களப்பிரர் காலம் - ஆய்வுத் தகவல்கள் - 3

தமிழ்நாடு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.பத்மாவதி வழங்கிய பேட்டியின் தொடர்ச்சி பகுதி 4ம் 5ம் இன்று வெளியிடப்படுகின்றன.

பதிவு 4

களப்பிர மன்னர்களை ஆட்சியிலிருந்து நீக்கி பாண்டிய மன்னனை மீண்டும் ஆட்சிப் பொருப்பில் அமர்த்துவது திடீரென்று நிகழ்ந்த ஒரு செயலாக இருக்க முடியாது. ஊர்த்தலைவர்கள், சமணர்கள் ஆகியோரது பெறும் ஆதரவு இம்மாற்றத்திற்கு ஆதாரமாக இருந்திருக்க வேண்டும். இதற்கு சான்றுகள் இருக்கின்றனவா என்ற வகையில் இந்தப் பேட்டி தொடங்குகின்றது.
களப்பிறர்கள் ஆட்சியைக் கைப்பற்ற துணையிருந்த கரவந்தபுரவாசிகளைப் பற்றிய குறிப்புக்கள் பரவலாகக் கிடைக்காமல், சமணப்பள்ளிகள் தொடர்பான தகவல்கள் அதிகமாகக் செப்பேட்டுச் சான்றுகளில் கிடைக்கின்றன. இதற்குக் காரணமென்ன என்று அலசி அதற்கான காரணங்களையும் இப்பதிவு வரிசைப்படுத்துகின்றது.

பதிவு 5

களப்பிறர்கள் பற்றிய ஆய்வுகள் சில ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமை பற்றியும் இவ்வாய்வுக்குத் தான் மேற்கொண்ட வழிமுறைகளைப் பற்றியும் விவரிக்கின்றார். இந்தப் பதிவு மிக வித்தியாசமான நோக்கில் பல்வேறு தகவல்களை வழங்குவதாக அமைந்துள்ளது.

குறிப்பாக
-பழமையான பெண் தெய்வ வழிபாடு
-இலக்கியங்களில் மங்கை என்ற தெய்வத்தைப் பற்றிய குறிப்புக்கள்
-மங்களம் என்ற ஊர் குறிப்புக்கள்
-கல்வெட்டுச் சான்றுகள்
-தாராதேவி எனப்படும் தெய்வம் பௌத்த வழிபாட்டு பெண் தெய்வம்.. மணிமேகலா தெய்வம்
-காம கோட்டம் என்ற சொற்குறிப்பிற்கான ஆரம்ப கால குறிப்புக்கள்..
-சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பல்வேறு வகையான கோட்டங்கள், ஊர்க்கோட்டம்..

இப்படி பல தகவல்களைப் பதிவதாக இந்தப் பதிவு அமைந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் பல இடங்களில் பௌத்த வழிபாட்டுச் சின்னங்களும் கோயில்களும் கிடைத்துள்ளன. காமகோட்டம் என்பது பௌத்த வழிபாட்டில் தாராதேவி எனப்படும் மணிமேகலா தெய்வத்துக்கான ஒரு வழிபாட்டுததலமாக இருந்திருக்க வேண்டும் என்று இப்பதிவு கூறுகின்றது.

சைவமும் வைஷ்ணவமும் வலிமைப் பெறத் தொடங்கும் போது ஏற்கனவே மக்கள் வழக்கத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த வழிபாடுகளை உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த தன்மையையும் இப்பேட்டி விளக்குகின்றது. அதுமட்டுமன்றி பல பெண் தெய்வக் கோயில்கள் சிவன் கோயில்களாக மாற்றப்பட்ட நிகழ்வுகளுக்கான சான்றுகளையும் கல்வெட்டுக்களிலிருந்து காண முடிகின்றது என்ற ஒரு செய்தியையும் இப்பதிவு விளக்குகின்றது.

கேட்டுப் பாருங்களேன்.


அன்புடன்
சுபா

நகரத்தாரின் கடல் கடந்த பயணங்கள் 2

நண்பர்களே,

இம்மாத மண்ணின் குரலில் மேலும் ஒரு பதிவு நகரத்தார் கடல் பயணங்கள் பற்றியதாக அமைந்துள்ளது. இந்தப் பதிவில் தொடர்ந்து பல தகவல்களைத் தொடர்ந்து வழங்குகின்றார் டாக்டர். வள்ளி.



-கடல் கோள் அழிவுகள்.. சிவகங்கங்கை பகுதியைத் தேர்ந்தெடுத்த நகரத்தார்கள்
-செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை
-கடல் பயணம் செல்லும் முன் பிள்ளைகளிடம் வாய்க்கரிசி வாங்கிக் கொண்டும் கூட செல்வது வழக்கமாக இருந்துள்ளமை..
-நகரத்தார் வீடுகளின் அமைப்பு
-மழை நீர் சேகரிப்பு எனும் கருத்தை மையமாக்கி அமைக்கப்படும் நகரத்தார் வீடுகள்
-நகரத்தார் வீடு அமைப்புகள் பற்றிய விளக்கம்: முகப்பு, திண்ணை. பெட்டகச்சாலை, வளவு, வீடு (அறைகள்), சமையல் பகுதி
-குடும்பத்தார் பலர் ஒரே வீட்டில் இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் தனிச் சமையல்..
-இவ்வகையான பெரிய வீடுகளிலேயே தான் குடும்பத்தினரின் அனைத்து சிறப்பு விழாக்களும் நிகழ்வுகளும் நடைபெறும்..
-செட்டி நாட்டு இலக்கியங்கள்..கிராமியப் பாடல்கள்

தனது மாமியார் இறப்பதற்கு முன்னரே தனக்காக இவர் பாட வேண்டிய ஒப்பாரி பாடல்களைக்கூட சொல்லிச் சென்ற விஷயத்தையும் தனது இறப்பின் போது எந்தெந்த பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும், எந்தெந்த பொருட்கள் எங்கெங்கே இருக்கின்றன என்பதையும் தெளிவாக சொல்லிவைத்த கதையையும் சுவைபட சொல்கின்றார். கேட்டுப் பாருங்களேன்.

பதிவைக் கேட்க!

அன்புடன்
சுபா
[ தமிழ் மரபு அறக்கட்டளை ]

பென்னேஸ்வர மடத்து நடுகல்கள்



இவை நவகண்டம் எனப்படும் நடுகல்கள். ஒரு வீரன் தனது குடிகளுக்காகவோ அல்லது தனது அரசனுக்காகவோ தன்னையே பலியிட்டுக் கொள்வதைச் சித்தரிக்கும் ஒரு சிற்ப வகையைச் சார்ந்தது. தன்னை காணிக்கையாகக் கொடுத்து பலியிட்டுக் கொள்ளும் இவ்வழக்கம் பண்டைய வழக்கில் இருந்து வந்துள்ளதற்கு இச்சிற்பங்கள் சான்றாக உள்ளன. தமிழ் நாடு முழுவதுமுள்ள நடுகல்களில் ஏறக்குறைய 90 சதம் நவகண்டங்கள் கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள இந்தப் பெண்ணேஸவர மடத்திலேயே இருப்பதாக திரு.சுகவனம் முருகன் குறிப்பிடுகின்றார். இங்கு காணப்படும் நடுகல்கள் 12ம் 13ம் நூற்றாண்டைச் சார்ந்தவை.

இந்தப் பதிவில் இந்தச் சிரமறுத்துப் பலியிடும் வழக்கம் பற்றி விளக்கிக் கூறுகின்றார் திரு.சுகவனம் முருகன். கேட்டுப் பாருங்கள்.

பதிவு 1


யாழ் வாசிக்கும் விறலியரைக் காட்டும் ஒரு அபூர்வமான சிற்பம் இது. இது சோழர்காலச் சிற்பம். பராமரிக்கப்பட வேண்டிய இவ்வகைச் சிற்பங்கள் சிமெண்ட் பூசப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதைக் காணும் போது நம்மால் பதறாமல் இருக்க முடியாது.


இதே போல உடன் கட்டை ஏறுவதை விவரிக்கும் ஒரு சதிக்கல் ஒன்றும் இருந்திருக்கின்றது. இந்த சதிக்கல் அருகில் உள்ள சோமேஸ்வரர் கோயிலில் இருக்கின்றது. உடன் கட்டை ஏறும் பெண்ணை கும்ப மரியாதையுடன் அழைத்து வருவது போன்றும் பின்னர் அப்பெண் தீயில் இறங்கி தன்னை மாய்த்துக் கொள்வது போன்றும் இந்த சதிக்கல் அமைந்துள்ளது என்கின்றார் திரு.சுகவனம் முருகன்.

பதிவு 2


ஒரு வீரன் தனது தலைமுடியை கையால் பிடித்துக் கொண்டு வலது கையில் ஒரு வாளை வைத்திருப்பது போன்று அமைந்த நடுகல் சிற்பம். வீரனின் முகத்தில் கவலையோ பயமோ அன்றி வீரம் தெரியும் வகையிலேயே இந்தச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

நடுகல்கள், பள்ளிப் படை கோயில்கள் பற்றிய ஒரு விளக்கம் அளிக்கின்றார் திரு.சுகவனம் முருகன்

பதிவு 3

மேலும் படங்களைக் காண இங்கே செல்க!

அன்புடன்
சுபா

களப்பிரர் காலம் - ஆய்வுத் தகவல்கள் - 2

பதிவு 3
வளமான சேர சோழ பண்டியர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எப்படி திடீரென்று களப்பிரர்கள் வந்து ஆட்சியைக் கைப்பற்ற முடியும்? இதற்கு ஏதேனும் சமூகத் தேவை என்பதன் அடிப்படையில் காரணங்கள் உள்ளனவா? எப்படி கர்நாடகத்திலிருந்து இங்கு வந்து சேர்ந்த களப்பிரர்களால் இங்கே ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது? இதற்கு சமூகத்தின் எத்தகையோரிடமிருந்து ஆதரவு கிடைத்திருக்கலாம். என்பது பற்றி இந்த ஒலிப்பதிவு நோக்குகின்றது.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசனின் பண்புகளையும் இப்பதிவு நோக்குகின்றது. தொல்காப்பியம் காட்டும் சமூக வாழ்வியல் தேவை சார்ந்த கடவுள் கொள்கையும் அலசப்படுகின்றது.

சங்ககால மன்னர்களுக்கு சமூகத்தில் இருந்த ஆதரவு நீங்கி களப்பிர மன்னர்களுக்கு சமூகத்தில் எப்படி ஆதரவு பெறுகியதோ அதே போல பின்னர் களப்பிரர்களை நீக்கி ஆட்சி மாற்றம் கொண்டு வருவதிலும் சமூகத்தின் பங்கு இருந்திருக்கின்றது. எவ்வகை சமூகத் தேவை இம்மாற்றங்களுக்கு பின்னனியாக இருந்தது? வைதீக, அருகத மதங்களின் நிலை - இம்மாற்றங்களில் இவற்றின் பங்கு ஆகியவற்றை சுவாரசியமான பார்வையில் இச்செய்திகளை மிகச் சரளமாக விளக்குகின்றார் டாக்டர்.பத்மாவதி.

அன்புடன்
சுபா

குன்றக்குடியில் அமைந்துள்ள மடங்கள்

வழங்குபவர்: டாக்டர்.வள்ளி
பதிவைக் கேட்க

மாளிகை போன்று அமைந்திருக்கும் இவ்வீடு ஒரு மடம். மடத்தின் ஒரு புறத்தில் எந்த ஊராரின் மடம் என்ற பெயரும் பொதுவாகவே இவ்வகை மடங்களில் பொறிக்கப்பட்டிருக்கும். இவை சத்திரம் போன்றவை. முக்கிய பண்டிகை விழாக்களான மாத கார்த்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம் போன்ற நாட்களில் இங்கே வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த படத்தில் உள்ள இம்மடம் அழகாபுரி என்ற ஊரைச் சேர்ந்தவர்களின் மடம். மடத்தின் வாசலில் பொறிக்கப்பட்டுள்ள பெயரைக் காணலாம்.

மற்ற நாட்களில் அவரவர் ஊர்களுக்கு திரும்பி விடுவார்கள். ஜாதி வேறுபாடுகள் இன்றி இங்கு சமபந்தி போஜனம் வழங்கப்படும். இங்கு அமைந்துள்ள குன்றக்குடி கோயிலை மையமாக வைத்தே நகரத்தார் சமூகத்தினர் இருக்கின்றனர். கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியைச் சுற்றிலும் பல மடங்கள் அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊரைச் சார்ந்தவர்களின் மடங்கள். விஷேஷ நாட்களில் அவ்வூர் நகரத்தார்கள் இங்கு வந்து அவரவர் மடங்களில் தங்கிக் கொள்வதும் இங்கே அன்னதானம் வழங்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகின்றது. விஷேஷம் முடிந்த பிறகு அவரவர் ஊர்களுக்கு திரும்பி விடுகின்றனர். மீண்டும் விஷேஷம் வரும் போது இம்மடங்கள் திருவிழா கோலம் பூண்டு காட்சியளிக்கும்.



மேலும் படங்களைக் காண இங்கே செல்க.

நகரத்தாரின் கடல் கடந்த பயணங்கள்

வணக்கம்.

பொதுவாக நகரத்தார் என்ற வழக்கு செட்டியார் சமூகத்தினரைக் குறிக்கும். நகரத்தார் சமூக மக்கள், அவர்கள் வாழ்க்கை முறை, திருமண முறைகள், கடல் கடந்து பயணித்து பல கிழக்காசிய நாடுகளில் அவர்கள் காலோச்சிய வரலாறு ஆகியவற்றை நாம் தெரிந்து கொள்வதும் தமிழக வரலாற்றை ஆய்வதின் ஒரு பகுதியாகவே அமையும். 19ம் நூற்றாண்டு மட்டுமன்றி 15ம் நூற்றாண்டில் மலாயா தீபகற்பம், ஜாவா தீவு, தாய்லாந்து எனப பல நாடுகளுக்குச் சென்று வியாபரம் செய்ததோடு மட்டுமல்லாது தாங்கள் சென்ற நாடுகளில் தங்கி தமிழ் வம்சாவளியினர் இன்றும் பல கிழக்காசிய நாடுகளில் வாழ்வதற்கு அடிப்படையை அமைத்துக் கொடுத்தவர்களாக இச்சமூகத்தினர் இருக்கின்றனர்.

நகரத்தார் சமூகம் பற்றி ஆய்வு செய்து அதனை ஒரு நூலாக வெளியிட்டிருப்பவர் டாக்டர்வள்ளி அவர்கள். இவர் நகரத்தார் சமூகத்தைச் சார்ந்த ஒருவர், பிள்ளையார்பட்டி கோயில் வகையைச் சேர்ந்தவர். இவர்கள் குடும்பத்தினரும் இப்பிள்ளையார்பட்டி கோயிலின் அறங்காவலர்கள் குழுவில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இவரிடம் நகரத்தார் சமூகம் பற்றிய தகவல்களைக் பகிர்ந்து கொள்ளுமாரு கேட்ட போது..

-நகரத்தார் சமூகம் பாய்கட்டி கப்பல் (பாய்மரக் கப்பல்) மூலமாக கல்கத்தா சென்று -
அங்கிருந்து பர்மா மற்ற ஏனைய கிழக்காசிய நாடுகளுக்குச் சென்ற விஷயங்கள்
-விடுதி, சத்திரம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள்
-காசியில் உள்ள நாட்கோட் சத்திரம் இன்றைக்கும் பிரபலமாக இருக்கும் ஒரு நாட்டுக் கோட்டைச்சத்திரம் என்னும் தகவல்
-கல்கத்தா காசி தொடர்புகள்
-அலகாபாத் கயா, பம்பாய் போன்ற இடங்களில் நகரத்தார் பயணங்கள்
-மிளகு நகரத்தார் விற்பனைக்காகக் கொண்டு சென்ற பொருட்களில் முக்கிய அங்கம் வகித்த தகவல்கள்
-பர்மாவில் ஐராவதி நதிக்கரையில் இங்கிருந்து கொண்டு சென்ற பணியாட்களைக் கொண்டு அங்கே நெல் பயிரிடுதலில் ஈடுபட்ட செய்திகள்
-லேவாதேவி எனப்படும் கொடுக்கல் வாங்கல் பழக்கம் உருவான தகவல்
-பர்மா அரிசியை பயிரிட்டு ஐரோப்பா வரை கொண்டு சென்று வியாபாரம் செய்யத் தொடங்கிய பின்னர் நகரத்தார் வளம் பொருந்திய சமூகமாக ஆகிய செய்திகள்
-பர்மா தேக்கு மரங்களை தமிழகத்துக்குக் கொண்டு வந்த செய்திகள்
-மலேசியாவிலும் ரப்பர் செம்பனை போன்ற வளம் தரும் பயிர் தொழிலில் ஈடுபட்டு செல்வந்தர்களாக வளர்ந்த செய்திகள்
-தங்கள் வருமானத்தில் ஒரு பங்கினை தர்ம கணக்கு என்று கொடுக்கும் பழக்கம்
தர்ம கணக்கின் வழி சேகரித்த வருமானத்தில் பல திருக்கோயில் பணிகளில் நகரத்தார் சமூகத்தினர் ஈடுபட்ட செய்திகள்
-1850 வாக்கிலேயே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஆலய திருப்பணி நிகழ்த்திய செய்திகள், இதுபோல பல ஆலயங்களின் திருப்பணிகளில் ஈடுபட்ட செய்திகள்..
-நகரத்தார் ஆலயத் திருப்பணிகள் மட்டுமன்றி சமூகத் தேவைகளுக்கும் தங்கள் வருமானத்தில் சில பகுதியை ஒதுக்கி சேவை செய்திருக்கின்றனர், 1947ல் அழகப்பா செட்டியார் போட்ட சாலை தான் ரயில்வே ஸ்டேஷன் சாலை. சாலை கட்டிய பணிகள் கல்வெட்டுக்கலில் பொறித்து வைத்திருப்பதால் இப்பணிகள் பற்றிய தகவல்கள் சான்றுகளாக அமைந்திருக்கின்றன என்பன..
-மலாயா, பர்மா போன்ற நாடுகளில் உண்டியல் (On Demand Transaction) முறையை புழக்கத்திற்கு கொண்டு வந்தவர்கள் நகரத்தார்கள். இது பேச்சு வழக்கில் அண்டிமண்டு ஆவணம் என வழங்கப்படும் செய்திகள்..
-நகரத்தார் தங்கள் வீட்டில் மிகச் சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள்: ஆனால் கோயில் திருப்பணிகள் என்று வரும் போது தயங்காமல் திருப்பணிக்காக பணத்தை வழங்கும் தன்மையுடைவர்கள் என்னும் செய்திகள்
-நகரத்தார்கள் ஒன்பது கோயில் வகைகளுக்குள் அடங்குவர்: திருமண பந்தம் என்று வரும் போது ஒரு கோயிலைச் சேர்ந்தர்கள் மற்ற கோயிலைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்வதே முறையாக கருதப்படுவதும் ஒரு கோயிலைச் சேர்ந்தவர்களுக்குள் திருமணம் செய்வது தடை செய்யப்படும் என்ற செய்திகள்
-குழந்தைகள் தத்தெடுத்தல் எனும் போது நகரத்தார் சமூகத்தில் ஒரே கோயிலைச் சேர்ந்தவர்களையே தத்தெடுத்துக் கொள்வார்கள் எனும் செய்திகள்..

இப்படி பல சுவாரசியமான தகவல்களைச் சாதாரண செட்டி நாட்டுப் பேச்சுத் தமிழில் வழங்கியிருக்கின்றார்.

காரைக்குடி மையத்திலிருந்து பிள்ளயார்பட்டி செல்லும் வரை காரிலேயே இந்தப் பேட்டியை பதிவு செய்தேன். சாலை இறைச்சல் சத்தம் கொஞ்சம் பதிவை பாதித்திருக்கின்றது. ஆனாலும் தெளிவான பதிவு. இந்த 17 நிமிடப் பதிவில் பல செய்திகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

நண்பர்களே, கேட்டு உங்கள் கருத்துக்களையும் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதிவு

டாக்டர்.கண்ணன், பாலு, டாக்டர்.காளைராசன், டாக்டர்.வள்ளி





டாக்டர்.கண்ணன், டாக்டர்.வள்ளி, சுபா


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

களப்பிரர் காலம் - ஆய்வுத் தகவல்கள்

நண்பர்களே,

இம்மாத மண்ணின் குரலை தமிழக வரலாற்றுப் பதிவு ஒன்றுடன் தொடங்குவதில் மகிழ்கிறேன். அண்மையில் டாக்டர் பத்மாவதி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்த போது அவரது தற்போதைய ஆய்வாக அமைந்திருக்கும் களப்பிரர்கள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டோம். இவரது ஆய்வு முழுமை பெற்று புத்தக வடிவில் வெளியிடப்பட உள்ளது. இந்த நூல் வெளியீடு காண்பதற்கு முன்னரே அவருடன் இந்த ஆய்வு குறித்த தகவலை நமது மண்ணின் குரல் பதிவுக்காக ஒலிப்பதிவு செய்து வந்தேன். அந்த ஒலிப்பதிவின் இரண்டு பகுதிகள் இந்த மாத வெளியீட்டில் இடம் பெறுகின்றன. இதன் தொடர்ச்சி அடுத்த மாதமும் தொடரும்.




பகுதி 1
களப்பிரர் காலம் என்பதை நிர்ணயிப்பது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கி.பி.3 முதல் கி.பி 6 வரை களப்பிரர்கள் ஆட்சி தமிழ் மண்ணில் இருந்தது என்பதை சற்று உறுதியாகக் கூறலாம். களப்பிரர்கள் எங்கிருந்து வந்து இங்கே ஆட்சி செய்தார்கள் என்பதற்கு சான்றுகள் மிக மிகக் குறைவாக இருந்ததாலும் இந்தக் கால கட்டத்தை நிர்ணயிப்பதில் உதவுவதாக அமைவது 1940ல் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு கிடைத்த வேள்விக் குடி செப்பேடு. இந்தச் செப்பேட்டில் தான் களப்பரர் எனப்படுபவர்கள் தமிழ் மண்ணில் அச்சமயம் ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர்கள் பலரை துரத்தி விட்டு ஆட்சி செய்யத் தொடங்கினர் என்ற செய்திகள் கிடைக்கத் தொடங்கின.

பெரிய புராணத்தில் வருகின்ற சில நாயன்மார்கள் புராணங்களில் உள்ள செய்திகள், யாப்பெருங்கல விருத்தி போன்றவை களப்பிர மன்னன் அச்சுத விக்கந்தன் என்பவன் பாண்டி நாட்டை ஆண்டு வந்தான் என்பதை குறிக்கின்றன. இதுவரை கிடைத்திருக்கின்ற சில தனிப்பாடல்களிலும், பாலி மொழி இலக்கியங்கள் சிலவற்றிலும் கூட இக்கருத்து தொடர்பான தகவல்கள் கிடைக்கின்றன. சில இடங்களில் கிடைத்த 3ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் சிலவற்றிலும் சில தகவல்கள் களப்பிரர் பற்றிய சான்றுகளைக் கூறுவதாக அமைந்திருந்தாலும் பூலாங்குறிச்சியில் கிடைத்த ஒரு கல்வெட்டு மிகத் தெளிவான சான்றுகளைக் கொண்டிருக்கின்றது என்று கூறலாம்.

இவை மட்டுமன்றி களப்பிரர்கள் எங்கிருந்து வந்தனர். சில மன்னர்களின் பெயர் என பல்வேறு தகவல்களை விளக்குகின்றார் டாக்டர் பத்மாவதி.

பகுதி 2
பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கள ஆய்வில் பௌத்த விகாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்பான ஆய்வுகள் களப்பிரர் இப்பகுதியில் ஆட்சி செய்தமயைக் குறிப்பனவாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் தஞ்சாவூர் மாவட்டம் முழுதும் களப்பிரர் ஆட்சி இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. மதுரையில் பல உறுதியான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இன்றைய கடலூர் என்று குறிப்பிடப்படும் பாடலிபுரம் பகுதியிலும் பல சமண கடிகைகள் இருந்திருக்கின்றன. காஞ்சிபுரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகள் இருந்திருக்கின்றன. களப்பிரர்கள் பௌத்தத்தையே பின்பற்றியவர்களாக இருந்திருந்திருக்கின்றனர். கடல் கடந்து சென்று வணிகம் செய்தவர்கள் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததால் பல ஆசிய நாடுகளில் பௌத்தம் பரவியது. இத்தகவல்கள் மட்டுமன்றி இதுவரை கிடைத்திருக்ககின்ற சான்றுகளிலிருந்து நமக்கு அறியக்கிடைக்கும் களப்பிற மன்னர்களின் பெயர்களையும் டாக்டர் பத்மாவதி இப்பகுதியில் குறிப்பிடுகின்றார்.

இப்பதிவுகளைக் காண மண்ணின் குரல் வலைப்பக்கம் செல்க. இதன் முழு தொடர்ச்சியும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கே தொடர்ந்து இணைக்கப்பட்டு வெளியிடப்படும்.

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

காவல் கோட்டம் - சு.வெங்கடேஷ்



பத்தாண்டு கால கள ஆய்வு, நாட்டார் கதைகள், வாய்மொழி மரபு ஆகியவற்றைக் கொண்டு வரலாற்றினைக் கூறும் நாவல்...

மதுரை நகரின், மதுரை அரசின், தெந்தமிழகத்தின் 600 ஆண்டு கால வரலாற்றைக் கூறும் நாவல்...

இவ்வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் 3000க்கும் மேல் விற்பனை கண்ட நாவல்..

மாலிக்கபூர் படையெடுப்பிலிருந்து தொடங்கி மக்கள் வரலாற்றைக் கதையாக பின்னியிருக்கும் 1048 பக்கங்கள் கொண்ட 2011ம் ஆண்டின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற காவல் கோட்டம் நாவலின் ஆசிரியர் சு.வெங்கடேஷ்.. அவரை சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்த போது தன் நாவலைப் பற்றி நம்முடன் தகவல் பகிர்ந்து கொள்கின்றார்.

பதிவினைக் கேட்க..!
ஒலிப்பதிவு: சுபா .

பாரதி மகா கவியா அல்லது தேசிய கவியா - நரசய்யா


சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியின் பதிவு இது.

பதிவு இங்கே!

Click here to view the MS Powerpoint presentation:
Part 1
Part 2


Summary of the talk:

In 1935 there was a wordy duel between two literary groups – one that of Manikkodi and the other that of Kalki Krishnamurthi of Anandavikatan. It all started with V Ramaswami Iyengar then editor of Veerakesari in Colombo and former editor of Manikodi, declaring that Subramania Bharati as a Great Poet, whereas the Kalki group felt that Bharati was a good national poet and not a Great poet.

The talk focuses on the letters and essays written by both the groups declaring their views. However, it must be noted that the debate, while generating a lot of heat and light, did not create any ill-feelings among the individuals. In fact, they all remained friends and respected each other!

The speaker, K R A Narasiah, biographer of Chitti Sundararajan – one of the important participants of the debate – has the original letters written by some of the stalwarts of that day and is now presenting the lot available with him to show the level of the debate and the important Dramatis Personae in their learned correspondence.

Profile:

Mr. K. R. A. Narasiah was born in Berhampur, Orissa, into a Telugu family. After completing his early education in Tamilnadu, he became a marine engineer and sailed in the naval vessels for ten years and, later, for three years in the merchant navy. During his naval time he was deputed to the Harland & Wolff Shipyard in Belfast, North Ireland, for standing by the construction of I N S Vikrant, Navy’s first aircraft carrier and took over as its Fight Deck Chief. He joined the port of Visakhapatnam in 1965 and retired in 1991 as its Chief Mechanical Engineer. While in Port Service his services were requisitioned by the Navy during the Bangladesh liberation war. Later he was invited by the World Bank as a consultant for the emergency rehabilitation in Cambodia. He was also a consultant to the Asian Development Bank.

Mr. Narasiah took to writing early in his life and has published more than 100 short stories in Tamil that have come out in four volumes. Four of his works have been given Tamil Nadu State Literary Awards. He writes in English as well. He is a regular reviewer of books for The Hindu.

பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயில்

பிள்ளையார்பட்டி விநாயகர் பற்றியும் நகரத்தார் சமூக வரலாற்று பற்றியும் முனைவர் வள்ளி வழங்கும் விளக்கம்: ஒலிப்பதிவு - பகுதி 1

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி. இந்த சிற்றூர் காரைக்குடியிலிருந்து 12 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. பிள்ளையார்பட்டி என்னும் இச்சிற்றூரின் சிறப்புக்குக் காரணம் பிள்ளையார்பட்டி கோயில்.



இரண்டு பெரிய ராஜ கோபுரங்களுடன் இந்தக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் கோபுரங்களைத் தரிசித்தவாறு வரும் பக்தர்களை முதலில் வரவேற்பது கோயில் திருக்குளம். கோயிலின் வலது புறத்தில் நகரத்தார் விடுதி அமைந்திருக்கின்றது. இங்கே தினம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தப் பிள்ளையார் பட்டி கோயிலில் அமைந்துள்ள பிள்ளையாருக்கான குடைவரைக் கோயில் முற்காலப் பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தது. மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட இக்குடைவரைக் கோயில் காண்போரை வியக்கவைக்கும் தன்மைக் கொண்டது. முன்னர் சிவனை ப்ரதானமாக வைத்துக் கட்டப்பட்ட கோயிலாக இருந்து பின்னர் பிள்ளையார் வழிபாடு பிரசித்தி பெற்று வளர்ந்திருக்கின்றது. இக்குடைவரைக் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பிள்ளையார் திரூருவச் சிலை புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. ஆறு அடி உயரம் கொண்டது இப்புடைப்புச் சிற்பம்.
படம்: நன்றி: http://www.visvacomplex.com/Valampuri_2.html

முன்னர் பிள்ளையார்பட்டியைச் சுற்றியுள்ள ஊரின் பெயர் மருதங்குடி என அழைக்கப்பட்டுள்ளது. 12ம் நூற்றாண்டு வாக்கில் பிற்கால பாண்டியர்களிடமிருந்து இங்கிருந்த நகரத்தார் சமூகத்தினர் இந்த மருதங்குடி என்னும் ஊரை விலைக்கு வாங்கியிருக்கின்றனர். இச்செய்தியைக் குறிப்பிடும் சான்றாக ஒரு கல்வெட்டு இந்தக் கோயிலிலேயே செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. குலசேகர பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனிடமிருந்து நகரத்தார் சமூகத்தினர் இந்தகரை வாங்கி இங்கிருக்கும் கோயிலையும் தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டுள்ளனர்.

பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில் அமைந்துள்ள பிள்ளையார் புடைப்புச் சிற்பம் மிகப் பழமையான ஒரு பிள்ளையார் வடிவம் எனக் கொள்ளலாம். 5ம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டச் சிலையாக இருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றார் முனைவர்.வள்ளி. இக்குடைவரைக் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு இக்கோயில் 5ம் நூற்றாண்டினதாக இருக்கும் சாத்தியத்தை உறுதி செய்வதாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பிள்ளையார் ஆலயங்களிலேயே மிகப்பழமையான பிள்ளையார் சிலையாக இந்தப் பிள்ளையார்பட்டி பிள்ளையார் சிலையைக் குறிப்பிடலாம்.

இந்த பிள்ளையார் சிலை இரண்டு கைகளுடன் இருப்பது போலவே அமைக்கப்பட்டுள்ளது. மிகப் பிரமாணடமான சிலை. குகையைக் குடைந்து கற்பாறைகளை வடித்து பிள்ளையார் உருவச் சிலையை வடித்திருக்கின்றனர் சிற்பிகள். இப்பிள்ளையார் கற்பக விநாயகர் என அழைக்கப்படுகின்றார்.







கோயில் தல விருட்சம் மருதமரம்





அன்புடன்



சுபா

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் - மக்கள் சிந்தனை இயக்கம்



சைவமும் தமிழும் வளர்க்கும் பணியோடு கல்விப்பணி, சமூகப்பணி, கிராமப்புற மேம்பாட்டுப் பணி, என்பதோடு கிராம மக்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சிகளையும் செய்து வருகின்றது குன்றக்குடி சைவத் திருமடம். அத்துடன் மக்கள் சிந்தனை, அறிக அறிவியல் என்ற இரண்டு தமிழ் மாத இதழ்களையும் வெளியிட்டு வருகின்றது. மக்கள் சிந்தனை, சமய நல்லினக்கம், அறிவியல் கல்விச் செய்திகள் போன்றவற்றையும் இவ்விதழ்களின் வழி மக்களிடம் கொண்டு சேர்க்கின்றது இம்மடம்.



மக்கள் கல்வி நிலையத்தோடு, வேளாண் அறிவியல் ஆய்வு நிலையம் ஒன்றை குன்றக்குடியில் மையமாக அமைத்து விவசாயம் கால்நடை ஆகியவற்றிற்காண ஆய்வுக் கூடமாக இந்தப் பகுதி மக்களின் தேவைக்காக ஏற்படுத்தி நடத்தி வருகின்றது. பத்து ஆய்வுப் பேராசிரியர்களைக் கொண்டு இந்த வேளாண் ஆய்வு மையம் இயங்கி வருகின்றது். அதோடு குன்றக்குடியிலேயே தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றினை அமைத்து இங்கு சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கு தொழிற்பயிற்சியும் வழங்கி வருகின்றது குன்றக்குடி சைவத் திருமடம்.

பெண்களின் கல்வி மேம்பாட்டை மனதில் கொண்டு சாதாரண அடித்தளத்து பெண்களும் கல்வியில் உயர கல்வியியல் கல்லூரி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வருகின்றது இத்திருமடம். பாபனாசத்திலும் மகளிருக்கான தமிழ் மற்றும் நவீன தொழில் நுட்பக்கல்லூரி ஒன்று இயங்கி வருகின்றது. இதன் வழி வறுமையில் வாடும் பெண்கள் கல்வி பெற்று தங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்ள இவ்வமைப்பு உதவி வருகின்றது.

இது மட்டுமல்ல.. இன்னும் பல சேவைகள். ஆதீனகர்த்தர் பொன்னம்பல சுவாமிகள் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கிய சிறப்பு பேட்டியில் இத்திருமடத்தின் செயல்பாடுகள் பற்றி விவரிக்கின்றார். கேட்டுப் பாருங்களேன்..!

பதிவு 1

முதல் பகுதி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.


த.ம.அ பேட்டிக்காக ஆதீனகர்த்தரைக் காணச் சென்றவர்கள்: முனைவர் வள்ளி, முனைவர்.காளைராசன், முனைவர் நா.கண்ணன், சுபா 

தண்டோரா



தமிழக கிராமங்களில் இன்றும் தகவல் பரிமாற்றத்திற்கு தண்டோரா பயன்படுத்துகின்றனர் என்பதை நேரில் காணும் வாய்ப்பு அமைந்தது. புரிசையில் தெருக்கூத்து பற்றிய பதிவுகளைச் செய்து முடித்து திரும்பும் போது ஊர் மக்களுக்கு ஒரு கோயில் திருவிழா தொடர்பான செய்தி சொல்வதற்காக ஒரு தண்டோராக்காரர் வந்திருந்தார். அவரது தண்டோராவை பதிவு செய்திருக்கிறேன். இங்கே கேட்டுப் பாருங்களேன்!



அன்புடன்

சுபா

பத்துப்பாட்டு முற்றோதல் - பகுதி 1, 2, 3

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் தமிழ் வாசகர்களுக்கு எனது மனம் நிறைந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

இன்றைய நாளை சிறப்பிக்க இரண்டு அங்கங்கள் இடம் பெறுகின்றன. அவை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள பத்துப்பாட்டு முற்றோதல் ஒலிப்பதிவுகள். பாகம்1, 2 , 3 ஆகியவை. (இவை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அனுமதி பெற்று தயாரித்து இங்கு இணைக்கப்படுகின்றது)

அடுத்து இடம் பெறுவது ஒரு பேட்டியின் விழியப்பதிவு (2 பகுதிகள்)

1.பத்துப்பாட்டு முற்றோதல் ( நன்றி: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் )

பாகம் 1
அ. திருமுருகாற்றுப்படை

முற்றோதுபவர்கள்:
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
முனைவர் மார்கரெட் பாஸ்டின்
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்
பேராசிரியர் பிரமிளா குருமூர்த்தி
திரு.டி.கே.எஸ். கலைவாணன்
பேராசிரியர் க.இராம.தீதாலட்சுமி
பேராசிரியர் எஸ்.ஏ.கே.துர்கா

ஆ.பெருநாராற்றுப்படை
முற்றோதுபவர்கள்:
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
முனைவர் மார்கரெட் பாஸ்டின்
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்
பேராசிரியர் பிரமிளா குருமூர்த்தி
திரு.டி.கே.எஸ். கலைவாணன்


பாகம் 2
அ.சிறுபாணாற்றுப்படை

முற்றோதுபவர்கள்:
திரு.டி.கே.எஸ். கலைவாணன்
பேராசிரியர் க.இராம.தீதாலட்சுமி
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
பேராசிரியர் எஸ்.ஏ.கே.துர்கா
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்
முனைவர் மார்கரெட் பாஸ்டின்

ஆ.பெறும்பாணாற்றுப்படை
முற்றோதுபவர்கள்:
பேராசிரியர் பிரமிளா குருமூர்த்தி
திரு.டி.கே.எஸ். கலைவாணன்
பேராசிரியர் க.இராம.தீதாலட்சுமி
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
முனைவர் மார்கரெட் பாஸ்டின்
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்
பேராசிரியர் எஸ்.ஏ.கே.துர்கா


பாகம் 3
அ.முல்லைப்பாட்டு

முற்றோதுபவர்கள்:
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
பேராசிரியர் எஸ்.ஏ.கே.துர்கா
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்


ஆ.மதுரைக்காஞ்சி
முற்றோதுபவர்கள்:
பேராசிரியர் பிரமிளா குருமூர்த்தி
திரு.டி.கே.எஸ். கலைவாணன்
பேராசிரியர் எஸ்.ஏ.கே.துர்கா
பேராசிரியர் மா.வயித்தியலிங்கன்
பேராசிரியர் அரிமளம் சு.பத்மநாபன்
திரு.மா.கோடிலிங்கம்

அன்புடன்
சுபா

சாஸ்தா சரித்திரக் கும்மி

வணக்கம் மின்தமிழ் நண்பர்களே.

தமிழ் மரபு அறக்கட்டளையின் இம்மாத மண்ணின் குரல் இன்று மலர்கின்றது.!

இம்மாதப் பதிவைச் சிறப்பிப்பது சாஸ்தா சரித்திரக் கும்மி.

இந்த நூலில் 20 பாகங்கள் உள்ளன. இவற்றை முழுமையாக கிராமிய கும்மி இசை வடிவத்தில் நமக்காக பாடி பதிவு செய்து அனுப்பியிருக்கின்றார் திருநெல்வேலியைச் சேர்ந்த திருமதி.ஜெயலட்சுமி அவர்கள்.

இவர்களுக்கும் இவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜடாயு அவர்களுக்கும் நம் நன்றி.
பதிவைக் கேட்க :
படிவு 1
பதிவு 2
பதிவு 3

இவ்வொலிப்பதிவுகளைக் கேட்டு அவை தொடர்பான உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

ஐயனார் வழிபாடு




தமிழகமெங்குமன்றி தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கூட ஐயனார் வழிபாடு என்பது சிறப்புற்று வழக்கில் இருந்து வருகின்றது. இத் தெய்வத்தை பற்றி விளக்கும் ஒரு பேட்டி ஒலிப்பதிவே இன்றைய வெளியீட்டில் முதல் அங்கமாக வெளிவருகின்றது.

மலை வளம், ஆற்று வளம் நிறைந்த இடங்களிலும் கிராமப்புறங்களிலும் இத்தெய்வ வழிபாடு மிகப் பரவலாக இருந்து வருகின்றது. வீர வழிபாட்டை பிரதிபலிப்பதாகவும் ஐயனார் வழிபாடு வழக்கில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் வீரர்கள் பற்றிய செய்திகள் உள்ளன். ஐயனார் ஐயனாரப்பன் என்றும் அழைக்கப்படுவது வழக்கில் உள்ளது. கல்வெட்டுக்களில் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அமைந்த ஆலயங்களில் ஐயனார் வழிபாடு சாஸ்தா என்று குறிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் சாஸ்தா ஆலயம் இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஒன்று.

பண்டைய காலத்தில் மக்கள் வழிபாட்டு முறையில் முக்கிய இடம் பெற்றிருந்த தேவேந்திரன் வழிபாடு ஐயனார் வழிபாடாக மாற்றம் கொண்டதா? ஐயனாரின் தோற்றம் என்ன? இவற்றையெல்லாம் விவரிக்கின்றார் தமிழ் நாடு தொல்லியல் துறை அறிஞர் டாக்டர்.பத்மாவதி.

ஐயனார் வழிபாடு!


பதிவு: மார்ச் 2011
பதிவு செய்தவர்: சுபா 

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness