்கள் வருகின்றன இந்தப் பேட்டியில். ஆண்கள் அரசாட்சி செய்த போது என்னென்ன அதிகாரங்களெல்லாம் கொடுக்கபப்ட்டிருந்தனவோ அத்தனை அதிகாரங்களும் பெற்று பெண் அரசியர் ஆட்சி செய்திருக்கின்றனர். மதுரையில் ஏறக்குறைய 18ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே ராணி மங்கம்மாள் தனி அரசியாக இருந்திருக்கின்றார். அவளது காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த ராணியின் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அதன் மேல் தெலுங்கிலும் தமிழிலும் மஹாராஜராஜ ஸ்ரீ ராணி மங்கம்மா என்று குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது .
அவருக்குப் பின்னர் வந்தவர் மீனாட்சி. முத்து விஜயரங்க சொக்கநாத நாயக்கன் என்பரின் மனைவி. இவர் தனியாட்சி புரிந்திருக்கின்றார் என்றும் குறிப்பிடுகின்றார்.
பெண்கள் தனியாட்சி செய்தவர்களாக, வணிகம் செய்தவர்களாக, அதிகாரிகளாக தங்கள் பெயரிலேயே தானம் செய்தவர்களாக, அரசனுக்குரிய சம உரிமை உடையவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்கின்றார்.
தனது பேச்சினைப் பாரதியின் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவொம் என்று கூறி முடிக்கின்றார். கேட்டுப் பாருங்கள்.

-:தமிழகத்தில் பெண்கள்
பேட்டி கண்டவர்: சுபாஷினி .