குன்றக்குடி ஞானியார் மலை சமணப்படுகை

குன்றக்குடி குடவரை கோயிலுக்கு அருகாமையிலேயே வடக்கு நோக்கிய பகுதியில் அமைந்துள்ள பாறைகள் உள்ள பகுதியில் சமணப்படுகைகள் உள்ள ஒரு குகை  உள்ளது. சற்றே குன்று போன்ற மலைப்பாங்கான பகுதி இது. இங்கே அமைந்துள்ள ஒரு குகையில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதொரு சமணப் பள்ளி இருந்ததற்கானச் சான்றுகள் உள்ளன. இப்பகுதி ஞானியார் மலை என பேச்சு வழக்கில் இன்று வழங்கப்படுகின்றது.




இந்தப் பாறைகளைக் கவனிக்கும் போது மிகக் கவனமாகவும் நேர்த்தியாகவும் செதுக்கப்பட்ட காடி எனும் பகுதியை மேற்புறத்தில் காண முடிகின்றது. காடி என்பது பாறைகளில் மழை நீர் விழும் போது அம்மழை நீர் நேராகக் குடைக்குள் சென்று விழாத வண்ணம் தடுக்கச் செய்யப்படும் ஒரு ஏற்பாடு. இப்படி செய்வதனால் மழை நீர் தெரித்து சாரல் உள்ளே இருப்பவர்களின் மேல் விழாத வண்ணம் தடுக்க முடிகின்றது. 

பாறைகளைச் செதுக்கவும் படுகைகளை ஏற்பாடு செய்யவும் ஏற்படும் செலவுகளை ஏற்றுக் கொண்டு இப்படுகைகளை அமைத்துக் கொடுத்தவர்களின் பெயர்களைப் பாறைகளிலேயே குறித்து வைப்பதும் வழக்கமாக இருந்திருக்கின்றது. இந்த ஞானியார் மலை பாறையிலும் இதனை அமைக்க உதவிய ஆதன் சாத்தன் என்பவரின் பெயர் தமிழ் பிராமி எழுத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்தின் வடிவத்தின் அடிப்படையில் இந்தப் பாறை கி.மு காலகட்டத்தில் அமைக்கப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று டாக்டர்.வள்ளி குறிப்பிடுகின்றார். 


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]


வெட்டுடையார் ஐயனார் - வெட்டுடையார் காளி

வணக்கம்.



ஏறக்குறைய 450 ஆண்டு பழமை வாய்ந்த ஒரு கோயில்.
ஐயனார் கதை, வெட்டுடையார் ஐயனார் கோயில் தோன்றிய வரலாறு, வெட்டுடையார் காளி வரலாறு, சூலாட்டுப் பூசை என்னும் ஒரு வழக்கம் எனப்பல தகவல்கள் அடங்கிய ஒரு பதிவு. ஆலயத்தின் பரம்பரை ஸ்தானிகர் சீர்மிகு.கண.சந்திரன் தரும் விளக்கத்தை இப்பதிவில் வெளியிடுகின்றோம்.




எட்டுத் தலைமுறையாக பரம்பறையாக பூஜை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் வியப்பாக இருக்கின்றது. காவல் நிலையங்கள் இல்லாத காலத்தில் காளியே மக்களுக்கு காவல் தெய்வமாக  நீதி வழங்கும் தெய்வமாக மக்கள் கருதி வழிபட்டு வந்திருக்கின்றனர். இந்த வழக்கம் இன்னமும் தொடர்ந்து வருகின்றது.

இந்த மண்ணின் குரல் பதிவை  படங்களுடன் ஆலய விளக்கங்களுடனும் நமது வலைப்பக்கத்தில் இங்கே காணலாம்.

நன்றி: படங்கள், ஒலிப்பதிவு, விளக்கம் - முனைவர்.காளைராசன்

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

விஜயமங்கலம் சமண தீர்த்தங்கரர் சந்திரபிரபர் கோயில்

சமண சமயம் புகழ் பெற்று விளங்கிய நகரங்களில் கோவை மாவட்டமும் சிறப்பிடம் பெறுகின்றது. கோவையில் பெறுந்துறை நகருக்கு அருகில் உள்ள விஜயமங்கலத்தில் எட்டாவது சமண தீர்த்தங்கரர் சந்திரபிரபர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குத் தமிழ் நாடு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர் புலவர் ராசு அவர்களுடன் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் ஜனவரி 2012ம் ஆண்டு சென்றிருந்த போது செய்யப்பட்ட பதிவுகள் மண்ணின் குரல் வெளியீடுகளாகப் பதிப்பிக்கப்படுகின்றன.



இந்தப் பதிவுகள் புகைப்படங்களாகவும், மூன்று ஒலிப்பதிவு கோப்புக்களாகவும், இரண்டு வீடியோ விழியப் பதிவுகளாகவும் முழுமை பெறுகின்றன.

இந்தக்  கோயில் கற்பக்கிரகம்,  அர்த்தமண்டபம், மஹாமண்டபம், அடுத்து வாத்தியமண்டபம், நிருத்த மண்டபம்என்று ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது

கோயில் மண்டபத்தின் நான்கு புறங்களிலும் சிற்பங்கள் நிறைந்துள்ளன.

இங்கு வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ஸ்ரீ புராணத்தைத் தழுவிய சிற்பங்கள். இவ்வகைச் சிற்பங்கள் தமிழகத்தில் இரண்டே இடங்களில் மட்டும் இருப்பதாகக் குறிப்பிடுகின்றார் புலவர் ராசு. ஒன்று காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக் குன்றத்தில் உள்ள ஜிரகாஞ்சி என்ற கோயிலிலே ஓவிய வடிவில் இருப்பதாகவும் அடுத்ததாக இந்தக் கோயிலிலும் உள்ளன.

கருவறையில் மிகப் பெரிய சந்திரப்பிரப தீர்த்தங்கரர் உருவம் சுதையால் செய்யப்பட்டிருந்தது. அது சிதைந்து அழிந்தபின் அபிஷேகத்திற்கு வைத்திருந்த 30 செ.மீ உயரம் உள்ள சிறு சிலையை கருவறையில் தற்சமயம் வைத்துள்ளனர். அர்த்தமணடபத்தில் வர்த்தமான மகாவீரர் உருவச்சிலையை வைத்து வழிபடுகின்றனர்.மகாமண்டபத்தில் அரசண்ணா மலையிலிருந்து கொண்டு வந்த நேமிநாதர் இயக்கி ஷுஷ்மாண்டினி உருவங்கள் உள்ளன. வாத்தியமண்டபத்தில் சந்திரப்பிரப தீர்த்தங்கரரின் இயக்கியான சுவாலாமாலினி உருவச் சிலை சிறு அறையில் உள்ளது. வாத்திய மண்டபத்தில் ஆதிநாதர், கொங்குவேளிர், தமிழ்ப்புலவர்கள், பவணந்தி, சீயகங்கள்,கொங்கு வேளிரின் அடிமைமாது ஆகியோர் கற்சிலைகள் உள்ளன.

நிருத்தமண்டபத்தில் ஆதிநாதரின் தோற்றம் முதல் அவர் பரிநிர்வாணம் அடையும் வரை ஸ்ரீபுராணம் சிற்பத் தொகுதிகள் உள்ளன. கொங்கு வேளிர் பெருங்கதையை இயற்றியதைக் குறிக்கும் நாகரிக் கல்வெட்டு சேததப்படுத்தப்பட்டுவிட்டது. கருவரையில் சமவசரணம் ஓவியம் உள்ளது.


இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் பற்றிய செய்திகளை விளக்கும் உரையும் அடங்கும் தான் வாசித்து இன்னமும் தனக்கு நினைவில் இருக்கும் 7ம் நூற்றாண்டு வரலாற்றைக் கூறும் சில கல்வெட்டுக்கள் கோயில் புணரமைப்பின் போது சேதப் படுத்தப்பட்ட வருத்தம் தரும் செய்தியையும் கூறுகின்றார்.


பத்தாம் நூற்றாண்டு கங்கத் தளபதி சாமுண்டராயன் தங்கை புள்ளப்பை சல்லேகனை விரதமிருந்து உயிர் நீத்த சிற்பம் ஒரு தூணில் கல்வெட்டுடன் உள்ளது. 

இந்த ஆலயத்தில் கோமுக யட்ஷன், சக்கரேஸ்வரி ஆகியோரின் அழகிய சிற்பங்கள்  தீர்த்தங்கரர் சிலையைச் சுற்றி வடிக்கப்பட்டுள்ளன.
24 தீர்த்தங்கரர்கள் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் அமைக்கபப்ட்ட சிற்பங்கள் தமிழகத்தில் நான்கே இடங்களில் இருக்கின்றன. கழுகுமலை, திருநாதர் குன்று, காஞ்சிபுரம்,  அடுத்து இங்கே விஜயமங்கலம்.

கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டுக்களை வாசித்துக் காட்டும் பகுதி.


துணைக்குறிப்பு: ஈரோடு மாவட்ட வரலாறு - செ.இராசு.
புகைப்படங்கள், ஒலிப்பதிவு வீடியோ பதிவு: சுபா 
ஏற்பாடு உதவி: பவளசங்கரி, ஆரூரன், புலவர்.செ.இராசு.

இந்த மண்ணின் குரல் பதிவை இங்கே சென்று காணலாம்.


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

வெள்ளோடு ராசா கோயில்


வணக்கம்

தமிழகம் முழுமைக்குமே குலதெய்வ வழிபாடு என்பது இன்றளவும் முக்கிய அங்கம் வகிப்பதாக அமைந்திருக்கின்றது. குலதெய்வ வழிபாட்டில் பல வகை கடவுள்கள் இருபதைக் காண்கின்றோம். ராசா சாமிக் கோயில் என்பது ஈரோட்டுக்கு அருகில் வெள்ளோடு என்ற சிற்றூரில் இருக்கின்றது. புலவர் ராசு அவர்கள் குடும்பத்தினரின் குலதெய்வக் கோயில் இந்த ராசா கோயில்தான்.

தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் இந்த வருடம் ஜனவரி மாதம் ஈரோடு சென்றிருந்த சமயம் ஒரு நாள் வரலாற்றுச் சுற்றுலா மேற்கொண்டு சில குறிப்பிட்ட இடங்களுக்குப் பயணித்தோம். அப்படி செல்கையில் எங்களுடன் உடன் வந்திருந்த புலவர்.ராசு அவர்கள் தனது குலதெய்வ கோயிலுக்கு எங்களை அழைத்துச் சென்று வழிபாடு செய்ய வைத்து அக்கோயில் பற்றியும் தன் வாழ்வில் இந்தக் குலதெய்வத்தின் தாக்கம பற்றியும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

புலவர் ராசு அவர்களின் இயற்பெயர் மயில்சாமி என்பது. இவருக்கு 3 வயதாக இருக்கும் போது ஜன்னி வந்து மிகுந்த சிரமப்பட்ட நிலையில் பெற்றோர்கள் இவர் இறந்து விட்டதாகவே கருதிவிட்டனர். உறவினர்களிடமெல்லாம் விவரம் தெரிவித்து குழந்தையை அடக்கம் செய்து விட முடிவாகிவிட்ட நிலையில் புதைப்பதற்கு குழியும் வெட்டி தயார் செய்து விட்டனர். புதைப்பதற்காக ஒரு தொட்டிலில் போட்டு சுடுகாட்டிற்குக் கொண்டு செல்லும் தருவாயில் உள்ளூரில் உள்ள ஒரு முடிதிருத்துவோர் குடும்பத்து பெண்மணி ஒருவர் அங்கு வந்து யாரும் வருந்த வேண்டாம் எனச் சொல்லி ஒரு கம்பியை பழுக்கக் காய்ச்சி உடலில் தீட்டியிருக்கின்றார். இந்தத் தழும்பு இன்னமும் அவர் உடலில் இருப்பதாகச் சொல்கின்றார். சூடு பட்டதும் இவர் திடீரென்று அழ ஆரம்பித்திருக்கின்றார். பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் பேரானந்தம். இந்தப் பெண்மணி எப்படி அங்கு வந்தார் என்பது ஆச்சயரியமாகப் பட பெற்றோரும்  கேட்க ராசா சாமி கனவில் வந்து சொன்னதாகவும் அதனால் இங்கே ஓடோடி வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். அதோடு ராசா சாமி தனது பெயரை இக்குழந்தைக்கு வைக்கச்சொன்னதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இதனால் மயில்சாமி ராசாவாக மாறி இப்போது முனவர் புலவர் ராசுவாக அழைக்கப்படுகின்றார்.

ராசா கோயிலின் பழயை கோயில் திருப்பணி இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பக்கத்திலேயே சுவாமியை இடம் மாற்றி வைத்து இத்திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் இப்பதிவில் புலவர் ராசு அவர்கள் இந்த குலதெய்வ சாமி பற்றிய கதையையும் விவரிக்கின்றார். கேட்டுப் பாருங்கள்.
















அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

கலைமகள் பள்ளி அருங்காட்சியகம்


ஈரோடு கலைமகள் பள்ளியில் கொடுமணல் ஆய்வின் போதும் மேலும் ஈரோட்டின் வேறு சில பகுதிகளிலும் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளின் போதும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், சிற்பங்கள் மிகச் சிறப்பாக காட்சி வைக்கப்பட்டுள்ளதோடு  பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

8.1.2012 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் நண்பர்களுடன் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து  இந்த அருங்காட்சிப் பொருட்களை பார்த்து புலவர் ராசு அவர்கள் வழங்கிய விளக்கத்தையும் பெற்றோம்.

கொடுமணல் ஆய்வு பற்றியும், கலைமகள் பள்ளி பற்றியும், புலவர் ராசு அவர்களின் ஆய்வுகள், முயற்சிகள் பற்றியும் அவர் விளக்கம் தரும் ஒரு ஒலிப்பதிவை முதலில் கேட்பது அறிமுகமாக அமையும்.

மண்ணின் குரல் வெளியீடு.
  
கலைமகள்  அருங்காட்சியகத்தில் வைக்கபப்ட்டுள்ள கல்வெட்டுக்கள், சிற்பங்கள் பற்றி புலவர் ராசு அவர்கள் விளக்கம் அளிக்கின்றார்.
  
 
புலவர் ராசு விளக்கம் அளிக்கின்றார். 

முழு பதிவையும் காண இங்கே செல்க.

அன்புடன் சுபா

ஔவையார்

ஔவையார் பற்றிய விளக்கம். வழங்குபவர் டாக்டர் வள்ளி.

பதிவு

நன்றி: ஒலிப்பதிவு செய்து வழங்கியவர்: முனைவர். காளைராசன்

தமிழக தொல்லியல் கழக 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு பதிவுகள் - 3



சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் 14-15 07.2012 அன்று நடைபெற்ற தமிழகத் தொல்லியல் கழகத்தின் 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் 23 ஆவது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது நடைபெற்ற உரை பதிவுகளின் இறுதிப் பகுதி மண்ணின் குரலில் இடம்பெறுகின்றன.

அமராவதி பள்ளத்தாக்கில் தொல்லியல் ஆய்வு
திரு.யத்தீஷ் குமார்

தமிழ் பேசும் மக்கள்
திரு.ராமநாதன்

இரு பொதிகளுடன் போரிடும் வீரன்
திரு.இரா.தமிழாதன்

விழுப்புரம் சிற்பங்கள்
திரு.வீரராகவன்

மன்னராட்சியில் மக்களாட்சி
திரு.பன்னீர்செல்வன்


நன்றி: ஒலிப்பதிவுகளை வழங்கியவர் முனைவர் காளைராசன்.

தமிழக தொல்லியல் கழக 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு பதிவுகள் - 2


சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் 14-15 07.2012 அன்று நடைபெற்ற தமிழகத் தொல்லியல் கழகத்தின் 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் 23 ஆவது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது நடைபெற்ற உரை பதிவுகளின் இரண்டாம் பகுதி மண்ணின் குரலில் இடம்பெறுகின்றன.

வடலூர் பகுதியில் கிடைத்த தொல்லியல் தடயங்கள்.
டாக்டர்.எஸ்.கண்ணன்

மதுரை மொட்டை கோபுரம் முனீஸ்வரர் கோயில் திருவாட்சி
யா.சந்திரா

துறையூர் சார்ஜா கல்வெட்டுக்கள்
எம்.பிரபாகரன், வேலூர்

பெருங்கற்கால மட்பாண்டக் குறியீடுகள்
இணைப்பேராசிரியர், கோயம்பத்தூர்


நன்றி: ஒலிப்பதிவுகளை வழங்கியவர் முனைவர் காளைராசன்.

தமிழக தொல்லியல் கழக 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு பதிவுகள் - 1



சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் 14-15 07.2012 அன்று நடைபெற்ற தமிழகத் தொல்லியல் கழகத்தின் 22ஆம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் 23 ஆவது ஆவணம் இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது நடைபெற்ற உரைகளின் பதிவுகள் மண்ணின் குரலில் இடம்பெறுகின்றன.

இது பகுதி 1

1. டாக்டர் வள்ளி சொக்கலிங்கம் அவர்களின் அறிமுகம்

2. குன்றக்குடி ஆதீனகர்த்தர் பொன்னம்பல தேசிக சுவாமிகளின் உரை


  • ஆவணப்படுத்துதல் பற்றி.. 
  • வள்ளல் அழகப்பா செட்டியார் பற்றி 
  • தமிழர்கள் வாழத்தெரிந்தவர்கள், பிறரை வாழவைக்கவும் தெரிந்தவர்கள்.
  • நம் வரலாறு ஆலயங்களில் புதையுண்டு கிடைக்கின்றது. 
  • தேவியின் அம்பலம் என்ற குலம் பற்றிய செவி வழி செய்தி
  • வெட்டுவான் கோயில் சொல்லுகின்ற கதை 
  • ராஜராஜேச்சுரம்.. சிற்பியின் கதை.. 
  • காளையார் கோயில் - பெரிய மருது சின்ன மருது சகோதரர் பற்றிய செய்தி..
  • குப்பமுத்து ஆசாரி தேர் செய்த கதையும்..



3. திரு.இள.கணேசனின் நன்றியுரை


4. ஆந்திர கல்வெட்டு







நன்றி: படங்களும் சொற்பொழிவுகளின் ஒலிப்பதிவும் - முனைவர் காளைராசன்.

பெண்ணையாற்று நடுகற்கள்



நண்பர்களே,

கிருஷ்ணகிரி நகரில் பெண்ணையாற்றங்கரையோரத்து சாலைகளில் ஆங்காங்கே நடுகற்களைக் காணமுடிகின்றது. சில நல்ல நிலையில் வழிபாட்டுக்குத் தகுந்த நிலையில் பாதுகாக்கப்பட்டாலும் சில பாதுகாப்பாற்றும் புதர்கள் மண்டியும் மறைந்து இருக்கின்றன. த.ம.அ குழுவினர் கிருஷ்ணகிரி சென்றிருந்த போது உடன் வந்து அந்த நடுகற்கள் பற்றி விளக்கம் அளிக்கின்றார் திரு.சுகவனம் முருகன். படங்களையும் ஒலிப்பதிவையும் கான இங்கே செல்க!


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

பெண்ணேஸ்வரர் திருக்கோயில்


பெண்ணேஸ்வரர் திருக்கோயில்
பதிவு:05.03.2012
ஒலிப்பதிவு: சுபா 
படங்கள்: டாக்டர்.நா.கண்ணன், ப்ரகாஷ் சுகுமாரன், சுபா 


தமிழ் மரபு அறக்கட்டளையினர் கிருஷ்ணகிரி நகருக்குச் சென்றிருந்த போது பெண்ணேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அக்கோயிலின் பழம் பெருமைகளைப் பற்றி தொல்லியர் அறிஞர், ஆர்வளர் திரு.சுகவனம் முருகன் அவர்கள் கூறக்கேட்டு பதிவு செய்து வந்தனர். இப்பயணத்தில் கலந்து கொண்டவர்கள் : செல்வமுரளி, சக்தி, ப்ரகாஷ் சுகுமாரன், டாக்டர்.நாகண்ணன், சுபா ஆகியோர்.




மேலும் படங்களையும் அவற்றின் விளக்கங்களையும் பதிவுகளின் விளக்கங்களையும் காண தமிழ் மரபு அறக்கட்டயின் வரலாற்றுப் பகுதியில் இங்கே செல்க!

சொல்லோவியம்: கார்த்திகேசு சிவத்தம்பி




சமீபத்தில் மறைந்த யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆ.கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் பற்றிய மிக அரிய சேதிகளூடான ஓர் சொல்லோவியம். 

தயாரித்து அளிப்பவர் இளையதம்பி தயாநந்தா.

சொல்லோவியம் கேட்க!!

தூத்துக்குடி பவளப்பாறைகள்


தூத்துக்குடி நகரின் மத்தியில் அமைந்துள்ளது வ.உ.சி. கல்லூரி. இந்தக் கல்லூரியின் ஜியாலஜி துறை ஆய்வாளர்-விரிவுரையாளர் டாக்டர்.உதயனப் பிள்ளை அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக தூத்துக்குடி ராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள தீவுகள், பவளப் பாறைகள், முத்துக்குளித்துறை தொடர்பான பல விஷயங்களைப் பேட்டியில் பகிர்ந்து கொண்டார். பேட்டிகள் 4 பகுதிகளாக உள்ளன.

பேட்டி பதிவுகள்:11.3.2011
ஒலிப்பதிவும் படங்களும்: சுபா 
ஏற்பாடு உதவி: திரு.துரை.ந.உ.

பேட்டிகளைக் கேட்கவும் படங்களைப் பார்க்கவும் இங்கே செல்க!.

தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி


வணக்கம்.



தூத்துக்குடிக்கு 2011ம் ஆண்டில் நான் சென்றிருந்த போது வ.உ.சி. கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்தது. திரு. துரை அவர்களும் என்னுடன் வந்திருந்தார்கள். அச்சமயம் வ.உ.சிதம்பரம் அவர்களின் பெயரில் இயங்கி வரும் கல்லூரிக்குச் சென்றிருந்தோம். கல்லூரி முதல்வர் இக்கல்லூரியை விளக்கி அறிமுகம் செய்யும் ஒரு பேட்டியினைப் பதிவு செய்திருந்தேன். கல்லூரி முதல்வர் திரு.ப்ரான்ஸிஸ் அவர்கள் இப்பேட்டியை வழங்குகின்றார்கள்.



இப்பேட்டியில்

  • 1951ம் ஆண்டு வ.உ.சியின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட கல்லூரி.
  • வ.உ.சி. கல்விக்கழகம்
  • வ.உ.சி நினைவாக ஒரு மணி மண்டபம் கட்டலாம் என்று தொடங்கிய இத்திட்டம் பின்னர் சமூகத்திற்கு கல்விச் சேவை வழங்கும் வகையில் பயன்படும் வகையில் கல்லூரியாக ஏற்படுத்தப்பட்டது. 
  • வந்தே மாதரம் என்ற கோஷம் பொறிக்கப்பட்ட முகப்புடன் இக்கல்லூரி உள்ளது.
  • சமயச் சார்பின்மைக்கு வாழும் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது இக்கல்லூரி. இக்கல்லூரியை ஏற்படுத்தியவர்கள் தீவிர சைவ சமயத்தினராக இருந்தாலும் இக்கல்லூரியில் எங்குமே சமயச் சின்னங்கள் இல்லாமல் சமயச் சார்பின்மை இல்லாமல் கல்வியை மட்டுமே முன்னிலைப் படுத்தி ஏற்படுத்தப்படுத்தியுள்ளனர்.
  • கல்லூரியில் இயங்கி வரும் துறைகள் ஆய்வுகள் 
என சில தகவல்களை கல்லூரி முதல்வர் வழங்குகின்றார்.

பேட்டியைக் கேட்க!



குறிப்பு: பயணத்திற்கான உதவிகள் செய்த திரு.திருமதி துரை, திருமதி சீதாலட்சுமி ஆகியோருக்கு என் நன்றி.


வ.உ.சி அவர்கள் பற்றிய சில பதிவுகள் நமது வலைத்தளத்தில் உள்ளன அவற்றை

ஆகிய பக்கங்களில் காணலாம்.


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

திரு.எஸ்.ராமச்சந்திரனின் சில சமூகவியல் கருத்துக்கள் -2


இவ்வொலிப்பதிவின் முதல் பகுதியில் நாட்டார் வழக்காற்றியல், சமூகத்தில் அடிமைகள், தாசி என்பன பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டன. அவற்றை இங்கே வாசித்தும் கேட்டும் மகிழலாம்.

இன்றைய பதிவில் இடம்பெறும் தகவல்களைக் காண்போம்.

பதிவு 1 - விஷ்வபிராமணர்கள்

இப்பதிவில் திரு.எஸ் ராமச்சந்திரன், 
  • விஷ்வ பிராமணர்கள் எனப்படுபவர்களின் வழக்குகள்
  • தைத்ரிய சம்ஹிதை என்பதன் பொருள்
  • சூத்ரங்கள் - அதன் உட்பொருள்கள்
என்பன போன்ற தகவல்களை வழங்குகின்றார்.



பதிவு 2 - தூத்துக்குடியும் உப்பு வணிகத்துறையும்



இப்பதிவில் திரு.எஸ் ராமச்சந்திரன், 
  • எப்படி முத்து அரசனுக்கு சொந்தமோ அதே போல உப்பு அரசனுக்கு சொந்தம் என்பது வழக்கு. 
  • தூத்துக்குடி பகுதியில் உப்பு உற்பத்தி அதிகம் உள்ளது. கடந்த 200 ஆண்டுகளாக இத்தொழில் ஈடுபட்டவர்கள் பண்ணையார் என்று அழைக்கப்படும் ஒரு சமூகத்தினர். 12ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களிலேயே இவர்களைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன; சித்திரவல்லி என்ற பட்டத்தோடு இவர்கள் குறிப்பிடப்படுகின்றார்கள். 
  • உப்பளத் தொழிலில் தூத்துக்குடி பரதவர்கள் அதிகம் ஈடுபடவில்லை. 
  • நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உப்பு வியாபரத்தில் அதிகம் ஈடுபட்டிருக்கின்றனர்.
  • ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் எனும் நாவல் உப்பளத்து மக்களின் வாழ்க்கையை விவரிக்கும் ஒன்று. 
  • உப்பளத்தில் பணியாற்றும் மக்களோடு வாழ்ந்து அவர்களின் வாழ்க்கைச் செய்திகளைப் பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு நாவல். 
இப்படி இவ்வொலிப்பதிவு செல்கையில் ராஜம் கிருஷ்ணனின் களப்பணிகள் பற்றி திருமதி.சீதாலட்சுமியும் விவரிக்கின்றார்.



பதிவு 3 - பாண்டியர்கள்

இப்பதிவில் திரு.எஸ் ராமச்சந்திரன், 

கான் சாஹீப் எழுதிய கடிதம்
  • 1756ல் தென்காசி கோயிலைப் பாதுகாத்துக் கொண்டிருந்தவர்கள் புலித்தேவர்கள். இவர்கள் 11 பேரை சுட்டு கொன்று தென்காசி பகோடாவை தனது ஆளுமைக்குள் கொண்டுவந்ததாக கான்சாஹீப் கடிதம் எழுதுகின்றான்.
  • 1754ம் ஆண்டைச் சேர்ந்த தென்காசிப்பாண்டியர்களின் செம்பு பட்டையம் குற்றாலம் கோயிலில் உள்ளது.
  • புலித்தேவர் சமூகத்தின் வம்சமும் ஜாதியும் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. புலித்தேவரும் அவர் சமூகத்தினரும் மறவர் குலத்தினர் என்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் வம்சத்தாரும் இணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.  
  • தென்காசி பாண்டியர்கள் 18ம் நூற்றாண்டில் பலமாக இருந்த ஒரு தமிழ் பேசும் மறவர்கள் சமூகத்தினராக இருந்தனர். இவர்கள் மதுரை நாயக்கர்களுக்கு கட்டுப்பட்டவர்கள். ஆனாலும் தென்காசி ஊரின் வரி வசூல் உரிமை பாண்டியர்களிடம் அப்போது இல்லை. இந்த உரிமை வடகரை ஜமீனிடம் இருந்திருக்கின்றது.
  • எந்த பாளையப்பட்டுக்களும் தாம் பாண்டியர் வம்சத்தவர்கள் என்று தங்கள் உரிமையைக் கோரவில்லை.
கங்கைகொண்டான் சீர்மை நாடாள்வார் என்கின்ற பட்டமுடைய நாடாட்சி மரபினர் வேறு, மறவர்கள் வேறு என்பது தெளிவு என்று உறுதிபடுத்துகின்றார் ஆய்வாளர் திரு.எஸ் ராமச்சந்திரன்.
ஏறக்குறைய 30 நிமிட ஒலிப்பதிவு இது. புதிய விஷயங்கள் தெளிவான ஆண்டு வாரியான தகவல்களை வழங்குகின்றார் ஆய்வாளர் திரு.எஸ் ராமச்சந்திரன்


பதிவும் படங்களும் :சுபாஷினி 
பதிவுக்கான ஏற்பாடு:திருமதி.சீதாலட்சுமி
பதிவு செய்யப்பட்ட நாள்: 19.3.2011

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness